எழுத்து : சபரி
தன்னுடைய ஒன்பதாம் வயதில் உடல் கொழுத்த ரோமம் நிறைந்த பக்கத்து தெரு ஜெர்மன் ஷெப்பர்ட் சங்கிலியை மீறி இயலரசனை(இயல்) தன் வீடு வரை துறத்தி வாசலில் வைத்து கணுக்காலை பதம் பார்த்த நாளில் இருந்து நாய்கள் மீது அளவில்லா வெறுப்பு. இயலுக்கு செல்ல பிராணிகள் என்றாலே ஒரு வித அலர்ஜி ஆகிவிட்டது.
தான் இருந்த உயர் நடுநிலை வர்க்க குடியிருப்பு பகுதியில் செல்ல பிராணி வளர்ப்பது ஒரு கௌரவம், இயலின் தாய் ஏதாவது ஒரு செல்ல பிராணியை வளர்த்தாக வேண்டும் அது இயலையும் பாதிக்க கூடாதென்று இரு மீன் தொட்டிகளை வாங்கி ஒன்றில் தங்கமீன்கள் மற்றோன்றில் சியாம் சண்டை மீன் (ஃபைட்டர் ) . கருப்பு தலையுடன் நீல நிற உடல் முன் குவிந்த வாய் , அகன்று நீண்ட மேல் துடுப்பு , சீன விசிறி முழுதாய் விரிந்தார் போல் பின் துடுப்புகள் , மேல் துடுப்பின் இரு மடங்கு நீண்ட கீழ் துடுப்பு, அனைத்து துடுப்புகளும் அடர் பழுப்பு நிறம்.
பிடிக்காத விஷயங்கள் போக போக பழகிய பின் பிடித்து போவது போல், நான் கணவர்களை பற்றி சொல்லவில்லை. இயலின் இயல்பு மாறி கொஞ்சம் கொஞ்சமாய் ஃபைட்டர் மீனுடன் பழக ஆரம்பித்தான்.
தினம் இரண்டு வேலை உணவு , வாரம் ஒரு முறை தொட்டி கழுவுவது , தொட்டியை பல விதமாக அலங்கரிப்பது என்று நாளில் பெரும் பங்கு மீனுடன் கழிந்தது. ஒரு நாள் ஆங்கில படம் பார்த்து அதில் வரும் கதாபாத்திரம் பிடித்து மீனின் பெயரை ஜாக் ஸ்பேர்ரோவ் சுருக்கமாக ஜாக் என்று அழைத்து வந்தான் இயல்.
மீன்கள் அறிவு மிகுந்தவை , நீங்கள் அன்றாடம் பழகினால் உங்கள் அதிர்வுகளை உணர்ந்துகொள்ளும். இயலின் கவனம் முழுவதும் ஜாக்கின் மேல் இருந்தது. ஒரு காலத்தில் திருப்பதி செல்வது அவ்வளவு எளிதில்லை , குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும், ஜாக் ஸ்பர்ரோவை விட்டுவிட்டு செல்வதில் பெரும் வருத்தம் ஆனால் அந்த வயதில் என்ன உரிமை இருக்கும். ஜாக் ஸ்பர்ரோவை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு திருப்பதி சென்றனர்.
எப்படி நடந்தது என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியவில்லை ஆனால் எப்படியோ நடந்துவிட்டது ஜாக் ஸ்பர்ரோவ் காலமானது. மீன் தொட்டியில் ஏதோ விரிசல் சொட்டு சொட்டாக நீர் தொட்டியிலிருந்து கசிந்தது ஜாக் ஸ்பர்ரோவின் உயிரும் தான். அன்றில் இருந்து செல்ல பிராணிகளிடம் இருந்து விலகி இருந்தான் இயல்.
யார் செல்ல பிராணியை பற்றி பேசினாலும் பிடிக்காது, செல்ல பிராணிகள் இருக்கும் வீட்டிற்கும் போகமாட்டான்.
காலம் யாரை விட்டது, செல்ல பிராணிகள் என்றால் உயிராய் இருக்கும் பெண்ணை மணந்து கொண்டான். என்னதான் இயல் எப்பொழுதும் இதே எண்ணமாக இல்லாவிடினும் அவ்வப்போது செல்ல பிராணிகளின் மேல் உள்ள கசப்பு வந்து வந்து போகும். இயல் வீட்டில் வேலைபார்க்கும் அக்காவின் பூனை நாய் வீட்டு பக்கம் வரும் உணவு வேலைக்கு மட்டும் தான் இருந்தாலும் இயலை உறுத்திக்கொண்டே இருந்தது.
‘உமா அக்கா, இன்னொரு தடவ உங்க பூனை இங்க வந்தது , அதன் அதோட கடைசி நாளா இருக்கும்’ ஆயிரமாவது முறையாக சொன்னான்.
‘என்ன பா இப்படி சொல்லிட்டீங்க !’ சலிக்காமல் ஆயிரமாவது முறை பதில் அளித்தார் உமா அக்கா.
பல சமயங்களில் இயலின் செல்ல பிராணிகளின் மேல் இருக்கும் விருப்பமற்றத்தன்மை தவறாய் இரக்கமற்றவனாக தெரியும்.
புயலுக்கு மழைக்கும் சென்னை பெயர் போன ஊர் இல்லை என்றாலும் வரும்போதெல்லாம் படுத்திவிடும். அன்றும் வலுவான மழை – பேரோசை, பெரும் மழை, குளிர் காற்று மற்றும் டிசம்பர் மாதம். ஊரே மூன்று நாட்களுக்கு முன் தேவையானதை வாங்கிக்கொண்டு வீட்டில் அடங்கியது. மின்சாரம் நாள் முழுவதும் இல்லை.
இரண்டு வாரங்களாக தொல்லை செய்து வந்த எலி வீட்டில் ஆங்காங்கே அசுத்தம் செய்து வந்தது அந்த கடுப்பில் இருந்தான் இயல். எலி கூண்டு , எலி கேக் என எதற்கும் பலன் இல்லை. மேலும் தூங்க செல்லும் பொழுது வாசலில் உமா அக்கா வீட்டு நாய் இருந்தது கடுப்பு இரு மடங்காகியது, மனைவியை அழைத்து உமா அக்காவிற்கு மொபைல் அழைப்பு விடுக்க சொன்னான்.
‘இருந்துட்டு போகட்டுமே ‘ மனைவி சொல்ல
‘அதெல்லாம் முடியாது ‘ இயல் காட்டமானான்.
‘மணி பதினொன்னு ஆகுது டா , தூங்கி இருப்பாங்க!’ மனைவி சொன்னாள்.
‘அதுக்கு நா என்ன பண்ண முடியும் , அத பாரு ஓடம்பெல்லாம் சொறி , இங்கயே செத்தா ?’ நாய் ரோமம் இல்லா உடம்பில் குளிருக்கு நடுங்கியதை கண்டதில் இயலுக்கு அந்த சந்தேகம் வந்ததில் தவறில்லை
இயலின் மனைவி, உமா அக்காவிற்கு அழைத்தாள் , உமா அக்கா இப்பொழுது வரமுடியாது மழையா இருக்கு காலையில் வந்து நாயை விரட்டி தானே கழுவி விடுவதாக சொன்னாள். அரைகுறை மனதோடு கோவத்தில் வீட்டிற்குள் சென்றான் இயல்.
பத்து நிமிடம் கழித்து இயல் வீட்டில் இருந்த பழைய கோணி ஒன்றை எடுத்து வந்து நாயின் மேல் போடுவதற்கு முன்பு ஒரு முறை விரட்டி பார்த்தான் அது நகர்வதாக தெரியவில்லை அதன் முகமும் பாவமாய் இருந்தது (நாய்க்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள தெரியும் ). குளிரில் அதன் உடல் ஆடியது. கோணியை அதன் மேல் போட்டுவிட்டு வந்தான். மனைவி முறைத்தாள்.
கொஞ்ச நேரத்தில் நாய் உடலை உலுக்கும் சத்தம் கேட்டது , மனைவி சிரித்தாள் ‘கோணிய தள்ளி விட்டுடுச்சி’ என்றாள்.
ஆனால் நாயின் உடல் நடுங்கியதை அவனால் மறக்கமுடியவில்லை. இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கினான்.
காலையில் மனைவி ‘நீ போட்ட கோணிய விரிச்சி அது மேல படுத்திருக்கு’ என்றாள், இயல் புன்னகைத்தான்.
***முற்றும் ***
