எழுத்து: அரன்
அன்புள்ள இணையனுக்கு,நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி நானும் இங்கே உன் உருவம் காண காத்திருக்கிறேன். உன் பெருமை கூற சொல்வாயே, வேலன் குடியிருப்பு மானமே அடகுவைக்க இயலா கல்வி தான் என்று. மழலைகள் நலம், படிப்பும் சிறப்பு. திருவிழாக்கு எதிர்நோக்கி இருந்தேன், நீ வருவாயோ என்று. ஏமாற்றம் தான். விடுப்பு இல்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது.
ஏக்கம் தான் முக்கால்வாசி. காதல் கால்வாசி ஆனது போல.அம்மா அப்பா வசைகள் தான் எனக்கு. வீட்டிலே இல்லாமல், அங்கும் இங்கும் அலைகிறாயே, நாளைக்கு சாதி சனத்தில் எவன் உன்ன கேட்டு வருவான்? எப்படி உன்ன நல்லா பாத்துக்குவான்? குத்தல் கேள்விகள், எதிராய் கூரான என் பதில்கள். சிரிக்கிறேன்…. மௌனங்களில் அலையாடுகிறேன்…பணி என்னவோ முதல்வர் அலுவலகத்தில் ஆட்சியர் நிகர் தான். கொஞ்சம் வீட்டாட்சியையும் பாரும். உம்மையே மட்டும் நினைக்காமல், உம் மண்ணையும் எம் மண்ணாய் ரசிக்கும்… – உன் அன்புக்குரிய பொன்னி.
——xxxx—-xxxxxx——-
எழிலன், அன்பும் உழைப்பும் அறிவும் தக்க பொருந்திய நவயுக இளைஞன். பொன்னியின் கல்லூரி தோழன், களப்பணி கூட்டாளி, பின்னாள் காதலன். வேலன் குடியிருப்பு போன்ற ஊருக்கு ஒதுங்கிய தெருக்களில் ஓடி, விளையாடி, படித்து வந்தவன்.
‘சிவில் சர்வீஸ் க்கு படிக்கானாமே…. அப்பன் கால் எடுத்து வேலைக்கு போகாம அனக்கம் காட்டாம கெடக்கான்… இவனுக்கு என்ன துரை போல படிப்பு கேக்குது! ‘ சொந்தவூரான்கள் வசவு கொஞ்சம் நஞ்சமில்லை..
நாலு வருடம் தான், தபாலில் அப்பாய்ண்ட்மெண்ட் வந்ததும் கொஞ்சம் அசந்து தான் போனார் ஊரார்.
ஊருக்குள் இருக்கும் மிடுக்கு இளவட்டங்களுக்கு வீட்டில் வெடி தான் இவனைக் காட்டி.
முதல்வர் அலுவலகத்தில் அலுவல்.பொன்னி மனதில் இவன்.. பிறந்த சாதிகள் வேறெனினும், வளரும் சமூகம் ஒன்றே என்று காதல் கொண்டாள். உறுதுணையான பொன்னி தான் எனக்கு மனை என்று எழிலனுக்கும் மனமானது.
—–xxxx—–xxxx—–
எழுதிய கடிதத்தை தபால் பெட்டியில் போட்டு, சனிக்கிழமை பாடமெடுக்க நடந்தாள் பொன்னி.
‘ஏலேய் சிங்காரோன்… உன் அயித்த மவ, பொன்னிக்கு சம்மந்தாரு வர்றாகளா?’
வெத்தலையை குதுப்பிக்கொண்டே கேட்டான் அவன் ஒட்டு கந்தன்.
‘அட கிறுக்காட்டம் பேசிக்கிட்டு, சிங்காரோன் இருக்கப்போ எப்படிங்குற’, மற்றவன் கொம்பு சீவி விட்டான்.
‘அட சிங்காரத்துக்கு வயசு கம்மி பா. பொன்னிக்கு இப்பவே இவன விட எட்டு வயசு சாஸ்தி.’
‘வயசென்ன பா வயசு. அதெல்லாம் கட்டணும் னா கட்டலாம் பா. நீ வேணா பாரு.. சிங்காரம் நல்லா மாப்பிள்ளை மாதிரி வேட்டி சட்டை கட்டிக்கிட்டு, பொன்னி கை பிடிச்சி ஊர் ல நடக்கத்தான் போறான் பாரு. ‘
கிறுக்கு பேச்சுகள் ஓட, ஒரு ஓரமாய் சிங்காரம் கள்ளை குடித்துக்கொண்டும், கொஞ்சம் சுட்ட மீனை கொறித்துக் கொண்டு, ரசித்துக்கொண்டு இருந்தான் மெல்லிய சிரிப்புடன்.
(நெல்வாடைகள் தொடரும்…)
– அரன்.
