களத்துமேடு – அத்தியாயம் 7

எழுத்து: அரன்

சனிக்கிழமை. தோள்பை மாட்டிக்கொண்டு , நடுநெற்றி கரும் பொட்டையும் சரி செய்து கொண்டு கிளம்பினாள் பொன்னி. வழக்கம் போல் அர்ச்சனைகள் தான். அப்பாவுக்கு அன்போடு கட்டுப்பாடு. அம்மாவுக்கு குமட்டுகிறது. வேலன் குடியிருப்பு முதல் தெரு, தரை தொடும் பாதம் தாளமிடும் நேரம் முன்னவே தித்திப்பாய் ஓடி வரும் வாண்டுகள். அள்ளிக்கொஞ்சி அன்பு செலுத்துகிறாள் பொன்னி. 


புவியில் அனைவரும் மனிதர்தாம், மனிதரின் மகிமையெல்லாம் மனம் தான்,  மனம் எல்லாம் பூ மனம் தான், புரியாதோர் உள்ளமெல்லாம் சாக்கடை தான்…
மன்றக் கூடலில் அமரச்செய்து, கொண்டு வந்த புளிப்பு மிட்டாய்களும், அம்மாக்கு தெரியாமல் எடுத்து வந்த அல்வா’வையும் பகிர்ந்துக் கொடுத்தாள் பொன்னி. வாய்ப்பாடு நடத்தினாள். பேச்சு வழக்கு ஆங்கிலம் கொஞ்சம். 


பாரி ஓடி வந்தான். ஏழு வயது சிறுவன். பொன்னிக்கு நெருங்கிய நண்பன். தாயை இழந்த பிள்ளை, அப்பனுக்கு வாக்கப்பட்ட அடுத்த தாரத்தின் தொல்லை வேறு. அவன் நிம்மதியே சனிக்கிழமை பொன்னியுடன் தான். அந்த வாரம் முழுக்க நடந்ததை சொல்வான். ஓணான் பிடித்தது முதல், பொறித்த பரோட்டா விழுங்கியது முதல் எல்லாம். மணி 5 ஆனதும் பிரிய மனமில்லை பாரிக்கு. 
“அக்கா… போவாத! நீ கிளம்புனா நான் அழுவனாக்கும் பாத்துக்க… “
” தங்கமுல… நான் ரவைக்கு முன்ன போனா தானல அடுத்த வாரம் உன்ன பாக்க வர முடியுன். “
பாரிக்கு வருத்தம் தான். பொன்னிக்கும். வீட்டுக்கு கூட்டி போகலாம், சாமி ஆடி விடுவாள் அம்மா. அவளை சமாளிக்கலாம். ஆனால் அது வரை அவள் வாய் பேச்சுக்கு இந்த பிஞ்சி வருந்தனும். எதுக்கு என நினைத்தவள், தன் நெற்றி பொட்டை எடுத்து அவன் கன்னத்தில் வைத்தாள்.
” அடுத்த வாரம் அக்கா வருவன். அது வர, நல்ல புள்ளையா இருக்கணும். இந்த பொட்டுக்குள்ள கேமரா இருக்கு.. நீ தப்பு பண்ணா அக்கா பாத்துருவன் பாத்துக்கோ.. “
பொய் மிரட்டல்கள் தான்.. போகும் போது கொஞ்சம் கீச்சம் காட்டினாள். 
“எக்கா… நா அழல.. உன்ன எம்மாத்துணனே.. ” பற்கள் மின்ன சிரித்தான் பாரி..


——-xxxx——-xxxx——


“ஏம்பா எசக்கி… முத்தரசு மாமா இருக்காகள்ள.. அவுக கடையில சரக்கு சொல்லிருந்தன். ஒரு எட்டு போய், வண்டில ஏத்தி விட்டு அனுப்பிரு லே. ” இசக்கியிடம் சொல்லிக்கொண்டே அவன் சட்டைப்பையில் ரூவாய் தாள்களை அமுக்கினான் செங்காளை. 
” அது மட்டும் இல்லை ல… நம்ம ஊர்க் கார பயலெல்லாம் நம்ம நெல்லுசோத்த திங்கான். பட்டணத்துல இருக்கிற சில வெண்ணெய்ங்க கர்நாடக பொன்னி தான் வேணும் னு கேக்குதுங்களாம்.. மாமா சொன்னாபுல… கொஞ்சம் அந்த விதை நெல்லும் போட்டு கொண்டு வா. அப்படியே இளங்கோ ல சாப்டுக்க ல. “
நண்பனிடம் சொல்லிவிட்டு தன் வண்டியை கிளப்பினான் செங்காளை.
“துரை என்ன அனுப்பி வச்சிட்டு எங்க போறீரு… ” செங்காளை போகும் வழியே வினவினான்… 
பதில் இல்லை..

——xxxx—–xxxx——


செங்காளை ஆற்றில் குளித்து விட்டு வந்து மணி பார்த்தான். 7 ஆகியிருந்தது. திருநெல்வேலி பசார் இல் வாங்கிய நீல சட்டையும், வாசமேற்றும்  அத்தரும் அடித்துக் கொண்டு நடந்தான். 
சாலை விளக்குகளும் இல்லை, சாத்தான் கண்களும் இல்லை.. வாடை குளிர்தான் கொஞ்சம், ஓடை இசை தான் கொஞ்சம். 
நடந்தவன் வந்து நின்றது. பிராங்கோட்டை ரைஸ் மில்… 


( நெல்வாடைகள் தொடரும்)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *