ஹிக்கிகோமோரி

ஹிக்கிகோமோரி

என்னோட வாழ்க்கைல மொத்தம் பேசுனதே நாலு பேறு கூட தான். சாகுற தருவாயில் கூட என் கூட யாரும் இருக்க வேண்டாம். நா இந்த வீட்டை விட்டு வெளிய சென்றதே பத்து முறையை தாண்டாது. என்னோட மிக பெரிய துணையே தனிமை தான். என்னோட அறை எனக்கு தர மன நிம்மதியும் சௌகரியமும் வேறு எங்கும் கிடைக்காது. அறையில் பல நாளிதழ் துணுக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

ஜன்னலின் வழியே ரோட்டை பார்த்துக்கொண்டிருந்தான் அகிஹிக்கோ, அந்த ரோட்டில் ஒரு இளம் பெண் நடந்து வந்தாள், அவளுக்கு ஏதோ ஒரு உள் உணர்வு, யாரோ பார்ப்பது போல. சட்டென தலையை தூக்கி என் வீட்டை பார்த்தாள், அவளின் கண்கள் முதல் மாடியில் இருக்கும் ஜன்னலுக்கு பாய்ந்தது, அதை நான் உணர சில வினாடிகள் ஆனது, அவள் என்னை தான் பார்க்கிறாள், அவளின் பார்வையிலிருந்து விலக மனம் துடித்தது, ஜன்னலில் இருந்து நகர்ந்து அறையின் மத்தியில் வந்து நின்றேன். இது போன்ற உணர்வு முதல் முறை இல்லை ஒவ்வொரு நாளும் இந்த உணர்வு தான், எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இப்படி தான், தினமும் தந்தையிடம் அடி வாங்கி பள்ளிக்குச் செல்வேன், ஒரு நாள் கூட எனக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்று தோன்றியது இல்லை. ஒவ்வொரு நாளும் நரகத்தில் தண்டனை வாங்குபவன் போல செல்வேன், மாலையில் நரகத்திலிருந்து சொர்கத்துக்கு வருவேன்- என்னோட அறை. மனதில் பிறக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. காலையில் பள்ளிக்குச் செல்லாமல் நான் செய்த தவறுக்கு அடிவாங்குவேன், ஆனால் இரவில் என்னோட அப்பா குடிச்சிட்டு வர்ரதால எனக்கும் அம்மாக்கும் அடி விழும். அப்பா செய்த தவறுக்கு மகன் அனுபவிப்பான் என்பார்கள், அது உண்மை என்று உணர்ந்த நாட்கள். பள்ளிக்கு போனாலும் சக மாணவர்கள்…வேடிக்கை! எவரும் சமமாக நடத்தியது இல்லை, நான் யாரிடமும் பேசாததால் எனக்கு மன நலம் சரி இல்லை என்று ஒரு புரளியை கிளப்பி என்னோட மொத்த பள்ளி வாழ்க்கையையும் நாசமாக்கினார்கள், இதில் எவரிடம் நண்பர் ஆவது, ஒவ்வொருவரும் சமுதாயம் தரும் அழுத்தத்தில் ஓடும் மெஷின்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒருவனை விட இன்னொருவன் மேலானவனாக இருக்க எண்ணும் ஒரு சுழியில் சிக்கி இருக்கிறார்கள், முடிந்தவரை மற்றவரை இழிபடுத்துவதே நகைச்சுவையாக வைத்திருக்கும் கெட்ட நாக்குகள். யாருடனும் என்னால் நண்பன் ஆக முடியாது, அவர்களாலும் என்னுடன் நண்பர்களாக இருக்க முடியாது. என்னோட அப்பா பள்ளிக்காக பண்ண செலவை விட நான் பள்ளிக்காக செய்த உடல் நல செலவும் மன நல செலவும் ரொம்ப அதிகம்.

பள்ளியில் இருந்து வீடுவரை அந்த வந்தந்தி பரவியது, நான் எப்பொழுதும் அறைக்குள் இருப்பதை என் அம்மா விரும்பவில்லை, அப்பாவுக்கு அதை பற்றி கவலையும் இல்லை. அம்மாவின் கவலை அந்த வதந்தியால் மேலும் அதிகமானது. அம்மா என்னை ஒரு மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போனாங்க வழக்கம் போல சில கேள்விகள் மற்றும் சில ஆராய்ச்சிகள், என்னால் அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமும் இல்லை. எனக்கு கவனமெல்லாம் அவரோட பெயர் பலகை மேல தான் இருந்தது “சைட்டோ டமாக்கி”.இரண்டு மூன்று முறை பார்த்தபிறகு, டாக்டர் அம்மாவிடம் என்னுடைய பிரச்சனையை சொல்ல வந்தார், அம்மா குறுக்கிட்டு என்னை வெளியில் போக சொன்னாள் ஆனால் அந்த டாக்டர் என்னை இருக்க சொன்னார். அவனுடைய பிரச்சனை அவனுக்கு தெரியணும். உங்க பையன் ஹிக்கிகோமோரி , இது மனநல குறைபாடு இல்லை இது தான் அவனோட இயல்பு, இப்படி தான் இருப்பான். இத சரி செய்ய முடியாதா? என்று அம்மா கேட்டாள். அவனுக்கு வெளிய போகணும்னு ஆசை இருக்கும், காதலிக்க ஆசை இருக்கும் ஆனா இத எதையும் அவனால் செய்யமுடியாது.
இயல்பாக அவனை இருக்கவிடுங்க என்று அந்த டாக்டர் சைட்டோ சொன்னார்.நாம என்னதான் தெரபி அரேஞ் பண்ணாலும் அதை தவிர்க்க தான் பாப்பாங்க என்று சொன்னார்.நான் பேசிய சில மனிதர்களில் இவரும் ஒருவர்.

நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன், அம்மாவும் எதுவும் சொல்லவில்லை. அப்பாவிடம் அடி வாங்கி இந்த விடுதலையை எனக்கு பெற்றுதந்தார். வெளிய போக பயம், ஏதாவது செய்ய போயி நான் தோல்வி அடைந்திடுவேன்னு பயம், என்னை தோல்வியடைந்த ஒருவனா காட்டிக்க விருப்பம் இல்லை. நா எப்போயாச்சும் பேசுற ஆளு என்னோட அம்மா தான். சில சமயங்களை அவங்ககிட்டயும் பேசமாட்டேன், தூங்குவது போல நடிப்பேன், சில சமயம் அவர்களை தவிர்க்க நிஜமாவே தூங்கிடுவேன் இரவில் பிலே ஸ்டேஷன்ல வாழ்க்கையை ஓட்டினேன். என்னால விருப்புற எதையும் செய்ய முடியல என்ற ஏக்கமும் வருத்தமும் கோவமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அம்மாவும் என்னை வெறுத்துவிடுவார்கள் என்ற பயம் அதிகமானது. இப்படி பட்ட ஒருவனை ஏன் விரும்ப வேண்டும் அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறதே என்றும் தோன்றும்.

ஒரு நாள் என்னோட அப்பா இறந்துட்டாரு, வீட்டில ஒரே கூட்டம், நான் என்னுடைய அறைவிட்டு வெளியே வரவில்லை, அம்மா எத்தனையோ தடவை கதவை தட்டியும் நான் வெளிவரவில்லை. என்னோட அம்மாவுக்கு என்மேல நம்பிக்கை போன நாள் அது, என்னோட அம்மாவுக்கு அவங்களோட சாவுக்கு கூட நான் வெளிய வரமாட்டேன் என்று ரொம்ப தீர்க்கமா நம்புனாங்க. என் மேல எனக்கு வெறுப்பு அதிகமாச்சு , இந்த சிறை… இல்லை! இல்லை! இந்த சொர்க்கத்தில் இருந்து விடுதலை அடைய விருப்பம் அதிகமாச்சு ஆனா அதை செய்ய முடியாத இயலாமையை நெனச்சி நெனச்சி உடல் மெலிய ஆரம்பித்தது. அம்மா தனி ஆளா வீட்டை பாத்துக்குறாங்க ஆனா நம்மால எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம். அம்மா மேல ஒட்டி வாழற ஒட்டுண்ணி போல உணர ஆரம்பித்தேன். எப்படியும் தோல் மேல கம்பிளி பூச்சி போல இருக்குற என்ன ஒரு நாள் உதறிடுவாங்கன்னு தோணுச்சு, இப்படி ஏன் எல்லாத்துக்கும் பயம்? ஒரு வேல அந்த டாக்டர் இத பத்தி சொல்லலனா எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனைனு நெனச்சி மேலும் மேலும் வருந்தி இருப்பேன்.

ஒரு நாள் நாங்க பயந்தது நடந்தது, அம்மா இறந்துவிட்டார். எனக்கு என்ன செய்யணும்னு தெரியல, என்னோட மாமாவுக்கு ஃபோன் செய்து சொன்னேன், அவர் வீட்டிற்கு வந்தார். அவரோடு நாலு பேறு வந்தாங்க. என்னால அவங்கள சந்திக்கவே முடியல, இப்படி ஒட்டுண்ணியா இருந்து நானே என் அம்மா சாவுக்கு காரணம் ஆயிட்டேன்னு இவங்க எல்லாம் நினைப்பாங்களோனு தோணுச்சு. ஓடிப்போய் அறைக்குள் அடச்சிக்கிட்டேன், என்னோட வருத்தத்தை தெரிவிக்க கூட முடியாது. இவர்களுக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியாது. என் அம்மா மேல இருக்குற பாசத்தை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அலறல் அழுகையும் நீரை வாரி இறைக்கும் கண்கள் தான் இவர்களை பொறுத்தவரை பாசம். வெளியில் பிணமாக இருக்கும் எனக்கு பிடித்த அம்மாவை பார்க்கக்கூட முடியவில்லை. என்னை நான் வெறுப்பது எனக்கு புதிது அல்ல ஆனால் அந்த நாள் என்னை நான் வெறுத்தது போல வேறு ஒரு நாள் என்னோட வாழ்நாளில் இல்லை. என்னோட மாமாவே எல்லாத்தையும் செஞ்சிட்டாரு. என்னால வெளிய போக முடியவில்லை இருந்தும் வாழ்நாள் முழுவதும் வயித்துல இருக்க ஒரு சிசுவை போல என்ன பாத்துக்கிட்ட அம்மாவை அவர்கள் பயந்த மாதிரியே அவங்க இறந்த பின் தனியா விட்டுட்டேன். தனிமை என்னை தேர்ந்தெடுத்ததா இல்லை நான் தனிமையை தேர்ந்தெடுத்தேனா? ஒன்றும் புரியவில்லை. என்ன? இவனோட வாழ்க்கையில ஒரு கதையும் இல்லைனு தோணலாம் ஒரே ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் என்னோட வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா.

இப்படி என் வாழ்க்கை மாற காரணமாக இருந்த சோசியல் பிரஷர். நீங்க எல்லாம் எதிர்பார்க்கிற குழந்தை அப்படி இல்லனா மென்மேலும் அழுத்தம் தராம அவர்களாகவே இருக்கவிடுங்க. இப்போ, எனக்கு தீர்வு கிடைக்குமானு தெரியாது ஆனா பெற்றோர்கள் குழந்தைகள் மேல வைக்குற அழுத்தம் எல்லாத்தையும் கத்துக்கனும்னு நெனைக்குற நினைப்பு இதெல்லாம் மாத்திக்கிட்டா வருங்காலம் ஒரு வேலை நல்லா இருக்கலாம். பளிச்சிடும் விளக்குகள், ஒரு நாளைக்கு சுமார் சில லட்சம் பேர் கடந்து செல்லும் ஷிபுயா நகரத்தின் எந்த பரபரப்பும் என்னை என் அறையைவிட்டு வெளியில் வரவைக்க முடியவில்லை.

என்னோட தனிமை, சோகம், அம்மாவை பிரிந்த வேதனை எல்லாத்தையும் சில சிறுகதைகளா நான் முதல் முதலில் என்னையே பரிசோதனைக்கு உட்படுத்தி எழுதி பிரசுரித்தேன் எப்படியோ அது நிறைய விற்பனை ஆகியது, சில ஹிக்கிகோமோரிகள் மையமா வெச்சி துப்பறியும் நாவல்கள் எழுதினேன். இதுவே வாழ்வாதாரமும் ஆனது. ஒரு வேலை நீங்க நேர்ல வந்திருந்தா கூட நான் பேசி இருக்கமாட்டேன் என்று ஒரு வாசகரின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி முடித்தான் அகிஹிக்கோ.

****முற்றும்****

One thought on “ஹிக்கிகோமோரி

Leave a Reply to Barani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *