பேப்பர் கப்

எழுத்து: சபரி

டீ கடை ஒன்றில் இளவட்டம் ஒருவன் வடையை வாங்கி ரெண்டாக பிய்த்துக் கொண்டிருந்தான். பருப்பு வடை மொறு மொறுப்பு குறையாமல் இருந்தது. தூரத்தில் ஒரு மேள சத்தம் கேட்டது, அண்ணாந்து பார்த்தால் சிறு‌ கூட்டம் ஒன்று வருவதாக தெரிந்தது.

அந்த இளவட்டம் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் இதை பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டு பேச்சை கொடுத்தான். அந்த வேளை பார்த்து டீ கடையில் இருந்து டிவியில் “சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு உசுர விட்றாத” என்று நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அந்த இளவட்டம் தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்த பெரியவர் தனக்கு ஒரு டீயை சொல்லிவிட்டு இளவட்டத்தை நோக்கி பேச ஆரம்பித்தார். ‘இன்னைக்கு திருவிழா ‘. சித்திரைக்கு பிறகு பெரிதாக எந்த விழாக்களும் இல்லையே என்ற எண்ணம் வந்தது.

‘இப்போ என்ன திருவிழா ?’

‘உள்ளூர் சாமிக்கு ‘

‘உள்ளூர் சாமியா ?’

‘ஆமா’

அந்த பெரியவர் தான் கேட்ட டீ வரவில்லை என்று கடைக்காரரை பார்த்தார். ‘இப்போ தான் புது பால் ஊத்தினேன் கொஞ்சம் பொறுங்க’ என்றார் கடைக்காரர். ‘இது என்ன சாமி ?’ அந்த பெரியவர் பதில் சொல்ல கொஞ்சம் தாமதித்து வாய் திறந்ததால் அதற்குள் மற்றொருவர் ஆரம்பித்தார் ‘எங்க எல்லை சாமி, தம்பி ! அது பொட்டு முனி’ அவர் முகத்தில் இன்னும் சொல்ல வேண்டுமென்ற கொதிப்பு தெரிந்தது அதற்கு ஈடு கொடுக்க ‘அப்புறம் ‘ என்றான் இளவட்டம்.

‘இங்க ஒரு காலத்துல ஆவி நடமாட்டம் அதிகமா இருந்துச்சு அப்போ இந்த ஊர் மக்கள காப்பாத்துன காவல் தெய்வம் இவரு ‘ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கூட்டம் அருகாமையில் இருந்தது அவர்களோடு அவரும் இணைந்து கொண்டார்.

இப்போது கடையில் இளவட்டம், பெரியவர் மற்றும் கடைக்காரர் மட்டும் இருந்தனர். அந்த பெரியவர் இன்னமும் பால் கொதித்ததா என்று பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எதிர் திசையிலிருந்து மேள சத்தம் கேட்டது. அதே போல் ஒரு கூட்டம் வந்தது, கடையின் முன் ஒருவர் நின்றார். ‘என்னங்க பொட்டு முனி கோவிலுக்கா’ என்றான் அந்த இளவட்டம்.

‘ஆமா தம்பி, எங்க ஆளுங்க தான் பொட்டு முனி, நம்ம முப்பாட்டன் , எங்க குலத்தையே காக்க வந்த குல சாமில ‘ என்று ஒன்றாம் வகுப்பு குழந்தை கதை சொல்லி மகிழ்வதைப் போல் மகிழ்ந்தார் . ‘உங்களையும் பேய் கிட்ட‌யிருந்து காப்பாத்துனாரா?’

‘பேயா அதெல்லாம் இல்ல பா’ என்று சொல்லி மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘அந்த மேலூர்காரனுகளுக்கு இதே வேல ‘ என்று முணுமுணுத்தவாரு சென்றார். இளவட்டத்திற்கு ஒன்றும் புரியவில்லை. பாலை உற்று பார்த்துக் கொண்டிருந்த பெரியவரை தட்டிக் கேட்டான் ‘நீங்க ஏதோ செல்ல வந்தீங்க என்ன அது’ .

இளவட்டத்தை அருகில் வர சொன்னார். ‘தம்பி இந்த கோவிலே நா சின்ன வயசா இருந்தப்ப கட்டுனது. முதல்ல போனவங்க மேலூர்-காரங்க ரெண்டாவதா போனவங்க கீழுர்-காரங்க இவங்க ஒன்னாதான் ‌அங்க சாமி கும்புடுறாங்க ‘

‘என்ன ஒரு நல்லிணக்கம் ?’

‘அதெல்லாம் இல்ல, என்பது வருஷத்துக்கு முன்னாடி இதே போல டீ கடையில மண் குவளைல கீழுர் ஆட்கள் டீ குடிப்பாங்க, மேலூர் ஆட்கள் டம்ளர்ல குடிப்பாங்க. கீழுர்கார முனி புரட்சி பண்றேன்னு மேலூர்காரங்க டம்ளர்ல டீ குடிச்சிட்டான் அப்புறம் ரெண்டு ஊருக்கும் தகராறு ஆகிப்போச்சி , சண்டையில மேலூர்காரங்க முனிய கொன்னுட்டாங்க ‘

‘அச்சச்சோ ‘ என்று திகைத்தான்.

‘இருப்பா , இன்னும் இருக்கு ‘ என்று தொடர்ந்தார் பெரியவர். ‘முனி‌ நினைவா ஒரு சிலை வெச்சாங்க, சில மாசம் கழிச்சு முனிய கொன்ன அதே இடத்துல முனியோட பேய் மேலூர்காரன கொன்னுடுச்சி . அப்பைல இருந்து மேலூர்காரங்க அவங்கள பேயா‌ வந்து கொல்ல கூடாதுன்னு முனிய சாமியா ஏத்துக்கிட்டு கும்புடுறாங்க கீழுர்காரங்க அவங்கள காக்குற சாமியா கும்புடுறாங்க ‘

‘அப்போ பொட்டு ங்குற அடைமொழி?’

‘அது ஒரு ஐயரு சும்மாயிருந்த சிலை மேல் பொட்ட வெச்சி பொட்டு முனியா மாத்திட்டாரு ‘ அந்த பெரியவர் செல்லி முடித்தார். பால் கொதித்து அடங்கியது. ‘கொதிச்சா அடங்கிதானே ஆகனும்’ பெரியவர் பாலை பார்த்துக்கொண்டே சொன்னார்.

‘ஆமா நீங்க எந்த ஊரு?’

பெரியவர் இளவட்டம் காதருகில் வந்து நான்‌தான் முனியோட பேய் என்று ‌சொல்லி சிரித்தார்.

இருவருக்கும் பேப்பர் கப்பில் டீ வந்தது.

*** முற்றும் ***

2 thoughts on “பேப்பர் கப்

Leave a Reply to Sabari Savithiri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *