வீடியோ கால்

எழுத்து : சபரி

மார்கரெட் காதலிக்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. அவளோடு அலுவலகத்தில் பணி புரியும் மோஹித்தை தான் காதலிக்கிறாள். சில வருடங்களாகவே நண்பர்களாக இருந்தனர். சமீபமாக தான் ஏதோ ஒரு உணர்வு , நெருக்கம் அதிகமானதால் புரிதலும் அதிகமாகும் அல்லவா? நண்பர்கள் காதலர்கள் ஆவதில் தவறில்லை.

மோஹித் முதல் முதலாய் ஒரு திரைப்படத்திற்கு இன்று அழைத்து செல்லவிருக்கிறான் அதற்கு மார்கரெட் தயாராகிக் கொண்டிருந்தாள். சிவப்பு நிற டாப் வெள்ளை நிற லெக்கிங்ஸ், டாபின் மேல் தோள் பட்டையில் களம்காரி டிசைன் இருந்தது. என்றும் போல் இல்லாமல் இன்று உடை அணியும் போது உடலில் ஏதோ உணர்வு இனம்புரியா கிளர்ச்சி, உடலில் மெல்லிய முடிகளை கூட பாரம் போல் உணர்ந்தாள். தன் விரல் தன்னை தீண்டுவதே கூச்சமாய் இருந்தது.

காதலியுடன் பைக்கில் செல்லும் நாட்களும் நினைவுகளும் எந்த உவமைக்கும் அடங்காது. முதுகுக்கு பின்னால் இருந்தாலும் அவள் கண் முன் இருப்பது போல் அவள் செய்யும் அனைத்தும் காதலனுக்கு நிச்சயம் தெரியும். ஆண்களின் இன்டியுஷன் அது. எத்தனையோ நாட்கள் அவளை இப்படி கூட்டிச் சென்றிருந்தாலும் இன்று காதலியாய் கூட்டிச் செல்வதில் ஒரு மாற்றம். இடைவெளி குறைந்திருக்கிறது. நண்பர்களாக இருக்கும் பொழுது இருந்த சில கட்டுப்பாடுகள் உடைந்திருக்கிறது. இது போன்ற சமயங்களில், இந்த திடீர் மாற்றங்கள் பெண்களிடம் இருந்து வந்தால் அதை ஆராயாமல் அனுபவிக்க வேண்டும், தெரிந்தார் போல் காட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டாம். மோஹித்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது.

திரைப்படம் ஆரம்பமானது மோஹித்தின் ஆர்வமும் தான். மார்கரெட்டின் கன்னத்தில் முதல் முத்தம். மெல்லிய மீசை முடி குத்திய சிலிர்ப்பு, யாரும் இதழ்களால் தீண்டாத கன்னம் – சட்டென மேகம் சூழ்ந்து ஏதோ ஒரு பக்கம் மட்டும் வரும் வெளிச்சத்தில் ஒளிரும் ஊர் போல் ஒளிர்ந்தது அந்த இருண்ட அரங்கில். இளம் வயது, சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது, மார்கரெட் அவனின் இதழில் முத்தமிட்டாள், டைட்டன் ராகா வாட்ச் அணிந்திருந்த அவளின் கையை எங்கு வைப்பதேன்று தெரியாமல் அவனின் பின் கழுத்திலும் வலது காதின் ஓரத்திலும் மாறி மாறி உரசியது. பொது இடம் என்னும் நாகரிகம் கடக்கும் நேரம், சில வினாடிகள் தான், தொட்டு விட தூண்டும் எண்ணம் , அதை அடக்க முடியுமா என்ன? மூலையையும் மனசையும் ஒரு வழி செய்து விடும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மர்ம பாகங்களை ஒருவருக்கொருவர் தீண்டிக் கொண்டனர். டோன்ட் பி ஜட்ஜ்மென்டல், அது அவர்கள் சுகந்திரம். தார்மீக போலீசிங் செய்யும் ஆட்கள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே.

பாப்கார்ன் முழுதாய் முடிந்தது திரைப்படதுடன் சேர்ந்து. வீடு வரை முழு பயணமும் மௌனத்தில் கழிந்தன. நடந்ததை நினைத்து வெட்கம் தலைக்கேறியது. லேசாய் பெரும்மூசும் வந்தது.


மார்கரெட் மோஹித்துடன் பேசிக்கொண்டிருந்த போது மோஹித், மார்கரெட் அவனின் அம்மா சாயலில் இருப்பது போல் சொன்னான். பெண்களுக்கு அப்பா சாயலை காட்டும் ஆண்களை பிடிப்பதும் , ஆண்களுக்கு அம்மா சாயலை காட்டும் பெண்களை பிடிப்பதும் கொஞ்சம் க்ளிஷே தான் ஆனால் காதலும் க்ளிஷே தானே ! மோஹித்திடம் அவனுடைய அம்மா ஃபோட்டோ வை கேட்டாள் அவனும் அனுப்பினான். அவனின் அம்மா லேசாக அவளை பிரதிபலிக்கவே செய்தாள்.

ஒரு நாள் வீட்டுக்கு வரென் அம்மாவை பார்க்க என்று மார்கரெட் சொன்னாள். வீட்ல யாரும் இல்லாத போ வா என்று குறும்பாக சொன்னான் .


சில வாரங்கள் கழிந்தன பல திரைப்படங்கள் முடிந்தன. “நேத்து தேட்டர்ல ஒண்ணு பண்ணோம்ல ?” மோஹித் ஏதோ திட்டத்துடன் பேசுவது அப்பட்டமாக தெரிந்தது.

“பே அத பத்தி பேச வேண்டாம்”

” ஏன் எண்ணாச்சு ?”

“வேண்டாம் னா வேண்டாம் அவளோ தான்”

“ஹே வெக்க படுறிய ” மோஹித் நேரம் தெரியாமல் மார்கரெட்டை சீண்டினான்
மார்கரெட் சிறிது பொறுமை காத்தாள்.

“அது நடந்துடுச்சி இட் வாஸ் பியூட்டிஃபுல் ” சிறிது மௌனம் மேலும் தொடர்ந்தாள். “அத பத்தி பேசி வல்கர் ஆக்க வேண்டாம் பிளீஸ்”

மோஹித் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் என்றோ நடக்கப்போவது தானே என்று ஆறுதல் அடைந்து, புரிந்துகொண்டது போல் பாவனையும் செய்தான்.


இன்னைக்கு எங்க வீட்ல யாரும் இல்லை, மார்கரெட் சொன்னாள் .

“என்ன இவ்ளோ லேட்டா சொல்ற” மோஹித் கேட்டான்.

“முன்னாடியே சொன்னா நீ என்ன பண்ணுவன்னு தெரியும் அதான்”

“லெட்ஸ் டூ சம்திங் நாட்டி” மோஹித் சொன்னான்.

மார்கரெட் பிடி கொடுக்கவில்லை, நீண்ட நேரம் இதே கோரிக்கையை வெவ்வேறு வகையாக கேட்டுப் பார்த்தான், ஒன்றும் நடக்கவில்லை. ஆண்கள் இது போன்ற சமயத்தில் பயன்படுத்தும் ஆயுதம் சிம்பத்தி, பெரும்பாலும் இந்த இடத்தில் பெண்கள் சருக்கிவிடத்தான் செய்கிறார்கள். அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி வீடியோ காலுக்கு சம்மதம் வாங்கிவிட்டான். நினைத்தது போலவே நடந்தது. ஏனோ மார்கரெட்டுக்கு உள்ளூர ஒரு கில்டி ஆனால் சிறிது நேரத்தில் அது மறைந்தது .


மேலும் சில வாரங்கள் கழிந்தன, மோஹித் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்தது. எதைப்பற்றி பேசினாலும் கடைசியில் செக்ஸ் டாபிக்கில் வந்துவிடுவான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீடியோ கால் வேண்டும் என்று அடம்பிடிப்பான். ஒரு சில நாட்களுக்கு மேல் மார்கரெட் இதை ஏற்க தயாராய் இல்லை. ப்ரேக் அப் என்று சொல்லிவிட்டாள். அது மேலும் மோஹித்தை கோபப்படுத்தியது. மார்கரெட்டுக்கு இறுதியாக ஒரு மெஸேஜ் அன்று வாட்ஸ்ஆப்பில் வந்தது. அது ஒரு வீடியோ, பார்த்தவள் மிரண்டு போனாள். அவர்கள் அந்தரங்கமாக பேசியதை படம் எடுத்து வைத்திருந்தான், அதை அனுப்பி அவனை திருமணம் செய்து கொள்ள வற்ப்புருத்தினான். உடனே என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தாள் அவனை அலைபேசியில் அழைத்தாள்.

“இப்போ வருவல்ல வழிக்கு, இந்த இளம் பெண் செய்யும் காரியத்தை பாருங்கள்னு டைடில் போட்டுடலமா ?” என்று சொல்லிச் சிரித்தான். மார்கரெட் கெஞ்சிப் பார்த்தாள். அவன் விடுவதாய்த் தெரியவில்லை. எனக்கு ஒரு மணிநேரம் டைம் குடு பிளீஸ் என்று கெஞ்சினாள் அதன் பிறகு முடிவை ஒரு மணி நேரம் கழித்து சொல் என்று இணைப்பை துண்டித்தான். ஒரு மணி நேரம் கழித்து மோஹித் வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வந்தது , பார்த்தவன் மிரண்டு போனான். அந்த வீடியோவை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அதில் மோஹித்தின் அம்மா, வீடியோ காலில் உடைகளை கழட்டிகொண்டிருந்தாள்‌. பதறிப்போய் மார்கரெட்டை அலைபேசியில் அழைத்தான். என்ன இதெல்லாம் மோஹித் கோவமாகக் கேட்டான்.

“ஏண்டா நீ ரெகார்ட் பண்றபோ நா பண்ண மாட்டேனா ? என்னோட மூஞ்சல தான் உங்க அம்மா மூஞ்ச மார்ஃப் பண்ணியிருக்கேன்” என்று சொல்லி சிரித்தாள் , மேலும் தொடர்ந்தாள் “நெட் ல பாக்குறவன் இது ஒரிஜினலா இல்லையான பார்ப்பான், உங்க அம்மா நாளைக்கு டிரெண்டிங் டா. மகனிடம் அம்மா செய்யும் காரியத்தை பாருங்கள் , டைடில் ஓகே வா?” மார்கரெட் சொன்னாள் . அவள் குரலில் சிறிதும் பயம் இல்லை. “அப்படியெல்லாம் பண்ணிடாத பிளீஸ்” மோஹித் கதறினான்.

“இந்த வீடியோ என் கிட்ட எப்பையும் இருக்கும், புரியுதா ?” மார்கரெட் சொன்னாள்

என்ன செய்வதென்று புரியாமல் இணைப்பை துண்டித்தான் அலைபேசியில் மட்டுமல்ல. சில வாரங்கள் கழித்து மார்கரெட் வேறு ஒரு ஆணை டேட் செய்ய ஆரம்பித்தாள்.

***முற்றும்***

6 thoughts on “வீடியோ கால்

Leave a Reply to Swetzz Cancel reply

Your email address will not be published. Required fields are marked *