பனிக்கால நாய்கள்

எழுத்து : சபரி

அனிதா, தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கண்மணி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன பாக்குற என்றார் போல் புருவங்களை மேலும் கீழும் அசைத்து காட்டினாள். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தாள் ஆனால் மனதளவில் எப்பொழுது இணைப்பை துண்டிப்பாள் என்றெண்ணினாள். இப்படியே பல நிமிடங்கள் கடந்தன, ஏழாவது முறை வைக்கிறேன் என்று சொல்லி நிஜமாகவே வைத்துவிட்டாள்.

‘ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த விஷயம் அப்பாக்கு தெரியப்போகுது, அன்னைக்கு இருக்குடி உனக்கு’ கண்மணி மனதில் உள்ள கோவத்தை நகைச்சுவையாக்கினாள். ‘என்ன என்னப்பண்ணிடுவாரு உன் ஆளு’ அனிதா நக்கலாக சொன்னாள். ஹாலில் அம்மா அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றாள், டீபாய் மேலிருந்த மாதுளை முத்துக்களை தட்டில் உதிர்க்க ஆரம்பித்தாள். ‘அம்மா , பிரச்சனையானா, அப்பாவ நீ சமாளிச்சிட மாட்ட?’ ஒரு மாதுளை முத்திலிருந்து சாறு ரத்தம் போல் மேல் உதட்டிலும் மேல்வாயிலும் தெளிக்க துடைத்து கொண்டே கேட்டாள்.

‘நீயாச்சு உங்க அப்பா வாச்சு’ கண்மணி இப்பொழுதே கழட்டிவிட்டார் போல் பேசினாள். ‘என்ன மா இப்படி சொல்ற?’ அம்மா என்ன சொன்னாலும் கடைசியில் துணை நிற்ப்பாள் என்று தெரியும் இருந்தும் உரையாடல் நிமித்தம் கேள்வியை கேட்டாள்.

‘நீ என்ன கேட்டா எல்லாம் பண்ற, அடிவாங்குறதுக்கு மட்டும் நான் போகணுமா?’ கண்மணி கேட்டாள்.

‘என்ன கேக்கணும் அம்மா, எனக்கு பிடிச்சவனை நா காதலிக்குறதுல என்ன தப்பு’ அனிதா விளையாட்டாக கேட்டாள்.

‘உனக்கு என்ன வேணும்னு எங்களுக்கு தெரியாதா?’ கண்மணி தற்செயலாக பேச ஆரம்பித்த விஷயத்தை விவாதமாக மாற்றினாள் அதை முகத்திலும் காட்டிவிட்டாள் .

‘ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும் ?’ அனிதா

இப்படியே வார்த்தை மேல் வார்த்தை கோர்த்து சங்கிலியாய்; துருப்பிடித்த பழைய வார்த்தைகள் , கீறும் துரும்பாய் கடும் வார்த்தைகள் என சங்கிலி தொடர்ந்தது. அனிதாவிற்கு கோவம் தலைக்கேறி ‘நா யார் கூட இருக்கணும்னு நீங்க முடிவெடுக்க வேண்டாம்’ சுடும் பொங்கல் பானையை கரித்துணி இல்லாமல் தூக்கி விட்டு உடனே பிடியாய் விடுவது போல் சட்டென சொல்லிவிட்டு உடனே தன் தவறை உணர்ந்தாள்.

‘அம்மா சாரி மா , வார்த்தை விட்டேன் , மன்னிச்சுடு மா’ அனிதா கண்களும் கலங்க ஆரம்பித்தது.

‘உன்கூட ஃபிரண்டா பழகினேன் பாரு , இன்னும் நல்லா கேளு’ கண்மணி அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள். தன் மகளை இதற்க்கு பிறகு சிறு பெண்ணாக எப்படி பார்ப்பது என்று புரியாமல் மிரண்டாள்.

அம்மாவின் கோவம் எத்தனை நாள்? வழக்கமான ட்ராமாவை போட்டு அம்மாவை சமாதான படுத்தினாள். அம்மாக்கள் மன்னிக்கலாம் ஆனால் கண்டிப்பாக மறக்கமாட்டார்கள். அம்மாவிடம் ஆவேசப்பட்டு பேசுவதும் குகைக்குள் சத்தமிடுவதும் ஒன்று, திரும்பி வரும்பொழுது பன்மடங்காக வரும். திரைப்படத்திலோ காவியங்களில் காண்பது போல் அல்ல நிதர்சன வாழ்க்கை, அம்மாவும் பிள்ளைகளும் பேசிக்கொள்ளாத வார்த்தைகளே இருக்காது. குறிப்பாக அம்மாவும் மகளும்.

சில மாதங்கள் கழித்து

டோக்கி கத்தி ஊரை கூட்டிக்கொண்டிருந்தது. பத்து நாளா சிறுநீர் போற இடத்துல வீக்கம், அப்பப்போ ரத்த கசிவு, பயம், பதட்டம் மற்றும் நிறைய சிறுநீர் கழிப்பதுன்னு, வீட்ல பெரிய ரகளை பண்ணிக்கிட்டு இருந்தது.

‘என்ன ரொம்ப நேரம் மொபைல் நோன்டிக்கிட்டு இருக்க’ கண்மணி கேட்டாள்.

‘டோக்கிக்கு மேட்டிங் டைம் வந்துடுச்சி, அதான் டோக்கிக்கு ஏத்த நாய பாத்துகிட்டு இருக்கேன்’ அனிதா சொன்னாள்

‘இந்த வருஷம் இன்கிரிமெண்ட் போடலியா? நாய்க்கு மாமா வேல பாக்குற’ கண்மணி சொல்லிவிட்டு பலமாக சிரித்தாள். எதிர் பதில் இல்லாமல் வாயடைத்து போனாள் அனிதா.

‘அதுக்கு ஏன் இவளோ நேரம், சட்டுபுட்டுனு பாக்கவேண்டியது தானே?’ கண்மணி சொன்னாள்.

‘இல்ல நிறைய செக் பண்ணனும்’ அனிதா சொல்லிவிட்டு தனக்கிருக்கும் நாய் பற்றிய அறிவை அம்மாவிடம் காட்சிப்படுத்தினாள்.

‘அப்போ நல்ல ஒரிஜினல் அக்மார்க் இதே ஜாதி நாயானு பாக்கணுமா?’ கண்மணி கேட்டாள்.

‘ஆமா மா’ அனிதா சொன்னாள்.

‘நீ வளத்துட்டேன்னு அந்த நாய் யார்கூட இருக்கணும்னு நீ முடிவெடிக்குற , அப்படி தானே’ கண்மணி சூசகமாக கேட்டாள். கொஞ்சம் நகைப்போடு தான் கேட்டாள்.

‘அம்மா என்ன பழிவாங்குறியா’ அனிதா கேட்டாள்.

‘இல்ல செல்லம் , மனுஷங்க ஜாதி பேதம்லாம் பாக்கக்கூடாது ஆனா நாய்க்கு பாக்கலாம்? மாடர்ன் யூத்ஸ்!’ கண்மணி கேட்டாள்.

‘இவ்ளோ நல்லா பாத்துக்குறோம், ஏதோ ஒரு நாய் கூட மேட் பண்ணா எப்படிம்மா?’ அனிதா கேட்டாள்.

‘இதே கேள்வியை கொஞ்சம் முலாம் பூசி பெத்தவங்க கேட்டா, பழமைவாதின்னு சொல்றது’ கண்மணி விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.

‘அப்போ நா யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவெடுக்க எனக்கு உரிமை இல்லையா?’ அனிதா கேட்டாள்.

‘அந்த நாய்க்கு இருந்தா உனக்கு இருக்கு இல்லைனா உனக்கு இல்ல’ கண்மணி முடிவை சொன்னாள்.

அனிதா வேகமாக சென்று டோக்கியின் கழுத்திலிருந்து செயினை கழற்றி வீசினாள். மார்கழி டோக்கிக்கு இனிதே துடங்கியது.

****முற்று****

One thought on “பனிக்கால நாய்கள்

Leave a Reply to Mahesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *