களத்துமேடு – அத்தியாயம் 4

எழுத்து : அரன்

“ஏல பஸ்ஸ்டாண்ட் பக்கங் ஏதோ சண்டையாமே. உரக்கடைக்கு போயிருக்க நீ னு உங்க அய்யா சொன்னாவ. பிரச்சனை இல்லைல பா. ” விசயம் அறிய முற்பட்டால் செங்காளையின் அம்மா. 
வண்டியை நிப்பட்டிவிட்டு, வெளியே இருந்த வாளியில் கை கழுவிவிட்டு, உள்ளே நடந்தான் செங்காளை. 


“யென் அயித்த மவன் தான். சிங்காரோன்… அவன் தான் கொன்னது. ஏதோ ரோடு காண்ட்ராக்ட் பஞ்சாயத் தாம். உன் அண்ணன் இருக்கானே இருளப்பன். அந்தாளு சொல்லித்தான் இவன் செஞ்சிருப்பான். வேற ஏதும் தெர்ல. ” கொலையை நேரில் பார்த்த செங்காளையின் மனமும் காலும் ஆட்டத்திலே இருந்தது.
“பொன்னி வந்தாச்சா. அக்கா க்கு கொஞ்சம் கொத்து பரோட்டா வாங்கியாந்திருக்கன். “


“அக்கா சாயங்காலம் திங்காது ல மாப்ள. உனக்கு தெரியாதா. இப்ப வந்து என்ட கொடுக்க சொல்லுன் பாரு. ” வாயால் கிறுக்கினான் மாயாண்டி.
பின்புறம் இருந்த செடிகளின் அரவணைப்பில், கொஞ்சிக் கொஞ்சி பாடிக்கொண்டிருந்த பொன்னியை, பரோட்டாவின்  மணம் எட்ட, நாசியின் போக்கில், பொட்டலம் கண்டடைந்தால் பொன்னி.


——××××——-××××——


“எய்யா ஏன்யா இப்படி பண்ணிட்டு வந்துருக்க… உங்க அய்யாட்ட போட்டிக்கு தானப்பா வந்தான்.. அதுக்கு போய் இந்த வயசுல இப்படி தாலி அறுதிட்டு வந்துருக்கியே. துள்ள துடிக்க இப்படி பண்ணது மண்ணா போகும் பா. ” சிங்காரம் சட்டைசெய்யாமல் பாத்துக்கொண்டிருந்தான் அவன் தாயின் புலம்பலை.
“ஆனது ஆச்சு. என் புள்ளைய குழப்பாத. மானம் மட்டுமில்ல. என் வீரத்தையும் நின்னு காட்டிட்டு வந்துருக்கான் என் அய்யா. “
சிங்காரத்தை தட்டிக்கொடுத்து பெருமையடைந்தார் சிவப்பிரகாசம். தாயால் முடியவில்லை. எடுத்ததுக்கெல்லாம் அரிவாள் வெட்டு என்றால், நாட்டில் நடமாடும் பிணங்களை விட உயிரற்ற பிணங்கள் தான் கொட்டிக்கிடக்கும் என்று அறிந்த மனுசி அவள். 


துணை ஆய்வாளர் உள்ளே நுழைய, வரவேற்றவாறே, கையில் நூறு நூறு ரூபாய் கட்டை வைத்து அமுக்கினார் சிவப்பிரகாசம்.
“வள்ளல் ஓய் நீரு. மகன வச்சே செஞ்சிட்டீரு. ரோடு கான்ட்ராக்ட் உ, மணல் கான்ட்ராக்ட் னு எல்லாம் வச்சிக்குடும். அப்படியே இங்கேயும் கொஞ்சம் பாத்து செய்யும். வரட்டுமா சின்னய்யா.

“சிங்காரம் கை தூக்கி பாதி வணக்கம் வைக்க, அவனை ஏத்தி பேசி பெருமைக்கொள்ள வைத்து சென்றார் துணை ஆய்வாளர்.
கூரிய அரிவாள் கீறி, பிளந்து, இறந்து கிடக்கும் மனித உடலே. மனைவி கதறி அழ, சொந்தங்கள் சூழ அழ, சந்தோசமாய் பணவியபாரத்தில் திளைக்கும், மனிதமற்ற மனங்களே, இவைதான் இன்றைய சூழழோ! இல்லை இவை தான் நிதர்சனமோ.

—-××××——××××——


பறை அடிகள் காதைப் பிளக்க, சங்கின் ஓசை ஓலமாய் ஊரை நிரப்ப, சுடலையை கைப் பிடித்து நாத்தியற்றவனாய் நடக்கிறான் செங்காளை. போகவும் விருப்பமில்லை, பார்க்கவும் தெம்பில்லை. உமையாளின் மறுஉருவமாய், அகத்தின் முகத்தின் அத்தனை அழகாய் காட்சி தரும் மங்கை, அக்கா பொன்னியை எப்படி பார்க்க போறான். 


நல்ல தூக்கமில்லா வீங்கிய கண்களை விட, வீரியம் கொண்டு துடிக்கும் இதயத்தின் வலிகளில் தான் எத்தனை சோகம்.
தெருவின் முக்கு வருகிறது.


“ண்னோவ் ! பாரு ண்னோவ்… அக்காவ பாருணோவ்…” சுடலை கதற.
மின்கம்பிகளில் உக்காந்திருக்கும் காகங்கள் பறக்க, பறை ஓலத்தில் மிரண்டு தெறிக்க… செங்காளை கூட்டத்தில் நோக்க..
சலனமின்று, சற்றும் சிந்தையுமின்றி, உறைந்த பால் போல, களை எனும் மகிழ்வு இழந்து போய், கூட்டத்தின் நடுவே, ஒரு பைத்தியக்காரி போல குனிந்திருந்தாள் பொன்னி.

(நெல்வாடைகள் தொடரும்)

One thought on “களத்துமேடு – அத்தியாயம் 4

  1. Story is really awesome, I felt very curious, while reading om question popped in my mind, what’s next what’s next and i do think that’s the beauty of the story. Keep writing Aran

Leave a Reply to Sanjana Cancel reply

Your email address will not be published. Required fields are marked *