டோக்கி

எழுத்து : சபரி

மனைவியை ஆச்சரியப்படுத்த பரிசு வாங்கிக்குடுத்திருந்தால் தெரிந்திருக்கும் அந்த பரிசு ஆச்சரியமா இல்ல அதிர்ச்சியான்னு. பெண்களுக்கு பிடித்த பரிசுன்னு பட்டியலிட்டா கண்டிப்பா இது இருக்கும். அவளுக்கு தெரியாம வாங்கறதுக்குள்ள அவளோட எத்தனையோ சந்தேகங்களுக்கு ஆளாயிட்டேன். எல்லாம் அவளோட முகத்துல சந்தோஷத்தை பார்க்கத்தான்.

காலை ஆறு கடந்து இருபது நிமிடம் இருக்கலாம், நல்ல இளம்வெயில் நெத்தில லேசா வேர்வை.

“கூடை கொண்டுவந்து இருக்கீங்களா ” அந்த அண்ணா கேட்டார்.

“எதுவும் இல்ல ணா “

“அட என்னப்பா, சரி இந்த கூடையை எடுத்துக்கோ ஆனா நூறு ரூபா அதிகமா குடு ” அந்த அண்ணா சொல்லிட்டு கை ல கொடுத்துட்டு கிளம்புனார். அவளோட பிறந்தநாளைக்கு அவளுக்குத்தெரியாம ஒரு வழியா வாங்கியாச்சு. வீட்டுக்கு போறதுக்குள்ள ஒரு தயிர் பாக்கெட்டும் , ஒரு பால் பாக்கெட்டும் வாங்கினேன் அதுகூட ஒரு செர்லக்(வ்ஹீட் ஆப்பிள்) பாக்கெட்டும். வீட்டோட பின்பக்கம் வேப்பமரத்துக்கு ஊடே வரும் சூரியக்கதிர் பூமிலப்பட்டு அங்க அங்க ஒளிக்கதிர் கூடவே மெல்லிய சத்தம், இப்போதான் தண்ணி தெளிச்ச செடிகளுக்கு நடுவுல அந்த கூடையை வெச்சிட்டு என்னோட மனைவியை எழுப்பி கூட்டிட்டு வந்தேன்.

“பட்டூஸ் இங்க வா”

“என்னடா காலங்காத்தால”

“அட சீ கேவலமா தெரியாத மாதிரி நடிக்காத”

வந்தாள், திறந்தாள். இந்த இளம் வெயில் மணி ஏழு இருக்கும், மழைக்காலம் வேற பெருசா வெக்கை இல்ல. கூடையை திறந்ததும் பழுப்புமஞ்சள் நிறத்தில் குட்டிநாய். லாப்ரடார் வகை, பழுப்புமஞ்சள் (fawn) நிற ரோமங்கள் , இரு அடுக்கு ரோமம், இளஞ்சிவப்பு மூக்கு, மடிந்து தொங்கும் காதுகள் , காதில் மட்டும் அதிக பழுப்பு நிறம், சுருளாத நீண்ட வால். மொத்தம் அரை முழம் நீலம் தான். நாய் பிடிக்காத எனக்கு கூட ஒரு நிமிடம் கைல எடுக்கணும் போல இருந்தது. ஆனா நாய் பிடிச்ச அவளோட முகத்துல சலனமே இல்ல.

“என்ன பிடிக்கலியா ?”

“அப்படி இல்ல, எப்படி பாத்துக்குறது” அவளோட ஆச்சரியத்தை பாத்துக்கணும்ங்கற அக்கறை தூக்கி சாப்பிட்டிடுச்சு, இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருக்கலாம்னு தோணுச்சு.

*******


நாய்க்குட்டிக்கு பேரு வெக்கணும், என்னனு யோசிச்சோம், சரி ராத்திரி பாத்துக்கலாம்னு வெளிய கிளம்பிட்டோம். ராத்திரியெல்லாம் பெங்களூர்-ல இருந்து பயத்தோடவே பிரயாணம் பண்ணதுனால நாய்க் குட்டி அமைதியா படுத்து இருந்தது. வெளிய போயிருந்தோம். நாலு மணி நேரம் கழிச்சி திரும்பி வந்தோம். இதுக்கப்பறம் தான் முக்கியமான செயல் இருக்கு , கதவை திறந்ததும் சோர்வா படுத்திருந்த நாய்க்குட்டி தடால்னு எந்திரிச்சி ஒரு பார்வை எங்கடா போனிங்கனு கேக்குற மாதிரி, திபு திபுனு எங்களை நோக்கி ஓடி வந்தது. தவழ்ந்துவரும் குழந்தையை அளித்தூக்கும் தாய் போல நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சினாள் என் மனைவி. வீட்டிற்குள் ஏதோ ஒரு புது வாடை, கொஞ்சம் வீச்சமாக இருந்தது, வாடை எங்கிருந்து வந்தது என பார்த்தபோது இங்கிருந்துதான்னு சொல்லாமலே சொல்லியது வெள்ளை தரை ஓட்டில் ஓடிய மஞ்சள் நீர்.

“இத கிளீன் பண்றியா” நான் கேட்டேன்

“நீயே பண்ணு ” மனைவி சொன்னாள் .

ஒரு மணி நேரம் கழித்து சாப்பாடு கொடுத்தோம், உண்டது. ரெண்டு மணி நேரம் கழிச்சி குறைக்க ஆரம்பிச்சது, குட்டி நாய் கூட ஓடு விளையாடினோம் அப்படியே ஒரு மணி நேரம் போச்சு. நாய்க்கு பெயர் யோசிச்சிகிட்டு இருந்தோம். மறுபடியும் குறைக்க ஆரம்பிச்சது இப்போ ஏன் குறைக்குதுன்னு தெரியல மறுபடியும் விளையாட ஆரம்பிச்சோம். இன்னொரு மணி நேரம், மறுபடியும் சிறுநீர் , கழிவு . மணி பதினொன்னு. சரி தூங்கலாம்னு ஹால்-ல விட்டுட்டு படுக்கையறைக்கு போனோம். பாத்து நிமிஷம் இருக்கும் மறுபடியும் குறைக்க நா கோவமா அதட்டினேன் , ரெண்டு நிமிஷம் அமைதி, மறுபடியும் குறைத்தல். இப்படி எவ்வளவு நேரம்னு தெரியல என்ன மறந்து தூங்கிட்டேன். மறுநாள் காலைல நாலு மணி இருக்கும் மறுபடியும் குறைச்சது இப்போ விளையாட்டா இருக்காதுன்னு தோணுச்சு, சரின்னு பின் கதவத்துறந்தேன். நாய்க்குட்டி ஒரே ஓட்டம் பின்பக்கத்துக்கு மேடம் சிறுநீர்க்காக போயிருக்காங்க. அதுக்கப்புறம் நாய்க்குட்டி தூங்கிடிச்சி எனக்கு தூக்கம் போச்சு. தொலைக்கட்சில நெட்ஃபிலிக்ஸ் வைத்தேன்.

தொலைக்காட்சில “In the end, love is a good reason to fall apart.” டோக்கியோ அப்படிங்கற பாத்திரம் மனி ஹெய்ஸ்ட் னு ஒரு வலைத்தொடர்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க, அட இதையே பேர வெச்சிடலாம்னு மனைவி கிட்ட விடிஞ்சதும் கேட்டேன் அவளும் சரினு சொல்லிட்டா. யுடியுபுல நாய் வளர்ப்புமுறை வீடியோ பாக்குறது, ஆர்டிகல் படிக்குறதுன்னு பொழுதுபோறதே தெரியல நடுவுல நடுவுல டோக்கியோ வேற விளையாட கூப்பிட்டது போகாம இருக்கமுடியுமா இல்ல போகலனா மட்டும் விட்டுடுமா என்ன, அவளும் விளையாடி விளையாடி சோர்ந்தே போயிட்டா. நாளைக்கு ஆபீஸ் வேற போகணும், டோக்கியா பாத்துக்க ஆளுதான் வெக்கணும் போல.

“பட்டூஸ் டோக்கிய எப்படி பாத்துக்குறது” மனைவி கேட்டாள்.

“யோசிக்காம வாங்கிட்டேன் ஆனா பாத்துக்கணும்” பரிசை பாக்குறப்போ மனைவிக்கு இருந்த மனநிலைதான் இப்போ எனக்கு, சில பரிசு அதிர்ச்சிதான்.

******


ஒரு மாதம் கழித்து, டோக்கியோட ஓரளவு பழகிட்டோம், காலைல டோக்கி என்னோட மனைவி பொறுப்பு, பதினோரு மணிக்கு டோக்கிக்கு சாப்பாடு குடுத்துட்டு ஆபீஸ் போயிடுவா, லஞ்ச் நான் தரணும் அதேமாதிரி மாலை சாப்பாடும் தரணும். ஆஃபீசிக்கும் வீட்டுக்கும் அலைறதே வேலையா போச்சு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாப்பாடு இடைவேளைக்கும் நடுவுல வீட்டுல தனியா மூணு மணிநேரம் டோக்கி இருக்கும். ஒவ்வொரு தடவ கதவை திறக்கும் போதும் அமைதியா படுத்திருக்கும், என்னையோ என்னோட மனைவியவோ பாத்ததும் நாங்க தனியவிட்டுட்டோம்னு கூட கவலை படாம பாசத்தோட ஒரு பார்வை அவ்வளவு தான், என்னோட தைரியம்மெல்லாம் அடியோடு அழிஞ்சி கண்ணு கலங்க ஆரம்பிச்சிடும். வீட்டுக்கு வந்ததும் பின்வாசலை திறந்ததும் பின்னாடி ஓடும் சிறுநீர் கழிக்க, கழிச்சதும் கொஞ்சம் நேரம் வெளிய படுத்திருக்கும், மண்ணோட குளிரோ வெப்பமோ மனுஷனுக்கு மட்டுமானது இல்லை, அதுக்கு சாப்பாடு தயார் செஞ்சிட்டு “டோக்கி” – ன்னு கூப்பிட்டதும் எங்கேயிருந்தாலும் அப்பா பாத்ததும் ஓடி வர சின்ன குழந்தை மாதிரி ஓடி வந்துடும், அதன் ஓட்டமே ஒரு அழகு தான். மறுபடியும் ஆஃபீஸ் போகப்போறேன்னு தெரிஞ்சதும் குறைக்க ஆரம்பிச்சிடும், போக மனசே வராது இருந்தாலும் கதவை மூடிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருப்பேன் ரெண்டு மூணு நிமிஷத்துல சத்தம் நின்னுடும், சில சமயம் தொடர்ந்து கொரச்சிகிட்டே இருக்கும் டோக்கி, மனசு தாங்காம கதவை திறந்து ஓடுவேன் என் செல்லமேன்னு. அதோட கூண்டுல இருந்து தாவும், கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்புறம் ஆஃபீஸ் கிளம்புவேன்.

*****

இரெண்டு மாதம் கழித்து

என்னோட மனைவி மடியில உக்காந்து தலையை வெளிய நீட்டி ரெண்டு முனங்கால்களை கார் கண்ணாடி மேல வெச்சி கடற்கரைசாலைல ஒய்யாரமா காத்துவாங்கிட்டு வந்துகிட்டு இருந்தது டோக்கி, அடுத்து போக போற இடம் கால்நடை மருத்துவர் கிட்ட. இது மூணாவது தடுப்பூசி மொத்தம் நாலு தடுப்பூசி. கால்நடை மருத்துவமனை போனதும் வீட்ல ரெட்ட வாலா இருக்குற டோக்கி அப்படியே அடங்கிடும் பயந்த குழந்தை மாதிரி ஆயிடும்.

“அண்ணா பதினஞ்சு கிலோ டாக் போவ்ட் எவளோ”

“தம்பி இன்னும் இரண்டு மாசம் வெயிட் பண்ணுங்க அப்பவும் நாய் வளத்திங்கனா கண்டிப்பா வாங்கிக்கோங்க” கால்நடை மருத்துவமனை பக்கத்துல இருக்க கடைக்காரர் சொன்னார்.

“இப்போயெல்லாம் அப்படித்தான் தம்பி, சும்மா கௌரவத்துக்கு வாங்கிட்டு அப்புறம் பாத்துக்க முடியலன்னு வித்துட வேண்டியது” அவர் சொன்ன வாரத்தை கொஞ்சமா மனச உறுத்துச்சி.

******

இரெண்டு மாதம் ஒரு வாரம் கழித்து

எங்க தெரு பசங்களுக்கு அப்போதைக்கு டோக்கி தான் ஹீரோயின். சாயங்காலம் ஆனா போதும் விளையாட வந்துடு வாங்க டோக்கின்னு மட்டும் இல்ல பொதுவாவே நாய்க்குட்டிகளுக்கு விளையாட்டே கடிக்கறதுதான். என்னோட விரலெல்லாம் கடி தழும்பு. முகத்தை கொறஞ்சது ஒரு நாளைக்கு பத்துத்தடவை கழுவனும். வீட்டை மூணு தடவ டெட்டால் போட்டு துடைக்கணும். நாங்க நகரத்துல இருக்கறதால டோக்கிக்கு பெரிய இடமெல்லாம் இல்லை வீட்டுக்குள்ள தனி இடம் . வீட்ல ஒன்னு டெட்டால் வாடை இல்லனா சிறுநீர் வாடை. எவளோ நேரம் விளையாடினாலும் டோக்கி சோர்வே அடையாது. எவளோ நேரம் டோக்கி கூட இருந்தாலும் அதுக்கு இன்னும் இன்னும் கூட இருக்கணும்னு எதிர்பார்த்தது. அப்பப்போ கடைக்காரர் சொன்ன மாதிரி நாம வித்துட கூடாதுனு இருந்தேன். முடிஞ்ச வரை டோக்கிய பார்த்துக்கிட்டோம்.

ஒரு நாள் மாலை விளையாடிகிட்டு இருக்கப்போ பக்கத்து வீட்டு பையன கடிச்சிடுச்சி டோக்கி, எதோட நிறுத்தாம இன்னொரு பொண்ணையும் கடிச்சிடுச்சி. நா அதட்டியும் கேக்கல சின்ன குழந்தைதானே டோக்கி அதுக்கு தெரிஞ்ச மாதிரி விளையாடுச்சு, இதை ஏத்துக்க அந்த குழந்தைகளோட பெற்றோருக்கு மனசு வரல , நீங்க வீட்டுக்குள்ளேயே வெச்சி வளத்துக்கோங்கன்னு சண்டை போட்டிட்டு போயிட்டாங்க.

******

மூன்று மாதம் கழித்து

வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து டோக்கி மனசு வருத்தப்பட்டது தான் மிச்சம், சரியா சாப்புட்றது இல்லை, தூங்குறது இல்லை, தேவையான விளையாட்டு இல்லை. அதனாலேயே டோக்கி இன்னும் நிறைய குரைக்க ஆரம்பிச்சது. முடியல, தொடர்ந்து மூணாவது ராத்திரி நாங்க தூக்கம் இழந்து, அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க நாய் சத்தம் அதிகமா இருக்குன்னு புகார். அவங்க வீட்ல குழந்தை பிறந்தப்போயெல்லாம் நடுராத்திரிவரை குழந்தை அழும். நாங்க எதுவும் சொல்லல , சொன்ன மட்டும் ? ஏன்னா அது மனித குழந்தை.

டோக்கிய வித்துடலாம்ன்னு என் மனைவி சொல்ல எனக்கும் அவளுக்கும் சண்டையே வந்துடுச்சி. அவளுக்கு டோக்கினால் தொல்லையில்ல என்னோட ஒடம்ப பாத்துக்கணும் , நான் பதற்றம் ஆகாம இருக்கணும்னு தான் சொன்னா.

“அந்த கடைக்காரர் சொன்ன மாதிரி நாம விக்கணுமா? “

“வீம்புக்கு நாய் வளக்காத டா, அதுக்கு வளக்காமயே இருக்கலாம். “


“தல எங்க இருக்கீங்க “

“ப்ளூ கலர் கார் தெரியுதா? ஆமா வாங்க “

எந்த கூடையில் வந்ததோ அதே கூடையில் திருப்பி கொடுத்தோம். கூடையை விட உயரமாய் இருந்தது டோக்கி. அதன் கண்ணில் சோகம், ஏமாற்றம், குறைத்துகொண்டே இருந்தது இந்த தடவை நான் கதவை திறந்து இன்னும் கொஞ்ச நேரம் அதனோடு விளையாட முடியாது. கருத்தரிக்க காத்திருக்கும் பெண்ணின் மாதவிடாய் போன்ற ஏமாற்றம் அதன் கண்ணில், ஒரு பார்வை ஒரே பார்வை.

கார் கொஞ்ச தூரம் மௌனத்தில் சென்றது என் மனைவி வாய்விட்டு அழுதாள், என்னால் அவளுக்கு சமாதானம் சொல்லமுடியாத அளவுக்கு துக்கம் தொண்டையில் நின்றது. காரில் இருந்த பெரும் மௌனத்தில் டோக்கி குரைக்கும் சத்தம் மெளிதாய் காதுகளில் ரீகரித்தது.

***முற்றம்***

5 thoughts on “டோக்கி

  1. The bond with a dog relies on the caretakers forever. They never forget, they never leave! <3. Beautifully penned, Sabarish.

Leave a Reply to Mahesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *