களத்துமேடு : அத்தியாயம் 1

அத்தியாயம் 1

‘ஏல… ஓடியா ஓடியா… சனம் சுதாரிக்குறதுக்குள்ள ஓடிருவோம்.’ இசக்கி கத்தினான்.

வானுக்கும் மண்ணுக்கும் முட்டி மோதுவது போல இதயம் திமிறிக்கொண்டு பலமாய் அடித்தது. முகத்தில் தெரித்திருந்த ரத்தச்சூடும், அது அவன் வியர்வையோடு ஒழுகி ஓட அந்த வாடையும் கிட்டத்தட்ட செங்காளையை கிறுக்காக்கியது.

‘மக்கா எசக்கி.. இந்த ரத்த வாடையோட ஓட முடியல லே. கொஞ்சம் அந்த நீரேற்றம் பக்கம் நில்லுல. பக்கங் இருக்குற ஓடைல லேசா நனஞ்சிட்டு வாரன்.’

செங்காளை கெஞ்சாத குறையாய் சொன்னான்.

‘எட்டிட்டு மிதிச்சன் னா மவனே விலா ஓடிஞ்சி செத்துருவ நீ. விளையாட்டு மயிரா இருக்கோ. ஓடியால நாயே. எவன் பாத்தான்னு தெர்ல. கும்மிருட்டு வேற. ஓடிருவோம்.’ பொருமினான் இசக்கி.

முடியும் வரை ஓடி இருவரும் பிராங்கோட்டை ஒத்தை ரைஸ்மில் முன்னே நின்றார்கள்.

‘காளை, இந்த மில்ல ஒட்டுனாப்ல இருக்குற ஓடைய பாரு. கிட்டு வய பக்கம் தான் போது. ஊருக்குள்ள போனா மாட்டிப்போம். எவனுக்கும் நம்ம வந்தது தெரியாது. இப்போதைக்கு கொஞ்சம் தண்ணி குடிச்சி உக்கார அங்கதான் ஒரே எடம்.’

‘சரி வா. போலாம்’

போட்டிருந்த சிகப்பு சட்டையை கழட்டி ஓடையில் முக்கி எடுத்தான் செங்காளை. முழங்கையை முறுக்கி சட்டையை பிழிந்தான். சாயத்தோடு சேர்ந்து ரத்தமும் சொட்டு சொட்டாய் வழிந்தது.

கண்ணில் மிரட்சி. என்ன பண்ண, ஓடித்தான ஆகணும். செஞ்ச வேல அப்படி.

ரோட்டு முனையில் இருந்து ஓடை தாண்டி வயலுக்குள் இறங்கினார்கள். வெறும் நிலா வெளிச்சம் தான். பாய்ச்சியிருந்த தண்ணி கலந்து மண் சேறாய் கால்களில் திலகம் இட்டது.

கிட்டத்தட்ட வந்து சேர்ந்தார்கள்.

‘தைரியமா இரு லே. நான் தான் இருக்கனே. பாத்துக்குவோம்.’ நழுவிய சாரத்தை கட்டிக்கொண்டே சொன்னான் இசக்கி.

அமைதி…

செங்காளை பேசவில்லை…

கையில் கோடாரி இன்னும் அப்படியே இருந்தது. கழுவி இருந்தாலும் ரத்தம் தெரிந்தது அவனுக்கு மட்டும்.

கண்ணோடு இருக்க முடியாமல் தவறி விழுந்து இரு சொட்டு கண்ணீர். திறந்த கதவை நோக்கி ஓடும் ஆடுகள் போல, இன்னும் பல துளிகள்.

‘இப்படி எல்லாத்தையும் கெடுத்துட்டன ல. எல்லாம் மயிராப் போச்சே’ கை நகங்களால் தன் மார்பைக் கீறினான் செங்காளை விரக்தியில்.

------------×----------

பொன்வெயில் கதிர்கள் முதுகில் மெல்லமாய் அடித்தது. சாயங்கால நேரம் தான் சமவெளியில். மாரி பாளம் பாளமாய் வெடித்திருந்த நிலங்கள் தாண்டி பம்புசெட்டுக்கு ஓடினான். பக்கத்தில் கிடந்த பெயிண்ட் டப்பா வாளியை கீழே வைத்து, அடித்து தண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான்.

“சீக்கிரம் கொண்டு வா லே. விழுந்தவன் மூச்சு திணறுதான் பாரு. அவன் வீட்டுல இருந்து வந்து நம்ம பொங்கவச்சிற கூடாது.” விழுந்து கிடந்த சுடலையை மடியில் வைத்துக் கொண்டு சத்தம் போட்டான் மாயாண்டி.

டாங்… டாங்.. டங் டாங்…

அடி பம்பு தாளம் போட்டது. நீர் நிரப்பி பக்கெட்டை எடுத்து கொண்டு ஓடினான் அவர்களை பார்த்து மாரி.

“ஆக்கங்கெட்ட கூவ… மண்டைல மடு அளவுக்கு மூள இருக்கா? பம்புசெட் தான… ஒரு அழுத்து அழுதுனா தண்ணி கொட்ட போது. இங்க இவன் மயங்குத்தான் வேற.” கடிந்து கொண்டே சுடலை முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

“எப்பா எந்திரிடா… உன் ஆத்தா வந்தா வஞ்சியே எங்கள தொறத்திரும். நல்லா இருப்ப. “

சுடலை கண்கள் கொஞ்சம் திறந்து மூச்சி சீராக விட்டான்.

ஆசுவாசப்பட்டர்கள் எல்லாரும். மாயாண்டி அடித்த ரப்பர் பந்து குறுக்கே கிட்டிப்புள்ள விளையாடிய சுடலை மேல் பட்டு தான் இத்தனை அலப்பறை.

“வயக்காடுல நாங்க தான் கிரிக்கெட் ஆடுறோம்ல… உங்களுக்கு வேற எடமா இல்ல.. அங்க எங்குட்டாச்சும் போங்கல.. பெரிய பயலுவ கூட தான் சங்காத்தம் வேணுமோ” அதட்டினான் மாயாண்டி.

“மாயா. விடு விடு. காடு என்ன நமக்கா பட்டா போட்டுருக்கு! விடு.. பொண்டு பொடிசுக தான.. நமக்கு இந்த வய இல்லனா கிட்டு வய இருக்கு. கூட இருந்து அவரு பேசுறது கேட்டா நல்ல கவனிச்சிக்கிறாரு மனுசன்.” சொல்லிக்கொண்டே சுடலையை தட்டிக்கொடுத்தான் செங்காளை.

“அது சரி. நல்லா இரு டே. கொஞ்சம் அதட்ட விட மாட்டியே. சரி போவோம். மணி அஞ்சறை ஆச்சு. “

(நெல்வாடைகள் பகுதிகளாக தொடரும்)

   - அரன்

One thought on “களத்துமேடு : அத்தியாயம் 1

Leave a Reply to Tamizh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *