‘ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வீடு சார் இது’ என்று வீட்டு தரகர் வியனிடம் சொன்னார்.
வியனும் முதிராவும் அவ்வளோ பழைய வீடா என்று யோசிக்காமல், ஏதோ எதிர்பார்த்தது கிடைத்தது போல புன்னகைத்துக் கொண்டனர். ஆறு போர்சன்களாக பிரிக்கப்பட்டிருந்தது அந்த பங்களா. தரைத் தளத்தில் மூன்று வீடுகள் மற்றும் மேல் தளத்தில் மூன்று வீடுகள். ஒன்றாம் எண் கொண்ட வீட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். மீதி வீடுகளில் ஆட்கள் சீக்கிரம் வந்துவிடுவார்கள் என்று வீட்டுத் தரகர் சொன்னார். வீட்டை சுற்றி பச்சை, திரும்பிய இடமெல்லாம் செடிகள், எங்கும் வண்ணங்கள்,இயற்கை மற்றும் அமைதி முதிராவின் முகம் போல.
அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் உள் முற்றம், பிரெஞ்சு ஜன்னல்கள் மற்றும் தோட்டத்து இருக்கைகள். எப்பொழுது இங்கு வருவோம் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்றார் தரகர். வருத்தம் தான், இருந்தும் மனதிற்கு பிடித்த வீடு என்று நிம்மதி கொண்டார்கள். வீட்டை எல்லா கோணத்திலும் புகைப்படம் எடுத்தார்கள். திரும்பி செல்லும் பொழுது சில தூரம் கழித்து வீடு கட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. அந்த தெருவின் ஆரம்பத்திலேயே பல கடைகள் இருந்தது. சிறு குழந்தை போல கவனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் முதிரா. ‘எல்லாம் ஒகே தானே?’ வியன் கேட்டான். ஆம் என தலை அசைத்தாள். ‘நாளைக்கே அட்வான்ஸ் கொடுக்கிறேன்’ என்று தரகருக்கு மெசேஜ் அனுப்பினான் வியன்.
‘ஹே பால் பொங்க போகுது எல்லாம் வாங்க’ என்று முதிரா நண்பர்களை அழைத்தாள். எல்லாரும் ஃபோனை எடுத்தார்கள். ஒருவர் பூமராங் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார், ஒருவர் வீடியோ காலில் காதலிக்கு காண்பித்தார். ஒருவர் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். சில்வர் டம்ளர்களில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சக்கரை அதன் மேல் சூடான பாலை நீர் வீழ்ச்சி போல புகை பறக்க பறக்க ஊற்றினாள் முதிரா. உள் முற்றத்தில் நண்பர்களுடன் காபி குடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரிசார்ட் மாதிரி இருக்கு இந்த வீடு என்று ஒரு தோழி சொன்னாள், வியன் முகத்திலும் முதிரா முகத்திலும் ஒரே பெருமை. மதியம் புது வீட்டை கொண்டாட நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றார்கள். மேலும் வீட்டுக்கு தேவையானவை என்று ஷாப்பிங்கில் மாலை கழிந்தது. இரவு உணவு வெளியே சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பினார்கள்.
வீடு இருக்கும் பகுதியே மிக அமைதியாக இருந்தது, தெருவில் மங்கலான வெளிச்சம் இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு தெரு வெறிச்சோடி இருந்தது. வீடு கட்டும் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் புதிதாக வனத்திற்குள் வந்த மனிதர்களை வன விலங்குகள் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சட்டென பாதுகாப்பற்ற நிலை வந்தது போல மனம் பதறியது இருவருக்கும். தெருவின் முக்கில் தனியாக உயர்ந்திருந்தது அந்த பங்களா, நில ஒளியில் வெள்ளை சாயம் அடிக்கப்பட்டிருந்த அந்த பங்களா சிறு மலை போல மின்னி தெரிந்தது. யாரும் இல்லா அந்த பங்களாவுக்குள் இருட்டில் சென்றார்கள்.வாசலில் இருக்கும் விளக்கை போடும் வரை ஒரு வித பீதி மனதிலிருந்தது. பிடித்த வீட்டிற்குள் பிடிக்காத சூழலில் உள்ளே நுழைந்தார்கள். ஏதோ அமைதி இன்மை வியனுக்கு இருந்தது முதிராவுக்கும் தான் ஆனால் இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. படபடக்கும் இதயத்தோடு உறங்கினார்கள் இருவரும். அடுத்த நாள் சூரியனை காணவில்லை, கரும் மேகங்களுக்கு உள்ளே எங்கோ ஒளிந்து கொண்டு சிறு வெளிச்சம் மட்டும் உலகிற்கு தந்தது – மனிதர்களுக்கு மனிதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை போல.
மேலும் மூன்று நாட்கள் இதே தொடர்ந்தது. பிடித்த வீடு பிடிக்காமல் போய்விடுமோ என்று தோன்ற ஆரம்பித்தது, காலை மாலை இரவு என பார்க்கும் எந்த நேரமும் இப்படியே இருந்தது, மனதில் அமைதி இன்மை தொடர்ந்தது. அதுமட்டும் அல்லாமல் சில வாரங்களுக்கு முன், புது வீடு மாறுவதை குறித்து பக்கத்து வீட்டு நண்பரிடம் சொல்லும் பொழுது அவர் ஒரு முறை வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தார் ஆனால் அந்த வீட்டிற்கு சென்றதும் கெட்ட கெட்ட கனவுகள் வந்ததாகவும் தூக்கமின்மை அதிகமானதாகவும் சொன்னது வியனுக்கு நினைவு வந்தது. சில சமயங்களில், இல்லை! பல சமயங்களில் நம் அறிவு தேவையான சமயத்தில் தேவையற்ற நினைவுகளையும் நிலைமைகளையும் நினைவு கூறும், அது போல இந்த பொழுதும் அமைந்தது, மேலும் மன நிம்மதியை குலைத்தது.
அன்று இரவு அவன் எதிர்பார்த்த விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை ஆனால் மனதில் ஒரு விருப்பமில்லா நாடகம் ஒன்று அரங்கேறிக்கொண்டே இருந்தது. லேசாக கண் அசர ஆரம்பித்தான். யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது, ஏதோ சமையல் அறை பாத்திரங்கள் கிரீச்சிக்கும் சத்தம் கேட்டது. திடீரென சில மாதங்களுக்கு முன் தன் நண்பரின் நண்பர் வீட்டில் களவு போன கதை நியாபகம் வந்தது, இருந்தும் உடல் அசதியால் தூக்கம் கலையவில்லை. சிறுது நேரத்தில் அமைதி மற்றும் இருள் என தூக்கம் ஆழமடைந்தது, திடீரென முதிரா கூக்குரலிட்டாள், ஆழத்திலிருக்கும் முத்துக்குளிக்கும் முத்துகுளிப்பவர் கடலின் மேல்மட்டத்திற்கு சீறி எழுவது போல எழுந்தான் வியன், முதிராவை தட்டிக்கொடுத்தான். அவளும் சிறிது கலைந்திருந்த தூக்கத்தில் அந்த ஆறுதலை ஏற்று அமைதியடைந்தாள். ஆனால் வியனின் கலைந்த தூக்கம் கலைந்தது தான். காலை நான்கு மணிக்கு தான் தூக்கம் வந்தது. மறுநாள் இதைப்பற்றி பேசியாக வேண்டும் என்று வியனும் முதிராவும் காலை முதல் யோசித்துவந்தார்கள், மதிய உணவின் பொழுது இருவரும் பேச ஆரம்பித்தார்கள். இங்கு வந்த பின் இருக்கும் அசௌகரியங்களை அடுக்கி வைத்தார்கள். மேலும் சில நாட்களில் வீடு மாறிவிடலாம் என்று கூட யோசித்தார்கள். அன்று மாலை வியன் தன் நண்பருடன் வெளியில் சென்றிருந்தான், அப்பொழுது அவரிடம் ‘இன்னும் புது வீடு என்னோட வீடுன்னு தோணல’ என்றான். ‘அது உன் வீடு இல்லை நீ வாடகைக்கு இருக்க’ என்று சொல்லி நகைத்தான். ‘கொஞ்சம் பெட்டர் ஜோக் ட்ரை பண்ணியிருக்கலாம், சரி. நாம எங்கயாவது வெளிய போனா நம்ம வீட்ல போயி கால நீட்டி படுக்கணும்னு தோணும்ல அந்த பீலிங் இந்த வீட்ல இல்லை’ என்றான் வியன். ‘உங்களுக்கு புடிச்ச மாதிரி வீட்டை மாத்துங்க, அது தான் முதல் படி. அது போக கிளைமேட் வேற சரியில்லை அதனால கூட இருக்கலாம். ‘ என்றான் வியனின் நண்பன்.
அதே சமயம் முதிரா அவளின் வழக்கமான வாக்கிங் நண்பர்களுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது புது வீட்டில் இருக்கும் அசௌகரியங்களை சொன்னாள். ‘இதெல்லாம் ரொம்ப நார்மல், போக போக பழகிடும்’ என்று ஒரு நண்பர் சொன்னார்.’ இல்லை எங்க காம்பௌண்ட்ல யாரும் இல்ல, அதுவே டௌட்டா இருக்கு ‘ என்றாள் முதிரா. அப்படி இப்படி என்று எதை சொன்னாலும் முதிரா மனம் ஏற்கவில்லை. அன்று இரவு – நாளை திங்கள் காலை என்று நினைத்து ஞாயிறு இரவு கவலையுடன் உறங்க போகும் பள்ளி குழந்தை போல தூங்கச் சென்றனர். தூக்கத்தில் உடல் உபாதைகள் வருவது போல இருந்தது காலையில் அதன் தடம் தெரியாமல் போனது. சிறிது யோசனைக்கு பிறகு அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்தான், ஆனால் அவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் வாஸ்து மற்றும் அமானுஷ்ய நம்பிக்கை அதிகம், அவர் சொல்லும் கதை மேலும் மன நிம்மதியை குலைக்கும். அதனால் வேண்டாம் என்று விட்டுவிட்டான்.
வியன் கடைக்குச் சென்றான், வெள்ளை ஒளி வீசும் பளிச்சிடும் விளக்குகள் வாங்கிவந்தான். வீட்டில் இருக்கும் மஞ்சள் விளக்குகளை அகற்றி வெள்ளை விளக்குகளை இணைத்தான், சுவிட்ச் போட்டதும் வீடு பட்ட பகலில் வீசும் சூரிய ஒளி போல பளிச்சிட்டது. மனதில் ஒரு மூலையில் சிறு நம்பிக்கை உதயமானது, அதன் தூண்டுதல் மாலை வரை சென்றது. வழக்கம் போல வியன் நண்பருடன் ஜிம்முக்கும் முதிரா வாக்கிங்-க்கும் சென்றார்கள், முதிரா முதலில் வீட்டுக்கு வந்தாள். அம்மா பக்கத்தில் இருந்தால்… எதுவும் செய்ய வேண்டாம், பக்கத்தில் இருந்தாலே போதும் ஒரு அசாத்திய நம்பிக்கை அது போல மாடி போர்சனில் வாசல் விளக்கு எரிவதை பார்த்து நம்பிக்கை அடைந்தாள். வியனும் வீட்டுக்கு வந்தான் மாடியில் விளக்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான், சிறு பிள்ளையின் பூரிப்பை அடக்கமுடியாமல் முகத்தில் காட்டிவிடுவது போல சிரித்த முகத்தோடு வியன் வீட்டின் உள்ளே வந்தான், முதிராவும் வியனும் கட்டியணைத்துக் கொண்டார்கள். அன்று இரவு ஏனோ தூக்கம் வழக்கம் போல வந்தது, அடுத்த நாள் சூரிய ஒளி கர்ட்டனை தாண்டி அவர்கள் முகத்தில் பட்ட பொழுது தான் எழுந்தார்கள். வீடெங்கும் குளிர் விலகியது , வெளிச்சம் பூத்து குலுங்கியது.
