கதவு

ஆசிரியரும் கவிஞரும் ஆன தமோஸ், தனக்கான ஒரு வீடு வேண்டும் என்று ஐம்பது வயதில் தான் தோன்றியது. தமோசின் ஜென் வாழ்வியலையும் கவிதைகளையும் அவரது மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமோஸ் தனியாகவே வாழ்ந்துவிட்டதால் தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று தோன்றாமல் நாடோடியாகவே சில வருடங்களுக்கு ஒரு ஊர் என ஊர் ஊராக திரிந்து வாடகை வீட்டிலேயே இருந்துவிட்டார். லேசான பச்சை படிந்த பாறைகளுக்கு மத்தியில் மெல்லிய சூரிய கதிர் பாய்ந்த ஓடையில் குதித்த தமோஸ்க்கு அந்த நீரும் அந்த ஊரின் அடர்ந்த பச்சையின் நிறத்தின் இருளும், வண்ணங்கள் கசியும் பூந்தோட்டங்களும் அவருக்கு பிடித்துவிட்டது. அங்கேயே வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் ஒரு வீட்டைக்கட்டினார்.

அந்த வீட்டில் ஒரு சிறப்பு கதவு இருப்பதாக ஊருக்குள் ஒரு புரளி கிளம்பி இருந்தது, அதனாலேயே வீட்டின் புதுமனை புகு விழாவிற்கு காத்திருந்தனர் மக்கள். அந்த நாளும் வந்தது , பல பேர் கூடியிருந்தனர்… ஏன் வனச்சரக அதிகாரிகள் கூட வந்திருந்தார்கள். மக்கள் சிறப்பு கதவை பார்த்ததும் வியந்தார்கள் இப்படியும் ஒரு கதவு இருக்குமா என வியந்தனர். சிலர் வியந்து தமோசை சில வினாடிகள் பார்க்கவும் செய்தார்கள். உலகில் இப்படி ஒரு கதவை யாரும் யோசித்து இருக்கவோ இல்லை வீட்டில் வைக்கவோ முடியாது. அப்படி இருந்தாலும் மிகப் பெரிய செல்வந்தனால் மட்டுமே முடியும். ஒரு ஆசிரியருக்கு இப்பேர்ப்பட்ட துணிச்சலா என்று நினைத்தார்கள்.

கதவின் சலசலப்பு அடங்கி சில நாட்கள் இருக்கும். அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒரு மதுக்கடை, அந்த மதுக்கடையின் ஒரு ஓரத்தில், உடலையும் சுற்றுபுறத்தையும் சூடாக்கும் குண்டு பல்புக்கு அடியில் ஒரு பிளேட் மூளை வருவலுடனும் ஓல்ட் மாங் குவாட்டர் உடனும் அமைதியில் ஒருவன் அமர்ந்திருந்தான். இரவு ஒன்பது மணி அளவில் ஐஸ் கட்டிகளில் மூழ்கிய தன் ரம்மின் முதல் ரவுண்டு குடியை ஆரம்பித்தான். அந்த மூலை வறுவலை அவன் உண்ணும் அழகே அழகாய் இருந்தது, வருவலின் மொறு மொறு மேல் பகுதியை முடித்த பின் அதன் உள்ளே மிக மென்மையான, வழுவழுப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்திருக்கும் சதையில் லேசாக ஒட்டியிருக்கும் மசாலா சுவையில் லயித்து மேலும் ஒரு வாய் குடித்தான். பதினோரு மணி அளவில் இறுதி ரவுண்டு ரம்மை முடித்துவிட்டு, குடித்ததற்கான பணத்தை செலுத்திவிட்டு லேசான தடுமாற்றத்துடன் கடையின் வாசலில் நின்றிருந்தான். அப்பொழுது கடையின் உள்ளே சென்றுகொண்டிருந்த இருவரில் ஒருவன் ஆசிரியரின் வீட்டைப் பற்றியும் அந்த வீட்டின் சிறப்புக் கதவு பற்றியும் சொல்ல ஆரம்பித்தான், ஆனால் அவர்கள் முழு விவரம் சொல்லும் முன் உள்ளே சென்றுவிட்டார்கள். அவன் அவர்களை திரும்பி பார்த்தான், அவர்கள் அமரும் இடத்திற்கு அருகில் இடம் இருந்தது. ஆனால் அவன் உள்ளேயும் செல்லவில்லை, அவர்கள் அருகில் அமர்ந்து மேலும் தெரிந்துக்கொள்ளவும் விரும்பவில்லை. அவனுக்குத் தெரிந்தவை ஆசிரியரின் வீடு இருக்கும் இடம் மற்றும் அந்த வீட்டில் இருக்கும் சிறப்புக் கதவு. ஒரு திருடனுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டும் செய்தி உண்டா. கௌஷிக்-க்கு ஆர்வம் அலை மோதியது.

கௌஷிக் அந்த வீட்டிற்கு வந்தடைந்தான் , மதிலேறி குதித்தான் அந்த சிறப்புக் கதவை பார்த்தான். அந்த கதவில் ‘இது திருடர்களுக்கான வழி ‘ என்று இருந்தது. அதை பார்த்து கௌஷிக் வியந்துவிட்டான். அட இப்படியும் மனிதர் இருக்க முடியுமா என்று நினைத்தான், கதவு நிச்சயம் திறக்காது என்று நினைத்து கைப் பிடியை கீழ் நோக்கி அழுத்தினான். டப்பென ஒரு சத்தம், கதவு திறந்தது, இது கண்டிப்பாக திருடர்களை பிடிக்கும் ஒரு யுக்தியாக இருக்க வேண்டும், மேலும் ஒரு அடி எடுத்து வைக்கக் கூட தயங்கினான். சரி துணிச்சலாக சிறு அடிகளாக நகர்ந்தான். அந்த வழி ஒரு அறைக்கு இட்டுச்சென்றது , இப்பொழுது நிச்சயம் தெரிந்துவிட்டது இது எலி பொறி போன்ற விவகாரம் தான் என்று. அந்த அறையை அவன் பார்த்தான் ஜன்னல் திறக்கப்பட்டிருந்தது, இருட்டுக்கு பழகி இருந்த அவன் கண்களுக்கு நிலவின் ஒளியில் அறை பளிச்சென தெரிந்தது. அங்கே ஒரு அலமாரி இருந்தது நல்ல கட்டையில் செய்திருக்க வேண்டும், அதன் பருத்த உருவமும் நிலவொளியின் பிரதிபலிப்பும் அவன் கண்களை தூண்டியது, அதனை தொட்டுப்பார்த்து ஒரிரு நிமிடங்கள் மகிழ்ச்சி அடைந்தான். அந்த அலமாரியின் கைப்பிடியை பிடித்திழுத்தான், திறக்காது என்று நினைத்தான், அலமாரி திறந்தது அதனுள் மேரி மாதா உருவம் பதித்த சிறு பெட்டகம் இருந்தது. அது கண்டிப்பாக திறக்கும் என தெரிந்தும் ஒரு சின்ன படபடப்பு ஏற்பட்டது. கௌஷிக் துணிந்தான், பெட்டகத்தை திறந்தான் , அதுவும் திறந்துவிட்டது. அதனுள் இரு கட்டு ரூபாய் நோட்டுக்கள், கௌஷிக்-க்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது. அந்த ரூபாய் நோட்டுக்களுடன் திரும்பினான். இப்பொழுது எலி தேங்காய் துண்டில் வாயை வைத்துவிட்டது என்று நினைத்தான், பொறி மூடப் போகிறது என்று பதறிக்கொண்டே வாசலை நோக்கி நடந்தான். பதட்டத்துடன் ஒவ்வொரு அடியையும் வைத்தான். வந்தது போலவே போகும் பொழுதும் எந்த தடங்கலும் இல்லை அவன் வெளியே சென்றுவிட்டான், ஒன்றும் புரியாத கௌஷிக்-க்கு அந்த வியப்பிலும் குழப்பத்திலும் ஒரு வாரம் கழிந்தது.

அடுத்த வாரம் வந்தது, திருடனும் அதே வீட்டிற்குச் சென்றான். இந்தமுறை ஆசிரியருக்கு அறிவு வந்திருக்கும்னு நினைக்குறேன் என்று நினைத்துக் கொண்டான், ஆசிரியருக்கே பாடம் புகட்டிய மிதப்பில். கதவை திறந்தான் மீண்டும் திறந்து கொண்டது , எலிப் பொறிக்குள் நுழையும் அனுபவம் இந்த முறையும் இருந்தது. பணத்துடன் வெளியே வந்தான். குடித்தே தீர்த்தான். அடுத்த மாதம் மீண்டும் சென்றான் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த முறை அந்த ஆசிரியரை எழுப்பி கேட்டுவிடவேண்டும் என்று கடுப்பேறியது. அதனாலேயே கூட நிறைய குடித்திருக்கலாம். ஒரு முழு வாரம் தீவிர யோசனையில் இருந்தான் கௌஷிக்.

இந்த முறை அந்த ஆள எழுப்பிடுவோம் என்று நினைத்துக் கொண்டான், ஒரு மாற்றத்திற்காக கௌஷிக் அன்று குடிக்கவில்லை. மிக துணிச்சலுடன், தீவிர முடிவுடன் சென்றான். கதவை திறந்தான்- இந்த முறை ஒரு பயமும் இல்லை, கதவின் பிடியை கிணற்றின் கயிறை பிடிப்பது போல் இறுக்கி பிடித்து திறந்தான்.நேராக அந்த அறைக்குச் சென்றான், அலமாரியை திறந்தான், பெட்டகத்தை திறந்தான். பணமும் இருந்தது. அங்கேயே நின்றுவிட்டான், அறையை முதல் முறையாக முழுவதும் பார்த்தான். நிலவின் ஒளி ஜன்னல் வழியே அறைக்குள் லேசான வெளிச்சம் பரப்பி இருந்தது. அந்த ஜன்னல் வேறு ஒரு உலகிற்கான வழி போல இருந்தது. அதன் அருகே சென்றால் அதனுள் இழுத்துக்கொள்ளுமோ என்று பயம் ஏற்படுத்தும் ஈர்ப்பு அந்த ஜன்னலில் இருந்ததாக உணர்ந்தான் கௌஷிக். கதவை திறக்கும் போது இருந்த தைரியம் அந்த ஜன்னல் அருகே செல்லும் பொழுது இல்லை. இருந்தும் அதன் அருகில் சென்றான், வானம் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தியது நிலவும் நட்சத்திரமும் ஏதோ அவனை செய்தது. வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தான், கை ஒரு புத்தகத்தின் மேல் இருப்பதை போல உணர்ந்தான் கௌஷிக். அதன் பெயரை பார்த்தான் ‘ ஜென் கவிதைகள்’ என்று இருந்தது. அந்த புத்தகத்தை திறந்தான். சிறிது தூரத்தில் டப் என எலி பொறி மூடும் சத்தம் கேட்டது.

****முற்றும் ****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *