அந்த நாள் எப்படியோ ? இரவு என்ன உணவோ? எதுவும் தூங்க போகும் போது நினைவுக்கு வருவதே இல்லை ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் மட்டும் வருகிறது. ஒளி இல்லாததனாலா இல்லை ஒலி இல்லாததாலா ? மின் விசிறி இறக்கை சத்தம் மட்டும் இல்லையெனில் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிறதே. ஒயிட் நாய்ஸ் என்கிறார்கள், மின் விசிறி சத்தம் இதர அச்சம் தரும் சத்தங்களை தவிர்க்கிறதாம்.
சட்டென மின் துண்டிப்பு ஏற்பட்டால் வீடெங்கும் நிறையும் மௌனம் மூளையை குடைவது ஏன். ஏதாவது மெல்லிய சத்தம் தேடி மனது அலைகிறது. அலைகிறது என்றால் உச்ச பசியில் இருக்கும் விலங்கோ இல்லை மனிதனோ உணவிற்கு அலையும் அல்லவா, அந்த அளவுக்கு மௌனம் ஒருவரை நிம்மதி இன்றி செய்கிறதே.
அனல் பறக்கும் பகல் வாழ்க்கையில் எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத பூச்சிகள் இரவில் பெரும் ஓசை எழுவது எப்படி ? நாய்கள் அழும் சத்தம் மனதில் இடி போல இறங்குகிறது. பொதுவாக இது போன்ற மூட நம்பிக்கைகள் இல்லை, ஆனால் ஒரு முறை வீட்டின் வெளியே நாய்கள் ஊளையிட்டது, வீட்டில் அம்மா பயந்தாள், தைரியம் சொல்லி உறங்க சென்றோம் ஆனால் அடுத்த நாள் வீட்டில் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. வீட்டில் ஒருவரின் மரணம் தரும் பயம் இருக்கிறதே அனைத்தையும் நம்ப வைக்கும் இது கோ-இன்சிடென்ஸ் என்று மூடநம்பிக்கையை தட்டி கழிக்கமுடியவில்லை, அடுத்து வீட்டின் அருகில் எங்கு நாய்கள் அழுதாலும் பயம் தர தான் செய்கின்றது.இப்படி கோ இன்சிடெண்ட்ஸ் மட்டும் நிகழவில்லை என்றால் கடவுள் நம்பிக்கையும் இல்லை மூட நம்பிக்கையும் இல்லை. சாலரத்தின் அருகில் பூனை அழும் சத்தம் மனித குழந்தை அழுவது போல இருக்கும். அது தரும் சங்கடம் காதுகளை கிழித்துவிடலாம் என்று தோன்றும். எங்கோ தூரத்தில் கூக்குரல் இடும் ரயில் ஓசை மூன்று கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தண்டவாளத்தை உணர செய்கிறதே. அந்த ரயிலின் வேகம் தரும் ஓசை எவர் மீதோ ஏறி இருக்குமோ? என்றும் ஒரு மின்னல் வேக எண்ணம் மனதை வெட்டியது. வீட்டில் ஒருவர் தினம் ரயில் பயணம் செய்கிறாரே? இப்பொழுது அது ஏன் நினைவுக்கு வருகிறது. சட்டென மாய உருவங்கள் தெரிந்து மறையும் விசித்திர உலகம், இரவு.
இரவில் வெறும் இரு நிறங்கள் தான் இருட்டு மற்றும் லேசான இருட்டு. எங்கோ ஒற்றையாய் சல சலக்கும் மரத்தின் ஓசை ரோட்டில் செல்லும் மனிதர்களின் தைரியத்தை சோதிக்கிறது. லேசாய் வியர்வையில் ஈரமான தலையணை அதை திருப்பி போட்டு படுப்பதற்குள் வீட்டின் கூரை மேல் என்ன சத்தம், என்னவென்று கூட தெரியாமல் லேசாய் தொண்டையை செருமி திருடனையோ பூனையையோ உள்ளே ஆட்கள் இருக்கிறோம் ஆகவே உள்ளே வராதே என்று உஷார்படுத்தும் மனது பயத்தின் உச்சம் தானே ? இல்லை பொறுப்புணர்ச்சியா? பகலில் குழந்தைகள் கூட மிரளா இடுகாட்டின் வழியே மன சஞ்சலம் இல்லா இரவு நடையும் மனிதர்கள் நடந்தது உண்டோ? நிச்சயம் இருக்காது அப்படி இருப்பின் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுள் பாட்டோ அப்படி கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் குத்து பாட்டோ பாடி நடப்பவர்கள் தான் அதிகம். இரவு பணி முடித்துவிட்டு காதுகளில் பாடல் கேட்டுக்கொண்டே வரும் பொழுது அப்பப்போ திரும்பி பின்னாடி யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறோம். பேய்களை நம்புவோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே ! முரண்பாடு . ஆனால் முழு நம்பிக்கை வைப்பதில்லை, கடவுளால் கூட நம்மை பேய்களிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று மனம் பதறத்தான் செய்கிறது.
வயதானவர்களோ, இன்றோ கடைசி இரவு என்ற எண்ணத்தோடு உறங்கும் இரவுகள். நாளை வாழ்வுக்கு என்ன செய்வது? அன்றாடங் காட்சியின் வருத்தம் நிறைந்த மனதின், ஆற்றலை மீறும் உடல் உழைப்பின் அசதி. வீட்டின் பொறுப்பை தாங்கும் இடிதாங்கிகள் நெஞ்சில் ஏதோ வலிபோல இருக்கிறதே, லேசாய் மயக்கம் போல இருக்கிறதே என்று உடலின் ஒவ்வொரு மாற்றத்தையும் பெரும் பிரச்சனையை பாரும் மனது தான் இரவில் மட்டும் கூச்சல் இடும் இரவு பூச்சிகளுக்கு சமம் தானே. என்னையே அறியாமல் தூங்கிவிட்டேனா என்று அரை தூக்கத்தில் நினைவுக்கு வந்ததும் மீதி அரை தூக்கம் கண்களை திறக்கவிடாமல் மூடிக்கொள்கிறது, ஏதேதோ கனவுகள் அனைத்திலும் பொதுவான விஷயம் ஆழ் மனதின் பயங்கள் தானே? சாயங்காலம் வடை சாப்பிட்டது கூட நினைவில்லாமல் நெஞ்சு வலியென்று நள்ளிரவில் இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனை தேடி அலைவது ஏன். இதயம் லேசாக அதிகம் துடித்தாலோ இல்லை மூச்சை நன்றாக இழுத்து பெரும் மூச்சு விட்டாலோ நமக்குள் பயம் வந்து அதை மேலும் துல்லியமாக உணர செய்கிறது.
உண்மையில் மனிதன் உறங்குகிறானா ? இந்த ஓசைகள் இன்றி உறங்க கூட முடியா இரவுகள் ஆகிவிட்டதே. இரவானால் நாளை எழுவதே பெரும் வெற்றி என்று தோன்றுகிறதே! பகலில் வெளிச்சம் தரும் ஆணவம் அடங்கி விடுகிறதோ. பூக்கள் வெடித்து பூக்கும் சத்தம் கூட கேட்கிறது கூடவே ஏதோ ஒரு மோட்டார் வாகனம் காலி ரோட்டை அனுகூலமாய் வேகமெடுக்கும் சத்தமும் கேட்கிறது.
ஒருவர் மற்றோருவர் கனவில் இருந்தால் தூக்கம் வராது என்பார்கள் அப்படியானால் காதலர்கள் காலை பத்து வரை உறக்கம் கொள்வது எப்படி ? இல்லை உறக்கம் இல்லாமல் அலையும் மனிதர்களை அத்தனை பேர் விரும்புகிறார்களா! செயற்கை சத்தங்கள் அடங்கி உலகின் ஓசையை கேட்கும் தன்மை இல்லையோ இந்த காதுகளுக்கு, இருவது ஆயிரம் ஹெர்ட்ஸ் க்கு மேல் உலகம் ஒலிக்கிறதா. மின்சார ஒளிகளில் பழகிய கண்களுக்கு இரவின் வெளிச்சம் மிக குரூரமானது தான்.
வெளிச்சம் தரும் வெறியும், ஆணவமும் மற்றும் எல்லா உணர்வுகளும் நாடகமா? அப்படியானால் இது எதையும் மதிக்காமல் தூக்கமும் அமைதியும் தான் வேண்டும் என்கிறதே மனம். பகல் செயற்கை இரவு இயற்கை. இரவு குரூரமானது தான்!