எழுத்து: சபரி சாவித்திரி
எப்பவுமே ஒரு டவுனுக்கு கொஞ்சம் தொலைவுல வேற ஒரு உலகம் வாழ்ந்துக்கிட்டு இருக்கும். நகர புழுதி காத்தை வெறுத்து, மரத்துக்கு அடியில் கைத்து கட்டில் போட்டு படுப்பதையே ரிடயர்மென்ட் பிளான் ஆக வைத்து இருக்கும் மக்கள். அப்படி ஒரு ஊரை நோக்கி செல்கிறான் பரி.
குஜிலியம்பாறை மெயின் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் பரணி ஹோட்டலில் சூடா இட்லி மற்றும் வடை இல்லனா பொங்கல் மற்றும் வடை சாப்புடாம பக்கத்துல இருக்க எந்த கிராமத்துக்கும் வெளியூர்க்காரங்க போறதில்ல. இதுவும் ஒரு வகை டோல் கேட் மாதிரி தான். பரணி ஹோட்டல் பக்கத்துல பரணி ஸ்வீட்ஸ் மற்றும் பரணி பழமுதிர்சோலை இருக்கு, இப்படி ஒரு அமைப்பு எல்லா பெரிய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கும். பஸ் ஸ்டாண்ட் னு சொன்னதும் தான் நியாபகம் வருது இது பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்க பரணி ஹோட்டல். புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்க நியூ பரணி ஹோட்டல் கிடையாது. பரணி ஸ்வீட்ஸ் ல அரை கிலோ காரா பூந்தி மற்றும் அரை கிலோ ஜாங்கிரி வாங்கிக்கிட்டு குஜிலியம்பாறை பரணி ஸ்வீட்ஸ் னு போட்டிருந்த பிளாஸ்டிக் டப்பா மேல ரெண்டு ரப்பர் பேண்ட் போட்ட பார்சல் எடுத்துக்கிட்டு மேலும் ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக்கிட்டு பையோ-டீக்ரேடபெல் கவரில் எடுத்துக்கொண்டு பரியும் கனியும் மாம்பட்டை கிராமம் நோக்கி தன் காரின் வேகத்தை செலுத்தினார்கள்.
மாம்பட்டை கிராமத்தின் ஆளில்லா பஸ் ஸ்டாப் தாண்டி மலைகள் நிழலில் இருக்கும் விவசாய நிலத்தின் ஊடே மண் ஒட்டிய தார் சாலையில் கார் சென்றது அதன் பிறகு சாலை கல்லும் மண்ணுமாக மாறியது ஆனால் சாலை காரின் வேகத்தை குறைக்கவில்லை, பரியின் கால்கள் வேகத்தை விரும்பாமல் ஊரின் அழகை ரசிக்க வேகம் குறைந்தது. மலைகளை உடைத்து மேடு பள்ளங்களை சமன் செய்து அதை விவசாய பூமியாக மாற்றுவார்கள், அது போன்ற ஒரு வேலை செய்து கொண்டிருந்தார் பக்கத்து காட்டில் இருக்கும் மாமா ரங்கன். இது இயற்கை அழிப்பது அல்ல இது இயற்கையை பயன்படுத்துதல்.
ஒரு சில நாலு ரோடு ஜங்ஷனில் மட்டும் பால் கம்பெனிகளின் பெரிய பெரிய பால் கேன்கள் இருந்தன. சில ஏக்கர் நிலத்துக்கு நடுவில் இருந்தது பரியின் மாமியார் வீடு. தெரு முக்கில் கார் வளைந்த உடனே மாமியார் வீட்டு நாய்க்கு தெரிந்துவிட்டது, படுவேகமாக காரை நோக்கி ஓடி வந்தது, காரோடு சேர்ந்து திரும்பி வீடு வரை வந்தது. வந்ததும் கனி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து நாய்க்கு போட்டாள். உறவுக்கார மாமா வந்ததும் வீட்டில் இருக்கும் குழந்தை கையில் மிச்சர் பாக்கெட் கொடுப்பது போல இருந்தது.
‘அம்மா’ என்று கூக்குரலில் கத்திக்கொண்டே கனி வீட்டிற்குள் சென்றாள். பொறுமையான நடையில் பரியின் மாமியார் சித்ரா வந்தார். ‘வா கனி’…’வா பரி’ என்று சித்ரா சொல்லிக்கொண்டே முகம் பூத்தது அது கண்கூடாக தெரியுற மாதிரி நிறுத்தாத புன்னகை செய்து கொண்டிருந்தார். ‘இட்லி எடுத்து வெக்கவா?’ உறக்கமாக சித்ரா கேட்டார். ‘சரி மா’ என்று சொன்ன படியே கட்டில் அறைக்கு உடை மாற்ற சென்றாள் கனி.
பரியும் அவனது மாமனார் விஜயனும் வழக்கமான விசாரிப்புகளுக்கு பின்னர், என்னென்னமோ விஷயங்களை பேசிக்கொண்டு இறுதியில் மெளனமாக புன்னகைக்கும் நிலைக்கு வந்தது. அறை நொடிக்கு ஒருமுறை பார்த்து புன்னகை செய்து கொள்வது. சிறிது நேரத்திற்கு இது தொடர்ந்து கொண்டே இருந்தது. சாப்பிட அமரும் வரை.
இட்லியும் தக்காளி குருமாவும் படு வேகமாக தொண்டையில் இறங்கும் போதே இன்று இரவு என்ன செய்யலாம் என்று பேச்சு எழுந்தது, பொதுவாக சப்பாத்தியை மாமியார் வீட்டில் செய்யாததால் சப்பாத்தி செய்யலாம் என்று முடிவெடுத்தனர். சாப்பிட்டுவிட்டு தட்டை மாமியார் எடுக்க வந்தார், பரி அதை அனுமதிக்காமல் அவசர அவசரமாக சாப்பிட்ட மீதியை தட்டில் போட்டு அதை தூக்கிக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான், தட்டை லேசாக குழம்பு கறைகள் அகலும்படி தண்ணீரில் அலசிவிட்டு சின்கில் போட்டுவிட்டு திரும்பினான். நேராக வேப்பமரத்தின் அடியில் அட்டியை போட்டான்.
மாலை நான்கறை ஆகி இருந்தது, பக்கத்து காட்டில் இருக்கும் கனியின் மாமா ரங்கன் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு சித்ரா ‘நா காப்பி கொண்டு வரேன் னு’ எழுந்தார். ‘இல்ல நா கொண்டு வரேன் ஆண்டி’ என்று பரி எழுந்தான். காப்பி பரிமாறிய பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் உட்கார்த்திருக்கும் போது ‘என்ன டேட்டா சயின்டிஸ்ட் வேலைக்கு படு டிமாண்ட் ஆமே ?’ ரங்கன் பரியிடம் கேட்டார். ஆச்சரியத்தில் உறைந்தான் பரி ‘ஆமா ஆமா…’ மேலும் அதை விவரிக்க செய்தான் பரி. காப்பியை குடித்த பின் மகிழ்ச்சியாக ரங்கனும் சென்ற பிறகு. ‘ஆண்ட்டி காப்பி நல்லா இருந்ததா?’ பரி கேட்டான். ‘நல்லா இருந்தது பரி’ சித்ரா சொன்னார். விஜயனும் நல்லா இருந்தது என்பது போல தலையை அசைத்தார்.
இரவு தொடங்கியது, சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பிக்க சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தான் பரி. ‘என்ன பரி உருட்டிக்கிட்டு இருக்க ? தள்ளு நா எடுத்துத் தரேன்’ சித்ரா சற்று ஒதுங்க சொல்லி மாவு டப்பா வை எடுத்துக் கொடுத்தார். சப்பாத்தி மாவுக்கு தண்ணீர் ஊற்ற ஒரு பாத்திரத்தை எடுத்தான் பரி. ‘அந்த பாத்திரம் வேண்டாம் இந்த பாத்திரம் எடுத்துக்கோ என்று சொன்னார் சித்ரா. சப்பாத்தி மாவு பிசையுறப்போ கொஞ்சம் எண்ணெய் ஊத்தினா நல்லா இருக்கும் என்று அம்மா சொன்னது ஒவ்வொரு முறை சப்பாத்தி பிசையும் போது பரியின் நினைவுக்கு வருவது வழக்கம். இந்த கொஞ்சம் எண்ணெய் அப்படிங்கிற அளவுகோல் ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும், பரி அவங்க வீட்டு வாடிக்கை போல எண்ணெய் ஊற்ற அது சித்ராவுக்கும் அதிகமா தெரிஞ்சது. ஏன் இவ்வளோ எண்ணெய் ஊத்துற என்று கேட்டாள் சித்ரா. அதை விவரிக்க முற்பட்டான் பரி அதற்குள் கனி தலையிட்டு காரணத்தை தெரிவிக்க செய்தாள்.
‘மாவு கொஞ்சம் பதப்படட்டும் நாங்க வாக்கிங் போயிட்டு வர்றோம்’ பரி சொல்லிவிட்டு மயிலின் கத்தும் குரலை கேட்டு அந்த பக்கமாக வாக்கிங் தொடங்கினர். வழக்கமான சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக வந்து கொண்டிருந்தான் பரி. ‘ஏன்டா டல் ஆ வந்துகிட்டு இருக்க?’ கனி கேட்டாள். ‘அது ஆண்டி நெறைய இன்ஸ்ட்ரக்சன் தர மாதிரி இருக்கு, ஒரு மாதிரி ஈகோ ஹுர்ட் ஆன மாதிரி இருக்கு’ பரி சொன்னான். ‘நீ முதல் முறை இங்க சமைக்கிறதுனால அப்படி சொல்றாங்கன்னு நினைக்குறேன்’ கனி சொன்னாள். ‘ஹ்ம்ம் இருக்கும்’ பரி சொல்லிவிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைய செய்தான்.
இரவு சப்பாத்தி சுட ஒரு தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்தான். அதே நேரம் விஜயன் ஒரு ஆம்லேட் கேட்க இன்னொரு தோசை கல்லை எடுத்து வைத்தான் பரி. இங்கே முட்டை பொரிந்து கொண்டிருக்கும் போது சப்பாத்தி வைத்திருந்த கல் லேசாக புகை விட துடங்கியது. அந்த நேரம் பார்த்து சித்ரா சமையல் அறைக்கு வந்தார். என்ன பரி ஒரே புகையா இருக்கு, அப்பொழுது தான் அடுப்பின் மேல் வைத்திருந்த தோசை கல்லை கவனித்தார் சித்ரா, சட்டென அடுப்பை அணைத்தாள் சப்பாத்தி கல்லை மாத்தி வைத்துவிட்டாய் என்று பரியிடம் சொல்லிவிட்டு கீழ் அலமாரியிலிருந்து கனத்த கல் ஒன்றை வைத்தார். அடுப்பில் இருந்து எடுத்த கல்லை வாஷ்பேசினில் போட்டுவிட்டு சித்ரா மீண்டும் ஹாலுக்கு சென்றார். பரிக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை, சட சடவென நடந்து முடிந்ததை எண்ணாமல் மேலும் சப்பாத்தியை சுட்டுக்கொண்டிருந்தான் பரி. அவன் முகம் வாட்டம் அடைந்ததை கவனித்தாள் கனி.
இரவு உணவு முடிந்தது, படுக்கை அறைக்கு வந்தனர் பரியும் கனியும், பரி ஆரம்பிக்கும் முன்னரே கனி ஆரம்பித்தாள் அவன் வருத்தத்தை ஆறுதல் பண்ணலாம் என்று ஆனால் பரியின் முகம் வாட்டத்திலிருந்து கடுகடுப்புக்கு மாறியது, காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தான். பொறுமை இழந்த கனி ‘இரண்டாயிரம் வருஷமா இது தான் உங்க இடம் ன்னு அடச்சி வெச்சிட்டோம், அவங்க அது தான் உலகம் ன்னு இருந்துட்டாங்க, எங்க வீட்ல மட்டும் இல்லை உங்க வீட்லயும் இப்படி தான், அத்தையோட சமையல் அறை அவங்களோட உலகம் அதுல அவங்க ஆளுமை தான் இருக்கணும்னு நினைப்பாங்க, இத நீ புரிஞ்சிக்கோ, அவங்க வேணும்னு பண்ணல, ஏன் நா போய் சமைச்சாலும் இதுதான் நடக்கும்.’ கனி சொல்லிமுடித்தாள்.
‘அதுக்காக, முன்ன இருந்த ஆம்பளைங்க செஞ்ச தப்புக்கு நா அனுபவிக்கறதா?’ பரி சொன்னான்.
‘ஆமா, வேற வழி இல்லை. காக்கை குருவி எங்கள் சாதினு அப்படின்னு பாடுன பாரதியையே, வாக்குவாதம்ன்னு வந்தா பார்ப்பான்னு திட்டத்தானே செய்றாங்க! இரண்டாயிரம் வருஷத்துக்கு இருவது வருஷ முன்னேற்றத்துக்கும் ரேஷியோ எங்கயோ இருக்கே. இப்போ தான் சமையல் அறை விட்டு வந்திருக்கோம், சில வருஷங்கள்ல சரியாயிடும்.’ கனி சொன்னாள்.
முழுமையாக ஏற்று கொள்ளா விட்டாலும் ஏதோ ஒரு மாறியாக சமாதானம் அடைந்தான் பரி. அடுத்த நாள் காலை உணவிற்கு பரிக்கு பிடித்த வடகறி மற்றும் தோசை செய்தார் சித்ரா. தோசை அனைத்தையும் சுட்டு முடித்து சூடு ஆறாமல் இருக்க தோசை கல் மேலேயே வைத்து தட்டை மூடினார் சித்ரா. சிறுது நேரம் கழித்து அனைவரும் சாப்பிட ஹாலுக்கு வந்தார்கள், லேசாக கருகும் வாசனை வந்தது. சமையல் அறைக்கு விரைந்தார்கள் கனியும் பரியும். சித்ரா அடுப்பை அணைப்பதற்கு பதிலாய் சிம்யில் வைத்துவிட்டார். பரியும் கனியும் இதுதான் வாய்ப்பு என்று சித்ராவை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
‘என்ன ஆண்டி இது இப்படி கடாயை தீச்சிட்டீங்களே’ பரி சொன்னான் லேசான புன்னகையோடு.
‘அட என்ன மா’ கனியும் சேர்ந்து கொண்டாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் சித்ரா முழித்துக் கொண்டிருந்தார். சிரிப்பும் கும்மாளமாக அன்று கழிந்தது. மீண்டும் வீடு திரும்ப காரை ஓட்ட ஆரம்பித்தான் பரி, பக்கத்து காட்டில் இன்னும் சமன் செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது.
முற்றும்