மனைவிக்கு கடிதங்கள் 4
பாரதி போல பார்ப்பவையெல்லம் கவிதை ஆக்க முடியவில்லை எனக்கு. உவமைகள் எழுதி காதல் சொன்னது ஒரு காலம், சொல்வதற்கு உவமையே இல்லையென்று காதல் சொன்னதும் ஒரு காலம். எதார்த்தமாக சொல்வது இந்த காலம். எதார்த்தம்? பரவசம் இல்ல பக்தியும் காதலும் உண்டோ? கன்னத்தில் முத்தமிடும் பொது சிலிர்க்கும் காது மடலும் கூச்சம் ஏறும் தாடை முடிகளும் பற்றி எப்படி கவிதை எழுதாமல் இருக்க முடியும். எப்படி சொன்னால் என்ன சொல்கிறோமா என்பது தானே பொருள்.
காதலை சொல்ல வேண்டும் என்றதும் சில நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே புரியாத மொழியில் இல்லாமல் அவரவருக்கு புரிந்த மொழியில் ஒருவருக்கு ஒருவர் கணவனாகவும் மனைவியாகவும் சபதம் செய்து கொண்டனர். அதை பார்க்கும் பொழுது நாம் இப்படி செய்யவில்லை என்ற ஏக்கம் வந்தது. சட்டென எழுத ஆரம்பித்தேன், பல வரிகள் – குப்பை தொட்டியில் எக்ஸ்பைரி ஆன காய் கனிகளுடன் அவையும் எக்ஸ்பைரி ஆயின.
சபதம்:
இந்த இடத்தில் உன்னோடு நான் இருக்கிறேன். வாட்…! என்ற ஆச்சரியமே என்னை நிலை கொண்டிருக்கிறது. பாலை நிலத்தில் மகிழ்ச்சியாய் இருக்கும் தலைவி உண்டோ இல்லை கூடல் மட்டுமே இருக்கும் முல்லை உண்டோ ? அப்படி ஒரு ஆச்சரியம்.
இந்த காதலும் கல்யாணமும் எளிதாய் தெரிவது உன்னால் மட்டும் தான். சாரலில் நினைந்த பிறகு, வெறும் காற்றில் வரும் குளிர் போல தான் அடக்க முடியா காதல் நெஞ்சையும் வயிறையும் உறைய செய்கிறது.
நான் காதலில் இருக்கிறேன் ! அந்த உணர்வு மட்டுமே போதும் பரபஞ்சமே அறிந்த தெளிவு பிறந்தது அப்படி ஒரு இன்பத்தை கொடுத்த பெண் நீ. வாழ் நாள் முழுவதும் இந்த தெளிவும் காதலும் நீ இடம் இருந்து நான் பெற வேண்டும். நீ கொடுக்கும் அளவிற்கு நான் உன்னை பார்த்துக்கொள்ள வேண்டும்.
உன்னை பார்த்த முதல் நாள் அலுவலக நாற்காலியில் உன் அடர்த்தியான புருவங்களுக்கு கீழ் இருக்கும் கூர்மையான பார்வையை பார்க்கும் போதே தெரியும் நமக்குள் எதோ இருக்கிறது என்று, அது நாளுக்கு நாள் வளர்த்து கொண்டே தான் இருந்தது.
மழையில் நினையும் ஃபக் பிரயாணங்கள், குளிரிலும் கதகதப்பு. வெயில் காலத்தில் என் முதுகில் நீ சாய்ந்து வந்த தடமாய் வியர்த்த சட்டை. இவையெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை தான் அழகாய் இருந்திருக்குமா?
நீ என் காதலை ஏற்றுக் கொண்ட நாளை விட இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன், திருமணத்தில் ஆணின் கண்ணீர் எவ்வளவு அழகாய் இருக்கிறது. எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த புது பொறுப்பின் குழப்பம் தான் காதலோ ? இந்த புரியா உணர்வும் மீளா மயக்கமும் என்றும் எனக்கு வேண்டும் அதும் உன்னுடன்.
****