எழுத்து : சபரி
நான்கு மணி ரயிலில் அந்த பேர் இரைச்சலையும் தாண்டி அமைதியுடன் ஒரு மணி நேரம் கடந்தது, லேசாக இயல்பு நிலைக்கு வந்தோம். கண்மணிக்கு எங்களுக்கும், ஏன் எங்களுக்குள்ளும் ரொம்ப நாளாக தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டோம்.
இருந்தும் எனக்குள் என் மேல் ஒரு வெறுப்பு, என்னதான் பல தர்க்கங்கள் நான் எனக்குள் சொல்லிக்கொண்டாலும். தர்க்கங்களை மட்டும் கொண்டே நம் மனதை தேத்த முடியுமா? ஒரு லாஜிக்கல் எண்டு தேடும் மனதிற்கு வேண்டுமானால் தர்க்கத்தின் விளைவுகள் சாதகமாய் இருக்கலாம் ஆனால் விசனப்படும் மனதிற்கு தர்க்கங்களால் எந்தப் பயனுமில்லை. தான் இதுவரை செய்த தவறுகளால் அல்லது முடிவுகளால் தான் அந்த உயிரை இழந்தோம் எண்ணும் முடிவுக்கு வரும் எண்ணமே பொறுப்புணர்ச்சியின் உச்சம்தான், அந்த உயிரை சில முடிவுகளால் காப்பாற்றியிருக்க முடியும் ஆனால் அதைச் செய்யவில்லை அல்லது செய்யமுடியவில்லை என்னும் உணர்வுக்கு தர்க்கங்களால் தரக்கூடிய பதில் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதுதான், அது மேலும் அவர்களை அந்த உயிரிடமிருந்து தள்ளிப் போக செய்யுமென்பதனால் அவர்களே தர்க்கங்களை தேடுவதில்லை அதற்கு பதிலாக துயரப்படுவதின் மூலம் ஆறுதல் அடைகிறார்கள்.இதையெல்லாம் யோசிக்க திரணியும் தைரியமும் அந்த நொடியில் என்னிடமில்லை.
என்றோ ஒரு நாள் என் தாய் ஒரு பிரச்சனைக் காரணமாக தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக பேச்சுவாக்கில் சொன்னதை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வராமல் அம்மாவைக் கட்டிப்பிடித்து படுத்திருந்தேன், அம்மா செய்துகொள்ளமாட்டார் என்று என் மூலைக்குத் தெரியும் ஆனாலும் பதட்டமே பெரிதாக இருந்தது. அதேபோல் என்னை மீறிய துக்கம் கண்களில் அடைப்பெடுத்து கொட்டிவிடக்கூடாத என்று தோன்றியது.
கண்மணியின் வீடும் நெருங்கியது, பதட்டமும் படபடப்பும் அதிகமானது. அவளின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும். சொன்னால் மட்டும் அந்த இழப்பை நாம் திருப்பி தரமுடியுமா? பிறந்த நாள் முதல் நேற்று வரை இருக்கும் நினைவுகளை அழிக்கமுடியுமா ? அழித்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது மரணமில்லா விண்வெளியில் மிதக்கும் சிறு கோள் போல் மீண்டும் உயிர்த்தெழும். இல்லை அந்த நினைவுகள் மட்டும் தான் இனி அவளுடன் வாழ ஒரே வழி என்றால் வலி தந்தாலும் அந்த நினைவை அழிக்கத்தான் தோன்றுமா.
வரும் வழியில் பேருந்தில் கண்மணியை பற்றி யார் யாரோ அவர்களுக்கு தோன்றிய கருத்துக்களை பேசிக்கொண்டே வந்தனர். ஒருவரை கூண்டுப்பறவையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே அந்த பேச்சுகளில் தொனித்தது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் எண்ணம் அப்பொழுது இல்லை, கண்மணி இருந்திருந்தால் இதற்கு பதில் சலிக்காமல் சொல்லியிருப்பாள்.
கண்மணியின் வீட்டை நெருங்கிவிட்டோம், நான்கு டிகிரீக்கும் ரெண்டு டிகிரீக்கும் நடுவில் அவளை கண்ணாடி பேழையில் வைத்திருந்தனர். நெற்றிவரை பார்த்தேன், தோல் கருகிய நிலையில் இருந்தது அவளை மேலும் பார்க்க விருப்பமில்லை, நினைவில் நின்ற கண்மணியின் முகத்தை நான் மாற்ற விரும்பவில்லை, அடிவயிற்றிலிருந்து அழுகை கவ்விக்கொண்டு வந்தது, அழுகையும் இரும்பலுமாக அது அதிரும் குரலில் வெளிப்பட்டது. தொண்டையைக் கிழித்துக்கொண்டு உமிழ் நீர் உதடுவரை வந்தது சில வினாடிக்குள் அது உலர்ந்து உதடுகளின் ஓரத்தில் வெள்ளையாக ஒட்டிக் கரையாய் மாறியது, எனது குற்றவுணர்ச்சி போல். அமைதியாக இருந்த இரங்கல் கூட்டத்தில் எங்களின் அழுகுரல் அவர்களின் இதயத்தில் கண்மணியின் நினைவைத் தூண்டியது போல அனைவரும் இணைந்து கொண்டனர். திடீரென அழுகுரல்கள் ஓங்காரமாக மாறி காதுகளில் ஓலமாய் இசைத்துக் கொண்டிருந்தது. உடனிருந்த நண்பர்கள் மேலும் கதறிக்கொண்டிருத்தனர். செலெக்ட்டிவ் அம்னீஷியா போல் அந்த நாளை மறக்க நினைத்தேன்.
அவள் இல்லாமல் சில வருடங்கள் ஆகிவிட்டது, அவள் இல்லையென்று முழுதாய் உணரமுடியவில்லை. ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் கண்மணியின் எண்ணம் வராமல் இருந்ததில்லை. அடிக்கடி அவளை நினைத்தால் அவளின் அம்மா ‘கூடப்பொறந்தவங்க மாதிரி இருந்தீங்களேடா எப்படி டா அவள விட்டுக்கொடுத்தீங்க’ என்று சொன்னது தான் நினைவுக்கு வரும். கண்களில் பெருக்கெடுக்கும் நீர் நெஞ்சை நனைத்துவிடும். என் சப்கான்சியஸ் மெமரியில் பதிவாகிவிட்டாள் கண்மணி.
***முற்று***