இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 2

எழுத்து : சபரி

நினைவுகள் வலியும் வேதனையும் நிறைந்த பக்கங்கள், எப்பொழுதுமே அது புன்னகையை மட்டும் தருவதில்லை. சாயங்காலம் ஆஃபிஸில் தேநீர் சந்திப்பில் எங்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது, அதைப்பற்றிய கவலையும் இல்லை. இளமை என்றும் எங்கள் நட்பின் ஆணி வேறாக இருப்பது, டூ தி ஃபுல்லஸ்ட் ஆக கொண்டாடிய நாட்களாக அது இருந்தது.

அனைத்து ஷாப்பிங் மால்களுக்கு  சென்று பொழுதுகளை கழித்திருக்கிறோம், டீ.நகரில் ஒரு தெருவைக்கூட விட்டதில்லை, என்னுடைய பைக்கில் சந்து பொந்துகளில் சுற்றித் திறிவோம். ரோட்டுக் கடைகளில் தின்பண்டங்கள், காஸ்ட்லி ஹோட்டலில் உணவு என்றும் ருசிக்காத உணவு இல்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்து சென்ற இடமெல்லாம் சிரிப்பு; சிரிப்பு மட்டுமே, தவறிக்கூட யாரும் சீரியசாக பேசமுடியாது.

சார்மினாரும் சிக்கன் பிரியாணியும்

நாங்கள் அனைவரும் சென்ற மிக சிறந்த ட்ரிப் ஹைதெராபாத் பயணம் தான். ட்ரைனை ஓடிஓடி வந்து கடைசி பெட்டியில் ஏறி அடுத்த ஸ்டாப்பிங்கில் எங்களோடு இணைந்த ப்ரியா முதற்கொண்டு ஒவ்வொரு நொடியும்  இன்றும் பசுமை கொஞ்சம் கூட குறையாமல் நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. சார்மினார் சென்றிருந்தோம், ஹேமாவும் கண்மணியும் இரண்டு மணி நேரம் வணிக வீதியில் சுற்றி சுற்றி ஏதோ பார்த்துக்கொண்டிருந்தனர். ஹைதெராபாத்  சென்று பிரியாணி சாப்பிடவில்லை என்றால் எப்படி ஆனால் இவர்கள் ஷாப்பிங் வேகத்தை பார்த்தால் இன்னும் மூணு மணி நேரமானாலும் ஆச்சரியமில்லை அதனால் அவர்களுடன் சண்டைபிடித்து ஒரு வழியாக சிக்கன் பிரியாணி சாப்பிட்டோம். ஆஹா என்ன சுவை, நாம் வழக்கமாக சாப்பிடும் பிரியாணி போல் இல்லை அது, வேறு விதமாக இருந்தது. அடுத்த நாள் மிகப் பெரிய ராமோஜி பிலிம் சிட்டி சென்றோம், ஒரு நாள் போதவில்லை. பிரம்மாண்டம் எங்கும் பிரம்மாண்டம். ஒரு வினாடி கூட நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியவில்லை. பிலிம் சிட்டியில் ஒரு இடத்தில் படங்களில் எப்படி ஒரு சீனை எடுத்து கிராபிக்ஸ் போட்டு இசை அமைத்து கடைசியாக வெளி வரும் என்று லைவ்-வாக காண்பிப்பார்கள். ஆனால் அந்த படத்தில் நடிப்பது பார்வையாளர்கள் தான். கண்மணி அதில் நடிக்கச் சென்றாள் அவளுக்கு  உதவியாக நானும் மேடையேறினேன். கிராமத்துப் பெண் குதிரை வண்டி ஒட்டி வில்லன்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சி. ஆஹா அவளுக்கு என்ன பொருத்தமாய் இருந்தது அந்தக் காட்சி.
விண்டேஜ் கார்களுக்கு நடுவில் நானும் கண்மணியும் சல்சா ஆடும் காட்சி இன்றும் நினைவு பக்கங்களில் செல்லரிக்காமல் இருக்கிறது.

கணேஷும் கண்மணியும் மற்றும் நானும்

என் வாழ்க்கையில் பெரிய மரியாதையும் பங்கும் கொண்ட பல நண்பர்களை அறிமுகப்படுத்தியவன் கணேஷ் தான். கணேஷும் கண்மணியும் நானும் ஒரு நாள் காலையில் ‘ஜெய் ரோலக்ஸ்’ என்ற ஹோட்டலுக்கு சென்றோம். ஹோட்டல் பெயரை கேட்கும் போதே சிரிப்பாக இருந்தது, உணவு நன்றாக தான் இருந்தது ஒவ்வொரு வாய்க்கு ஜெய் ரோலக்ஸ் என்று கோஷமிட்டுக்கொண்டு கடைக்காரரை கேலி செய்துகொண்டே இருந்தோம். அன்று காலை முழுவதும் ஜெய் ரோலக்ஸ், ஜெய் ரோலக்ஸ் என்று சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். கண்மணிக்கு முதலில் இரங்கல் பதிவிட்டவன் கணேஷ் தான். ‘ஒரு தைரியமான மற்றும் கடினமான உயிர் நம்மை விட்டு சென்றுள்ளது. மிகச் சிறந்த போராளி, போட்டியாளர் மற்றும் மனிதி, என்றும் எங்கள் நினைவிலிருப்பாய்.’ என்று பதிவிட்டான். கண்மணியை இதைவிடச் சுருக்கமாக தெளிவாக எவரும்  சொல்லமுடியாது. கணேஷும் நானும் இருக்கும் போது கண்மணி சொன்ன வார்தைகள் ‘எனக்குள்ள ரெண்டு பேர் இருக்காங்க, பாசத்தில் பனிபோல் உருகும் ஒன்று,  கடப்பாறை கொண்டும் உடைக்க முடியா பாறை போல் ஒன்று’. அவளை அருகிலிருந்து பார்த்ததால் தெரிந்தது, அந்த வார்த்தைகளில் அவ்வளவு உண்மை. எனக்குள் முலைவிட்டிருந்த பெண்ணியவாதிக்கு பல உரையாடல்களில் தீனி போட்டவள். எல்லா விஷயங்களையும் முயற்சி செய்வாள். அவளுக்கு ஆண் பெண் பேதமில்லை, அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் வரும் டிரைவர் அண்ணா கண்டக்டர் அண்ணா முதற்கொண்டு அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவள்.  

ஹேமாவும் கண்மணியும் மற்றும் நானும்

எனக்கு எம்பி3 பிளேயர் பரிசளிக்க பார்த்துக்கொண்டிருந்தாள் கண்மணி, அவளுக்கு ஐபாட் பரிந்துரை செய்தது மட்டுமில்லாமல் ஹேமாவும் கொஞ்சம் காசுப்போட்டு இருவருமாக ஐபாட் கொடுத்தனர். அந்த வருடம் என் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன் தான் ஹேமா என்னுடன் அறிமுகமானாள், இரண்டே நாள் பழகியவனுக்கு பரிசளித்தாள் ஹேமா. அன்று ஆரம்பித்தது எங்கள் கிறுக்குத்தனத்தின் உச்சம் மேலும் மேலும் கிறுக்குத்தனம் நீட்சியடைந்து நீண்டுக்கொண்டே இருந்தது. நானும் கண்மணியும் ஹேமா அழைத்தாள் என்பதற்காக  என்ன படம் என்றே தெரியாமல் கூட சென்று பார்த்திருக்கிறோம். எங்கு சென்றாலும் போட்டோ ஷூட் தான். ஒரு முறை நான், கண்மணி மற்றும் ஹேமா வி ஐ பி படத்திற்கு சென்றிருந்தோம். அதில் ‘அம்மா அம்மா நீ எங்க அம்மா’ என்ற பாடலை பார்த்து நான் சிறு குழந்தை போல் கேவி கேவி அழுதேன், என்னை ஆறுதல்படுத்தி அதன் பிறகு என்னை பல நாட்கள் அதை வைத்து கேலி செய்திருக்கிறார்கள். கண்மணியின் அண்ணன் கல்யாணத்திற்கு நானும் ஹேமாவும் சென்றிருந்தோம். அன்று இதே நான்கு மணி ரயிலில் தான் சென்றோம். நாங்கள் இரவு முழுதும் பேசி சிரித்துக் கொண்டே இருந்தோம். அப்படி ஒரு ஆடம்பர கல்யாணம் அது, மல்டி கலர் சில்க் சாரி அணிந்திருந்தாள், உடலெங்கும் நகையென தேவதை போலிருந்தாள். எந்த பையன பெத்த அம்மாவும் இப்படி ஒரு பெண் அவர்களின் வீட்டு மருமகளாக வரவேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

டாலியும் கண்மணியும் மற்றும் நானும்

ரயில்வே பாலத்தின் மேலிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் ஹேமா மற்றொருவர் டாலி. ஹேமா மூலம் எனக்கு அறிமுகமானவள் டாலி. ஆனால் கண்மணியை முன்னமே தெரியும். அனைவரையும் விடவும் கடைசியாக நண்பனானவன் நான். டாலியின் அக்கா கல்யாணத்திற்கு நானும், ஹேமாவும் மற்றும் கண்மணியும் கடைசி இருக்கையில் ஆளுக்கு ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிமிடத்திற்கு மூன்றுமுறை வானுக்கு தூக்கி வீசும் அரசு பேருந்தில் சென்றோம். ரெட் கார்ப்பெட்டின் இரு பக்கமும் வரிசையாக ஒளிரும் விளக்குகள்  ஒவ்வொரு விளக்கும் கண்ணாடி சரங்களால் சூழ்ந்திருந்தது, எங்கும் விளக்குகள். அதன் இடையே சிவப்பு நிற அனார்கலியில் ஜொலித்துக்கொண்டிருந்தாள் கண்மணி. சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து நாங்கள் அனைவரும் செல்ஃபீகளை எடுத்து குவித்தோம். இரவு முழுவதும் பேசிப் பேசியே கடத்தினோம். டாலியும் கண்மணியும் மற்றும் நானும் கடைசியாக சந்தித்தது ஒரு பார்பிகியூ ஹோட்டலில் தான். அப்பொழுதே எங்களுக்குள் ஏதோ இடைவெளி வந்துவிட்டதை உணர்ந்தோம். அதை பற்றி நானும் கண்மணியும் காட்டிக்கொள்ளவில்லை ஆனால் இடைவெளி படர்ந்திருக்கும் விண்வெளி போல் இருந்தது.

இடைவெளியும் கண்மணியும் மற்றும் நானும்

இயல்பாகவே எங்கள் அனைவருக்குள்ளும் சிறு இடைவெளி வந்திருந்தது. நாங்கள் அனைவரும் வாழ்வின் அடுத்தக்கட்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். அதன் முடிவில் நண்பர்களிடமிருந்து தள்ளிப்போக வேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை ஆனால் அது அப்படித்தான் நடந்தேறியது. சந்தர்ப்பங்களும் நிகழ்வுகளும் தானே நம்மை ஆட்டி வைக்கிறது. கைக்கு அடங்கா வானம் போல தான் நிகழ்வுகள், ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டே நீண்டு படர்ந்திருக்கும். நடக்கும் யாவையும் நம் கையில் இருக்கிறது என்ற மாயையை உண்டாக்குவது தான் நிகழ்வு ஆனால் அது தான் நம்மை கையில் வைத்திருக்கிறது. நட்புகளின் பிரிவும் பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்று தான். ஏன் நடக்கும் எப்படி நடக்கும் எங்கே நடக்கும் யாருக்கும் தெரியாது. நம்மை அறியாமல் அது நடந்தே தீரும். கூட்டத்திலிருந்தாலும் ஒரு தனிமை, கண்மணியை பார்த்தும் பேசியும் நாட்கள் பல கடந்துக்கொண்டே இருந்தது. கடைசியாக நாங்கள் நன்றாக பேசிய நாள்கூட நினைவில் இல்லை. இன்றும் எனது நெருங்கிய நண்பர்கள் பலரிடம் நான் தினமும் பேசுவதில்லை ஆனால் கண்மணியிடம் பேசாமல் இருப்பதில் இருக்கும் குற்றவுணர்ச்சி மேலும் அவளிடமிருந்து என்னை தள்ளிப்போக செய்தது. அன்றாடம் அவளிடம் பேசிப் பேசி நாட்களை கழித்த நினைவுகள் மட்டுமே மிச்சம் அந்த இடைவெளியை குறைக்கும் முனைப்பு இல்லாத மன அயர்ச்சியடைந்திருந்தேன்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *