எழுத்து : சபரி
என்றோ ரயிலில் செல்லும்போது ஒரு பிணத்தை நடைமேடையில் வைத்திருந்ததை பார்த்து பதைபதைத்த என் நெஞ்சு, அந்த செய்தி கேட்டும் உணராத நெஞ்சின் நொடிகளாய் கழிந்தது ஏன்? இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களா இல்லை இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது பொறுமையாக சரி செய்து கொள்ளலாம் என்னும் என் அலட்சியத்தின் குற்றஉணர்ச்சியா.
என்றோ கண்ட காட்சிகள் ஆழ்மனதில் பதிந்து படிவமாகி போன நினைவுகள் இருவதோ முப்பதோ ஆண்டுகள் கழித்தும் உறக்கமில்லா இரவுகளில் கெட்ட கனவுகளாக அரைத்தூக்கத்தில் மண்டையில் நிகழும் நாடகமாய் இது இருந்து விடக்கூடாதா? இந்த நொடியை எப்படி நினைவில் வைத்துக்கொள்வேன். சுற்றி இருப்பவரை உணராமல், தானும் தன் பிள்ளைமட்டுமே என்ற உலகில் இல்லாமல் போன குழந்தையை நினைத்து ஓ….. என்று கதறும் தாய் போல் இருக்கமுடியவில்லையே! முதல் முறை பார்த்த நாள் துடங்கி கடைசியாக பார்த்தநாள் வரை வெறும் முப்பது நொடிகளில் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்த படம் போல் ஓடுவது ஏன், அது மீண்டும் மீண்டும் தோன்றி குவாரி மண் சாலையில் நகரும் கனரக வாகனத்தின் டயர் அச்சு போல் பதிவது ஏன், எங்கள் நினைவான கனரக வாகனம் செல்லாமல் போனால் அந்த அச்சின் மேல் மணல் தூசிபோல் வண்டலாகி அந்த அச்சை மறைத்து விடுமோ? வண்டல் மண் பல ஆண்டுகள் கழித்து பாறையாக மாறும் நிகழ்வு வேகமாக இன்றே நடந்துவிட்டதா? என் நெஞ்சு பாறையாகி விட்டதா? பேருந்தில் செல்லும் போது குறைந்தபச்ச காசிற்காக வேர்கடலை விற்கும் மூதாட்டியை பார்த்து கேவி கேவி அழுத நான் இப்பொழுது ஏன் அழமுடியாமல் தவிக்கிறேன்.
உடலில் கையோ காலோ இழந்தால் அந்த வலி மஸில் மெமரியாக நிலைத்திருப்பதுபோல் இந்த நாள் உறைந்துவிடுமோ. வானம் என்ற ஒரு வார்த்தைக்குள் புதிதைந்துள்ள முழு வான்வெளி போல், அவள் பெயருக்குள் புதைந்திருக்கும் கண்ணுக்கு கானா உலகம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும்வெளி அந்த உலகம். மனதில் உறைபனி போல் பரவுகிறது குற்றஉணர்ச்சி, என் அலட்சியத்தின் மேல் வெறுப்பு. அவள் இல்லையென்று உணரமுடியவில்லை அதுதான் என்னை அழவிடாமல் தடுக்கிறதா, எப்பொழுது தான் உணர்வேன்? நான்கு டிக்ரிக்கும் இரண்டு டிக்ரிக்கும் இடையில் சிலையாய் கண்ணாடி பேழையில் அவளை உரைத்தப்பின் உணர்வேனா? பெரிதாக இருந்த கண்களில் மேலும் மை தீட்டு இன்னும் பெரிதாக தெரியும், பார்த்ததுமே கவரும் கண்கள், அந்த கண்களை சந்தித்த வேறு எந்த கண்களும் தங்களை அறியாமல் உதடுகள் விரிந்து புன்னகை செய்யும். அந்த உயிரோட்டம் நிறைந்த கண்கள் உயிரற்று கிடக்கும் போது உணர்வேனோ. ‘அவ எங்க இருக்கான்னு கூட தெரியாம என்னடா கிளோஸ் ஃபிரிண்ட்ஸ்?’ என்று அவளின் பள்ளி தோழன் எங்களை கேட்க என்ன சொல்வது. அந்த கேள்விக்கு பிறகு மனதில் இருந்ததை வார்த்தையாக சொல்லவேண்டுமென்றால் வலி! வலி! வலி மட்டுமே.
****
அந்த ஃபோன் கால் வந்த நாளையும், என் தோழன் உடைந்த குரலில் சொன்ன வார்த்தைகளும் இன்னும் நினைவிருக்கிறது. அன்றைக்கு முன் தினம் தேனீக்கு அடுத்த குரங்கனி என்னும் மலைப்பகுதியில் காட்டு தீ என்ற செய்தி. மற்ற செய்திகள் போலவே அந்த செய்தியையும் கடந்து சென்றேன், வழக்கம்போல் ஆபீஸ்க்கு சென்று வேலைகளை ஆரம்பித்தேன். ஃபெஸ் புக் மெசேன்ஜ்ரில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார். ஏற்கனவே சில பிரச்சனைகளால் எவர் மெசேஜ் செய்தாலும் ஒரு சிறு இனம்புரியா பதட்டம். ‘கண்மணி எங்க இருக்கான்னு தெரியுமா?’ அந்த நபரின் மெசேஜ் வந்தது. உடனே என் நண்பன் கணேஷுக்கு ஃபோன் செய்தேன்.’மச்சி யாரு ஒருத்தர் எப்ஃ-பி ல கண்மணி பத்தி கேக்குறாங்க’ நான் கேட்டேன். ‘ஆமா மச்சி, எனக்கு வந்தது, நேத்து ஃபாரெஸ்ட் பையர் ஆகியிருக்கு டா, கண்மணி அங்கதான் எங்கயோ போயிருக்காலாம்’ பதட்டத்துடன் கணேஷ் சொன்னான். நிச்சயமாக கண்மணி அந்த ஆபத்தில் சிக்கியிருக்க மாட்டாள் என்பது தான் என் முதல் சிந்தனை. இருந்தும் மனம் வராமல் சில செய்தி தளங்களை பார்த்தேன் அப்பொழுது வரை சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தான் தகவல். சோசியல் மீடியாவில் பார்த்தால், இரவு சிலர் எடுத்திருந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது. அவர்கள் கொடுத்திருந்த கேப்ஷனும் , தம்ப் நைலும் பார்த்தால் அப்படி ஒரு பீதியை கிளப்பியது பார்க்கவேண்டுமென்றே தோன்றவில்லை. மேலும் சில மணி நேரங்கள் அந்த பரபரப்பிலும், என்ன நடந்தது என்று தெரியாமல் தவிப்பிலும், அவளின் வீட்டாருக்கு அழைக்கும் தைரியம் இல்லா இயலாமையும் கலந்த இதைய துடிப்பின் மாற்றம் மிக சாதாரணமாகவே உணரமுடிந்தது. செய்தியில் ஒவ்வொரு பெயராக எண்ணிக்கையில் ஏறிக்கொண்டிருக்க மேலும் மேலும் பாரமான ஒரு நிலைமையே நீடித்தது. செய்தியில் கண்மணி என்ற பெயரும் வந்தது உடனே கணேஷிற்கு மெசேஜ் செய்தேன். அது எங்கள் தோழி கண்மணியின் பெயராக இருக்கக்கூடாதென்று
நிமிடத்திற்கு சில நூறு வேண்டுதல்களை இறைவனுக்கு அனுப்பியவாறு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தபோது தான் மீண்டும் கணேஷ் ஃபோன் செய்தான் ‘மச்சி அது நம்ம கண்மணி தான் டா, என்ன செய்றதுன்னே புரியல டா’ என்று தழ தழத்த குரலில் சொன்ன போது மணி ஒன்றை தாண்டி இருந்தது. ‘மதியம் நான்கு மணிக்கு ட்ரெயின்ல கண்மணி ஊருக்கு போகலாம்ன்னு ‘ கணேஷ் சொன்னான். காதில் கேட்டுக்கொண்டிருந்த எதுவும் மண்டைக்கு ஏறவில்லை.
உடனே என் அம்மாவுக்கும் காதலிக்கும் ஃபோன் செய்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் அம்மாவிடம் ஏதோ சொல்லி வைத்தேன். ‘எனக்கே இவளோ கஷ்டமா இருக்கே நீ எப்படி தாங்க போற’ என்று ஆரம்பித்து என்னை ஆறுதல் படுத்தினாள் காதலி. காதலியிடம் பேசிய பிறகு தனிமை, மிகவும் மோசமான சில மணி நேரங்கள், இந்த தீய நிகழ்விற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை. அப்பொழுதே ஆரம்பமாகி இருந்தது கண்மணியின் இரங்கல் பதிவுகள்.
நான்கு மணி ரயிலுக்கு ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்தேன். கணேஷ் வந்தான் தூரத்தில் இருந்து கை காட்டினான். இருவர் முகத்திலும் சோகம் ஆனால் அழவில்லை, துக்கம் பாம்பின் தொண்டையில் இருக்கும் பெரிய ஆட்டுக்குட்டி போல் எனது தொண்டையில் இருந்தது, சாப்பிட்ட கொஞ்சமும் குமட்டலை தொண்டைக்கு எகிற தயாராக இருந்தது. கணேஷ் தான் எனக்கு கண்மணியை அறிமுகப்படுத்தியவன், முதலில் மதிய உணவிற்கு கணேஷுடன் செல்லும் போதும் இடைவேளையில் தேநீர் சந்திப்பிலும் பழக்கமான கண்மணி, கணேஷ் வேறு ஆபீஸ் போகவும் கண்மணியுடன் மதிய உணவிற்கு சென்றேன். பல நாட்கள் இது தொடர ஏதேதோ தலைப்புகளில் நாங்கள் உரையாடிக்கொண்டிருப்போம், பிறந்த குழந்தை சட்டென்று தோலுக்கு மேல் வளர்ந்துவிடுவதை போல் வளர்ந்துகொண்டே சென்றது எங்கள் நட்பு.
ஸ்டேஷன் பாலத்தின் மேல் மேலும் இரண்டு பேர் எங்கள் தோழிகள் அதில் ஒருவர் ஹேமா, ஹேமாவை பார்த்ததும் நானும் கண்மணியும் மற்றும் ஹேமாவும் சுற்றாத இடமில்லை பேசாத நாட்கள் இல்லை, பேசாத தலைப்புகள் இல்லை. இவை எல்லாம் நொடிப்பொழுதில் மூலையில் அத்தனை நரம்புகளிலும் சிவப்பு ரத்த அணுக்களின் வேகத்தில் பயணப்பட்டிருந்தது. கண்ணீர் வந்தது அனைவரும் மாறி மாறி அழுதோம். இது இனி மேல் இப்படி ஒரு நட்பு இல்லை என்ற அழுகையா இல்லை நினைவு கோர்வையின் அழுகையா என்று தெரியவில்லை ஏனென்றால் அவள் இல்லை என்று மனது உணரமறுத்தது.
தொடரும்…