தடுப்பூசி

எழுத்து : சபரி

பல மாசமா வேலை இல்லை, என்ன தான் கங்கம்மா செக்யூரிட்டி சர்வீஸ் வேலை பாத்தாலும் பெரிய ஐ.டி கம்பெனில வேலைங்கறதால வெளிய பெருமையா சொல்லிக்குவாங்க. இப்போ கம்பெனில பெரிசா வேலை எதுவும் இல்லை அதனால பலபேரை வேலைல இருந்து தூக்கிட்டாங்க அதுல கங்கம்மாவும் ஒருத்தங்க.

சரி பக்கத்து அக்கத்துல வீட்டு வேலை செய்யலாம்னு பாத்தா பக்கத்து ஏரியால இருந்தவங்க எல்லாம் வீட்ட பூட்டிட்டு சொந்த ஊர் பக்கம் போயிட்டாங்க. இருக்குறவங்களும் வேலைக்கு எடுக்க பயந்தாங்க. தண்டல் காசு, மகளிர் சுயஉதவி குழு பெண்கள் சேர்ந்து ஆரம்பிச்ச மாச சீட்டுன்னு பல பிரச்சனைக்கு நடுவுல தான் அந்த செய்தி வந்தது, கங்கம்மா வேலை செஞ்ச ஐ.டி கம்பெனில தடுப்பூசி போடப்போறாங்க அதனால நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு இருக்குன்னு அவங்களோட ஏஜென்ட் சொன்னாரு. கங்கம்மா அப்பப்போ ஏஜென்சிஸ்க்கு ஃபோன் பண்ணி விசாரிச்சது வீணா போகல.

அதே சமயம் பக்கத்து ஏரியால ஒரு வீட்டுக்கு வேலைக்கு வர சொல்லியிருந்தாங்க. ரெண்டுத்துக்கும் சம்பள வித்தியாசம் பாதிக்கு பாதி. ஐ.டி கம்பெனில சம்பளம் அதிகம் அதே சமயம் ஆபத்தும் அதிகம். இந்த குழப்பத்தோடயே தான் கங்கம்மா டிவியை ஆன் செய்தாங்க, இந்த சமயத்துல வேற என்ன பாக்கபோறாங்க ! நியூஸ் சேனலை வைத்தார். அப்போ தான் நடிகர் விவேக் ஹாஸ்பிட்டல்ல அனுமதிக்கப்பட்டிருக்காருன்னு செய்தியை பாத்துட்டு கங்கம்மாவுக்கு ஒரே பீதி ஆயிடுச்சி அது போக பல பேரு அவரு நேத்து தான் தடுப்பூசி போட்டார் அதனால தான்னு புரளிய கிளப்பிட்டாங்க, இப்போ ஐ.டி கம்பெனில வேலைக்கு போனா தடுப்பூசி போடுவாங்களேன்னு ஒரே யோசனை.

அடுத்த நாள் டிவில காத்திருந்தது அதிர்ச்சி செய்தி, நடிகர் விவேக் இறந்துட்டாருன்னு. கங்கம்மாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ‘ஹியர் அஃபிடேர் ஹி ரிமெம்பெர்ட் வித் திஸ்’ என்று கேப்ஷன் வெச்சி தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசை முறுக்குன்னு பாடலை வாட்ஸாப் ஸ்டேட்டஸை பள்ளி மாணவனுக்கான துடிப்போடு கங்கம்மா பையன் வைத்தான். கங்கம்மா கணவர் இதை காரணமா வெச்சி குடிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு அதே சமயம் இந்த வாரத்துக்குள்ள ஏஜென்சிக்கு கங்கம்மா வராங்களா இல்லையான்னு சொல்லனும். தடுப்பூசி போட்டுக்கிட்டா இறந்துடுவாங்க, மாரடைப்பு வரும்னு நிறைய புரளி. கங்கம்மாவுக்கு வேற என்ன வாய்ப்பு இருக்கு; குடிகார கணவன் படிக்குற வயசு பையன் கல்யாணத்துக்கு இருக்குற பொண்ணு. கங்கம்மா துணிஞ்சிட்டாங்க வாழ்வோ சாவோ குடும்பத்த காப்பாத்தணும்னு முடிவு பண்ணிட்டாங்க. ஏஜென்சிகிட்ட வரேன்னு சொல்லிட்டாங்க.

முதல் வேலையா தடுப்பூசி டியூட்டில இருக்க எல்லாருக்கும் தடுப்பூசி போட்டாங்க. கங்கம்மாவும் போட்டுக்கிட்டாங்க. அவங்க பின்தொடர வேண்டிய வழிமுறைகளை சொன்னாங்க. அடுத்த மாசம் தடுப்பூசி போட ஆரம்பிக்கிறோம் தயாரா இருங்கன்னு சொன்னாங்க. அன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வெளிய ராத்திரி சாப்பாட்டுக்கு பூண்டு உரிச்சிகிட்டு இருந்த கங்கம்மாகிட்ட அவங்களோட பையன் கேட்டான். அம்மா தடுப்பூசி போட்டுக்கிட்டியே உனக்கு பயமா இல்லையான்னு.

‘பயமா தான் இருந்தது, ஆனா அங்க போனா நிறைய பேறு நம்மள மாதிரி கஷ்டப்படறவங்க இருந்தாங்க ஆனா கொஞ்சம் சொகுசா கொஞ்ச பேரு இருந்தாங்க. அவங்கள யாருன்னு கேட்டேன், டாக்டருங்க நர்சுங்க அப்படின்னு சொன்னாங்க. அவங்கள ஒரு பொண்ணுகிட்ட கேட்டேன் உங்களுக்கு பயமா இல்லையான்னும். அதுக்கு அந்த பொண்ணு: மக்கள ஆபத்துல இருந்து காப்பாத்த பயப்படுறவங்க மருத்துவத்துக்கும் ராணுவத்துக்கு வரவே கூடாது. நம்மளால கொஞ்ச உயிரை முன்னெச்சரிக்கையா காப்பாத்த முடியுதுங்குற சந்தோஷம் தான் நிம்மதியா தூங்க வைக்குதுன்னு சொன்னாங்க. நம்ம கூட அந்த மாதிரி வேலை தானே நாமளும் நம்பளால முடிஞ்ச உதவி செய்ரோம்னு தைரியம் வரவெச்சிகிட்டேன்’ கங்கம்மா சொன்னது அவங்களோட பையனுக்கு ரொம்ப பெருமையா இருந்தது.

ஊசிபோட்டு ரெண்டு மாசம் ஆகுது, வேலைக்கு போக ஆரம்பிச்சி ஒரு மாசமாகுது கங்கம்மா பயமில்லாமத்தான் தினம் தூங்குறாங்க.

2 thoughts on “தடுப்பூசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *