புளிச்ச மாவு

எழுத்து : சபரி

‘தம்பி மாவு அரைச்சிட்டு வந்துடு’ அம்மா சொன்னாள்.  இருபத்தோராம் நூற்றாண்டில் பெண்களை சமையல் அறையில் இருந்து வெளியே கொண்டு வர கண்டறியப்பட்ட பல சாதனங்களில் கிரைண்டரும் ஒன்று. அதிலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

அம்மியில் அரைச்சா தான் ருசி. கைல அறைக்குற மாதிரி வருமா. என்ற பிற்போக்கு கருத்துக்களை கண்டுகொள்ளாமல் பெண்களாகவே முன்னேறி வந்த காலம். கிரைண்டரில் அரைக்க சில மணி நேரங்கள் ஆகும் அதையும் ஏன் வீணாக்க வேண்டும் என்று வந்த மெஷின் தான் இன்ஸ்டன்ட் தோசை/இட்லி பேட்டர் மேக்கர் சுருக்கமாக மற்றும் நாம் பரவலாக உபயோகிக்கும் பெயர் ‘மாவு அரைக்குற மெஷின்’.

வந்த புதிதில் மற்ற பொருளுக்கு கிடைத்த சொற்ப வரவேற்ப்பே இதற்கும் கிடைத்தது.  நாளாக நாளாக பெரும் வரவேற்பு பெற்றது. பக்கத்து தெரு அண்ணா புதுசா வந்த மெஷினை அவரோட மில்லில் வாங்கி வைத்தார். ஒரு கிலோ அரிசிக்கு ஐந்து ரூபாய். ஆரம்பத்தில் நேர்மையாக இருந்த சதிஷ் அண்ணா நாள்பட நேர்மையோடு சேர்ந்து நிதானத்தையும் இழந்தார்.

அம்மாவும் நானும் மாவரைக்க சென்றோம். இரண்டு கிலோ புழுங்கல் அரிசி அதுவும் ரேஷன் கடை அக்கா ராஜியிடம் கிலோவிற்கு இரண்டு ரூபாய் என்று ப்ளாக்கில் வாங்கிய அரிசி.அரைகிலோ உழுந்து, ஒரு கைப்பிடி பச்சரிசி மற்றும் இருவத்தஞ்சு கிராம் வெந்தயம். கூட்டி கழித்து பார்த்தால் இரண்டரை கிலோ தான் ஆனால் சதிஷ் அண்ணா ஒவ்வொரு முறையும் மூன்று கிலோவிற்கு காசு வாங்குவார். என்னதான் கண்ணிற்கு தெரியாமல் ஏதேதோ வழியில் காசு போனாலும் கண்ணெதிரே ஒரு பைசா போனாலும் மிடில் கிளாஸ் மனசு தாங்காது. ஒருவரிடம் இரண்டரை ரூபாய்! அப்பொழுது நாள் முழுக்க எத்தனை ரூபாய்! என்று கணக்கு போட்டு நாள் முழுக்க கடுப்பானாள் அம்மா. இதே கடுப்பு மற்ற அம்மாக்களுக்கும் இருக்காதா என்ன?

சோமு அண்ணா நாலைந்து தெரு தள்ளி இருந்தார். பொதுவாக மில் வைத்திருப்போர் கையில் ஓர் இரு விரல்கள் இருக்காது. அதுவே சில சமயம் அடையாளமாக மாறிவிடும். மூணு விரல் கடைக்காரர் சோமு அண்ணா டீ கடைக்கு வந்தார். நான் அங்க டைகர் பிஸ்கட் பாக்கெட் வாங்க வந்தேன். டீ கடைக்காரண்ணா சோமு அண்ணா கிட்ட ‘தம்பி இந்த சதிஷ் ரொம்ப மோசம் பா’.

‘என்ன ஆச்சு ண்ணே ‘

‘இல்ல தம்பி எங்க வீட்ல மாவரைக்க போனா, மெஷின்-ல இருந்து கருப்பா ஏதோ வந்தது மாவுல கலந்துடுச்சி. கேட்ட அவளோ சுத்தமா வேணும்னா வீட்ல அரைச்சிக்க சொல்றான்.’ கொஞ்சம் அவர் கண்ணு கலங்குற மாதிரி தெரிஞ்சது அப்படி தொடர்ந்து பேசினார். ‘அவளுக்கு ஒடம்பு முடியல ரொம்ப அசதியாவும், அதனால  தான் கடைக்கு போனா ஆனா இவனால மனசு கஷ்டமா போச்சி’.

கடையில் இருந்த இன்னொரு அங்கிள் ‘ஆமா பா, நா ஏதோ கேட்டேன், கேக்காத மாதிரி இருந்தான், சரி மெஷின் சத்தத்துல கேக்கலேனு இருந்தேன் ஆனா அப்படி இல்லப்பா, வேணும்னே இருக்கான்’.

‘அவன் கடைல அரைச்சா சீக்கிரம் புளிச்சி போகுது பா’ என்றார் இன்னொரு அங்கிள்.

ஊர் பூராவும் கெட்ட பேரு ஆகி போச்சி ஆனா கடைல வியாபாரம் குறையல. அம்மக்களோட மன குமுறலும் குறையல.

சில மாசம் கழிச்சி சோமு அண்ணா அவரோட கடைல மாவு அரைக்குற மெஷின் வந்தது. ஊரே திருவிழா தான். செமயா வியாபாரம். ஒரு கிலோ அதே அஞ்சி ரூபாய். அதுவும் நாம சொல்ற எடை தான். சதிஷ்அண்ணா கடையில ஈ ஆட ஆரம்பிச்சது. சோமு அண்ணா கடை தொறக்குற வரை காத்திருந்து அரச்சிகிட்டு போவாங்க. அப்புறம் சதிஷ் அண்ணா ஒரு கிலோ நாலு ரூபாய் னு போர்டு போட்டாரு அப்போவும் யாரும் வரல. சில மாசம் கழிச்சி சோமு அண்ணா ஒரு கிலோ ஆறு ரூபாய் ஆக்குனார் அப்பவும் கூட்டம் குறையில மெஷினோட ஆட்டமும் குறையில.

***முற்றும்***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *