அசைவப்பிரியனானதால் நாத்திகன்

எழுத்து : சபரி

மலை பிரதேசத்தில் பைன் மரங்களை மூடி இருக்கும் பனி போல தான் தற்கால ஆன்மீகம். அதன் உள்ளே இருப்பவர்களுக்கு அதன் அழகும் எழிலும் புரிய வாய்ப்பில்லை, காலிலும் உடம்பிலும் ஒட்டும் புழுதியும், அதன் பெரும் தண்டினை பார்த்து பிரமிப்பதும், அதன் உச்சி கூரடைந்து கொண்டே எங்கோ மேலே செல்கிறது என்ற ஆச்சர்யமும் தான் மிஞ்சும். சற்று வெளியில் இருந்து பார்த்தால் அதன் உச்சி தெரியும், வெண்கரு நிற மேகங்களாய் பனி படர்ந்து அதன் ஊடே நிழல்களாய் மலை உச்சிகள் போல் தெரியும் அந்த அடர் பச்சை கூம்பு.அதனுள் ஒரு மௌனம், இருள் மற்றும் லேசான மயக்கத்தக்க ஒரு அமானுஷ்யம், மௌனமாய் இருக்கும் நீல கண்கள் கொண்டு மெல்லிசை கேட்கும் பெண் போல.

வீட்டில் அனைவரும் பல வருடங்கள் காத்திருந்த கோவில் பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். மேல் வீட்டில் இருக்கும் ஐயர் மாமாவிடம் இறைவனுக்கு ஏன் அசைவம் வைத்து வணங்குவதில்லை என்று செல்ல சண்டை போட்டுக்கொண்டிருந்தான் மதன். மாலை வேலையில் கீரை வடை வாங்கித்தந்த காலம் முதல் ஷவர்மா வாங்கித்தரும் இக்காலம் வரை மதனுக்கு பிடித்த மாமா கணேசன். என்ன தான் சிவன் மேல் தீர காதல் கொண்டிருந்தாலும் அதை எவர் மேலும் திணிக்காத கணேசன் மதனை கோவிலுக்கு தயாராக சொல்ல மாடிக்கு வந்தார்.

‘மதன் கிளம்பு பா ‘ என்று சொல்லிக்கொண்டே மதன் அருகில் வந்தார்.

‘நா வரல மாமா’ என்றான் மதன் கையில் தான் வைத்திருந்த பீப் 65 யை வாயில் அசைத்து கொண்டே.

‘ஏன்டா மருமகனே ?’ புன்னகைத்தவாறு அவர் கேட்க.

‘இன்னைக்கு கோவிலுக்கு போக நாலு நாள் முன்னாடியே வீட்ல அசைவம் செய்றத நிறுத்திட்டாங்க’ கடிந்தார் போல் சொன்னான்

‘விடுடா!’

‘இப்போ கீழ வந்தா உள்ள கூட விடமாட்டாங்க, குளிச்சிட்டு தான் கோவிலுக்கு வரணும்னு அடம்பிடிப்பாங்க மாமா ‘

‘சில விஷயங்களை மாத்த முடியாது டா ‘

‘எத்தனை வருஷத்துக்கு இதே சொல்லுவீங்க’

‘நீ மாத்து’ மாமா சொல்ல

‘வேண்டாம் மாமா , பேச ஆரம்பிச்ச பிரச்சனை தான்’ தொடர்ந்தான்,

‘எனக்கு கோவிலுக்கு போறது அவளோ பிடிக்கும் ஆனா இவங்க சொல்ற மாதிரிலாம் என்னால இருக்க முடியாது’ மதன் சொன்னான்.

‘ஆன்மீகம்-னா என்னன்னே தெரியாம முன்னோர்கள் மேல பழிய போடுறாங்க!’

‘சரி விடுப்பா , எனக்காக கீழ வா’

ஒரு வழியாக சமாதானம் செய்து கீழே வந்தனர், அம்மா சும்மா விடுவார்களா , அண்ணே அவனை குளிச்சிட்டு வர சொல்லுங்க.

மதன் அவன் அம்மாவை முறைத்து பார்த்தான்.

‘என்னடா முறைக்குற?’ அம்மா கேட்க

‘என்ன? என்னால குளிக்க முடியாது’ மதன் சொன்னான்

‘நல்ல காரியத்துக்கு போறப்போ , ஏன்டா இப்படி பண்ற’ அம்மா கோவப்பட்டாலும் மதன் கோவிலுக்கு வர வேண்டும் என்றே நினைத்தாள்.

‘ஏம்மா இப்படி ஐயருங்க மாதிரி இருந்தாதான் கடவுள் ஆசீர்வாதம் பன்னுவாருனு நினைக்குறீங்க!’ மதன், தன் இத்தனை வருட கோவத்தை ஒரே வரியில் சொன்னான். கோவத்தை விட தான் விரும்பியவாறு வழிபட வழியில்லை என்ற சோகம் தான் அதிகமாக இருந்தது.

‘சரி விடுமா , இன்னைக்கு ராத்திரி அங்க போயிட்டு, நாளைக்கு காலைல தானே கோவிலுக்கு போறோம், அப்போ குளிச்ச சரியாப்போகுது’ மாமா சொன்னார்.

காதின் வழியே சென்று, நுரையீரலில் நுழைந்து, உடலை உளிக்கிடும், உயிரில் குளிர் போல். காதின் வழியே கேட்ட செய்திகள் மூலம் உயிரிலும் உணர்விலும் கலந்த வழிபாட்டு சடங்குகள், அர்த்தமற்ற அதிகாரங்கள். பெரும்பாலும் ஆத்திகர்கள் கருத்தில் உடன்பாடில்லாததால் நாத்திகனாகவே அறியப்பட்டான் மதன். தனக்கு பிடித்த இறைச்சியை சாப்பிடவிடாத அரசியல் பிடிக்காததால் நாத்திகனாகவே காட்டிக்கொண்டான்.

சென்னையில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர் காளஹஸ்தி, பல பேர் திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி செல்லும் கோவில் கொண்ட ஊர். பெரும்பாறை கொண்ட நாகலாபுரம் மலை பகுதியின் பக்கவாட்டில் ஆறே நீர்வீழ்ச்சியை கடந்து, பிச்சடுர் அணையால் தடுக்க பட்டு ஓடும் ஆரணி நதியின் கரையில் நிறைந்திருக்கும் பெரிய மற்றும் சிறிய கூழாங்கற்களில், நனைந்த உடலோடு அமர்ந்து கொஞ்சம் தேநீர் அருந்தி, ஐம்பது கிலோமீட்டர் கிளட்சையும் பிரேக்கையும் அடிக்கடி பயன்படுத்திய பிறகு நெரிசலான குறுகிய சாலையின் ஊடே, பல மன்னர்கள் தத்தம் காலங்களில் மெருகேற்றிய அந்த கோபுரம் தெரியும்.

பணத்தின் பலம் பெரும்பாலும் கோவில்களில் தெரியும் இந்த கோவிலும் அதற்கு விதிவிளக்கில்லை என்பது அங்கு சென்றதுமே புரிந்தது. கோவிலை ஒட்டி ஓடும் சுவர்ணமுகி நதி கரையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். மதன், நதியில் மஞ்சள் நிற பிரதிபலிப்போடு சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசித்து கொண்டிருந்தான், மீதி பேர் நாளைய நாள் பற்றி கூக்குரலில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர்.

அடுத்த நாள், மக்களின் பக்தியையும், சோம்பறித்தனத்தைனயும், தான் முதலில் சென்று விட வேண்டும் என்ற அவசர புத்தியும் மற்றும் கடவுள் பக்கத்தில் உட்கார்தால்தான் அருள் என்று மேலோட்டமான ஆன்மீக அறிவும் இங்கே பணம் ஏராளமாக கைமாற காரணம். இதை எல்லாம் சகித்து கொண்டு கிருஷ்ணாதேவ ராயரால் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட நூறு கால் மண்டபத்தில் ஒரு முறைக்கு சுமார் ஆயிரம் பேர் விகிதம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நடக்கு ராகு-கேது பூஜையில் அமர்ந்தான் மதன்.

நூறு கால் மண்டபம் , ஒவ்வொரு காலிலும் எண்ணற்ற சிலைகள் , ஏதேதோ வடிவங்கள் ஆனால் அனைத்தும் துல்லியமாக இருந்தது. அதை மதன் மட்டும் ரசித்து கொண்டிருந்தான், அனேகமானோர் தங்கள் முன் அவர்கள் வைத்திருந்த சிறு வடிவிலான வெள்ளியால் ஆன ஒரு தலை நாகம் மற்றும் ஐந்து தலை நாகத்தை கண்டுகொண்டிருந்தனர். அது மதனிற்கு வருத்தமளித்தாலும் அவரவர் பிரச்சனையை பொறுத்தே ரசிப்புத்தன்மையெல்லாம். இங்கே அவரவர் பூஜையை அவரவர் செய்து கொள்ள வேண்டும், அது மதனிற்கு பிடித்திருந்தது. இந்த சமூகம் தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் அவரவர் செய்து கொண்டதை மதனால் வரவேற்காமல் இருக்க முடியவில்லை.பூஜை முடிந்து கோவிலுக்கு அண்மையில் சிறு குன்று அதன் உச்சியில் கண்ணப்பா கோவில். அதற்கும் சென்றனர். அங்கிருந்த ஒரு முதியவர். அந்த கோவிலின் புராணத்தை சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது கண்ணப்பர் சிவனிற்கு இறைச்சி வைத்து வழிபட்டதாக சொன்னார், சில நேரங்களில் பன்றி இறைச்சியும் வைத்து வழிபட்டிருக்கிறார். மதனிற்கு ஏதோ உள்ளூர ஒரு மகிழ்ச்சி, அம்மாவின் முகத்தை பார்த்தான். அம்மா அவன் முகத்தை பார்க்கவில்லை. மேல் வீட்டு ஐயர் மாமாவிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது. கண்ணப்பருக்கு கிடைக்காத அருளா, அதற்கு அசைவ உணவு தடையாய் இல்லை இறைவனும் அதை பார்க்கவில்லை.

ஏதோ இந்த பயணம் மனதில் ஒரு அமைதியாய் தந்தது, நாத்திகனுக்கு இல்லாத பரவச நிலை, தரிசனம் ஏனோ மதனிற்கு இருந்தது. வீடு திரும்பினர், வரும் வழியிலேயே சிக்கன் 65 வாங்கி வந்திருந்தான். மாடிக்கு சென்றான். அம்மா இங்கேயே சாப்பிடு என்றார். மதன் மகிழ்ச்சி அடைந்தான் ஆனாலும் மாடிக்கு சென்றான்.


மேல் வீடு ஐயர் மாமா மதிய உணவை காக்கைக்கு வைக்க வந்தார். மீண்டும் அசைவம் ஏன் இறைவனுக்கு படையலாக்க கூடாதென்றன்.

‘நம்ம முன்னோர்கள் சொல்லிட்டு போனது டா’

‘அப்போ உங்க முன்னோர்கள் செய்றது தான் செய்விங்க?’

‘ஆமா டா ‘ காக்கை உணவை உண்டு முடித்து கொண்டிருந்தது.

‘இந்த காக்காக்கு சாப்பாடு வைக்கிறது உங்க முன்னோர்களுக்கு தானே?’

‘ஆமா’

மதன் ஒரு சிக்கன் துண்டை வீசினான் .காக்கா, ஐயர் மாமா உணவை முடித்ததும் சிக்கன் துண்டை தூக்கி சென்றது.

***முற்றும் ****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *