பிளாக் ஜாக்

எழுத்து: சபரி

நான் எப்பொழுதும் சாராயம் விற்பேன்.
வெளிநாட்டவரை அரவணைப்பேன்
ஆனால் ஒரு பொழுது திட்டம் தீட்டி வருபவரை உள்ளே விடவே மாட்டேன்! – கோவா

கோவா, நிறைய பேர் திட்டம் தீட்டி போக முடியாத ஒரு இடம். என்ன தான் மதுவிற்கு பிரபலமானதாக இருந்தாலும் அதன் ஊடே பழமையும் புதுமையும் கலந்த கலாச்சாரம் நிறைந்திருக்கும். உயர் கோபுரங்கள் கொண்ட தேவாலயங்கள், இரவுகளில் விளக்கொளிகள் மின்னும் கடற்கரைகள், வெளிநாட்டவருக்கு காந்திக்கு பிறகு இந்தியா பற்றி தெரிந்த இன்னொரு விஷயம் கோவா. கோவா விமான நிலையம் இருக்கும் வாஸ்கோடகாமாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இடம் பனாஜி, இங்கு கேசினோக்கள் மிகவும் பிரசித்தி.

கேசினோ, எங்கும் காணாத அழகு பெண்கள் நிறைந்திருக்கும் கப்பல்களில் சூது மட்டும் இல்லாமல் உணவு, மது, மசாஜ்; ஏன் குழந்தைகள் விளையாடும் இடம் கூட உண்டு. சென்னையில் ஊர் அடங்கிய பின்னர் டிசம்பர் மாத இரவுகளில் பதினோரு மணிக்கு மேல் அகன்று விரிந்த நெடுஞ்சாலைகளில் விர்ர்ர் என சீறி பைக்கில் செல்லும் பொழுது குத்தீட்டி உயிரை எடுக்காமல் வருடி செல்வது போல் நெஞ்சிலும் வயிற்றிலும் குளிர் காற்று குத்திச் செல்லும், அதற்கு கொஞ்சமும் குறையாத அரபி கடலின் குளிர் காற்றும் கப்பலில் இருப்போரை குத்தி செல்லும்.

நிரோஷா, பிளம் பெலினி-யை ஒரு மடக்கில் பத்து மில்லிக்கு மிகாமல் உரிந்த பின்னர் மேடைமேல் வைத்தாள். பூமியில் காதை வைத்து தூங்கும் நாய், குறிப்பிட்ட அதன் வளையத்திற்குள் எந்த அதிர்வோ ஓசையோ கேட்டால் உடனே எழுந்து ஒரு பார்வை பார்த்துவிடும், அது போல் அழகான பெண்ணை பார்க்க காத்திருந்த அசோக் நிரோஷாவை கண்டதும் அவளை நோட்டம் விட ஆரம்பித்தான். பல நிமிடங்கள் தொடர் நோட்டத்தின் பின் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது. பெரும் வணிகர்கள் , காசு என்பதை பொருட்டாக மதிக்காதவர்கள் உலாவும் இடம் அது.

‘டூ யு மைண்ட்?’ அசோக் நிரோஷா அருகில் நின்றான்.

‘நோ, ப்ளீஸ்’ என்று புன்னகைத்தவாறு சொன்னாள்.

‘ஐ அம் அசோக்’ கை நீட்டினான்.

‘நிரோஷா’ ஒரு கையில் மது கிண்ணத்துடன் மற்றோரு கையை நீட்டினாள். கட்டை விரலின் பின் பக்க முடிவில் ஆரம்பித்த டாட்டூ முன் மணிக்கட்டு வழியாக நீண்டு முன்கைகளில் முடிந்தது, அடர் பச்சை நிறத்தில் இருந்த டாட்டூ நிரோஷாவின் வெளிர்சிகப்பு நிறத்திற்கு பிரகாசமாக தெரிந்தது. அசோக்கின் கண்ணை பறிக்கவும் தவறவில்லை.

‘இட் சீம்ஸ் யு ஹவ் எ ப்ரொப்லெம் ?’ அசோக் கேட்டான்.

‘நோ, ஐ அம் அல்ரைட் ‘ நிரோஷா சொன்னாள்.

‘நோ, யு சீம் லிட்டில் ஒரிட்!’ அசோக் கொஞ்சம் விடாப்பிடியாக கேட்டான்.

‘மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்’ என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டாள் நிரோஷா.

‘ஹே ச்சில், இஃப் யூ டோன்ட் வாண்ட் டு , நோ ஃப்ராப்’ அசோக் புன்னகைத்தான். நிரோஷாவும் புன்னகைத்தாள். ஒரு முறை விரலில் சூடுபட்ட குழந்தை போல் அடுத்தடுத்த கேள்விகளில் கவனமாய் இருந்தான் அசோக். நீண்ட நேர உரையாடலுக்கு பிறகு நிரோஷா கொஞ்சம் சகஜமானாள், அவளைப் பற்றி சிறிதளவு உண்மைகளை சொன்னாள்.

அசோக் தன் பங்கிற்கு அவனளவில் உண்மைகளை சொன்னான், நிரோஷா இன்னும் மூன்று நாட்களில் சொந்த நாடு கிளம்பிவிடுவாள், அவளின் தாய் நாடு மலேசியா. அசோக் இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பதாகவும் தன் தொழில் சார்ந்த ஏஜென்சி இந்த சுற்றுலா இலவசமாக அமைத்து கொடுத்தாக சொன்னான். இருவரும் விடை பெற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் இருவரும் அதே இடத்திற்கு வந்தனர். தற்செயலாக சந்திப்பது போல் நடிக்கவும் செய்தனர்.

‘ இன்னைக்கு நாம ஏன் ஒண்ணா ஊர் சுத்த கூடாது, தனியா என்ன பண்ணாலும் காசு அதிகம்’ அசோக் ஒரு கொக்கியை போட்டு காத்திருந்தான். உடனே தலையசைத்தாள் ஏளனமாகி விடுவோம் என்று சிறிது நேரம் கழித்து ஏற்று கொண்டாள் நிரோஷா.

பனாஜியில் இருந்து சிறப்பு ஃபெர்ரி மூலம் மண்டோவி நதியின் வழியாக கலங்குட் கடற்கரை அடைந்தனர். அங்கு உயர்தர உணவகத்தில் சீமை ஓடு குடில்கள் அதன் நான்கு தூண்களிலும் வெள்ளை கதர் துணிகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. அங்கிருக்கும் உணவுகள் பார்க்கவும் அதை சுவைக்கவும் தனி அறிவு வேண்டும் என்று தோன்றும். நிரோஷா பிரமித்து போனாள். அதிரடியான அன்பிலும், எதை தொட்டாலும் ராயலாக இருக்கு வழக்கத்திலும் நிரோஷா அசந்து போனதில் ஆச்சர்யம் இல்லை. மதிய உணவிற்கு பிறகு பாகா கடற்கரை சென்று நீர் விளையாட்டுகளை விளையாடி கடலில் சில மணி நேரங்கள் கழிந்த பிறகு நிரோஷாவுக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச கூச்சமும் விட்டுப்போனது. நீண்ட நாள் பழகிய நண்பனிடம் பழகுவது போல பேச ஆரம்பித்தாள்.

என்ன தான் விளையாடினாலும், பேசினாலும், சிரித்தாலும் உள்ளூர ஒரு மர்ம வருத்தம் கண்களில் தெரிந்து கொண்டே இருந்தது.

இளம் இரவு நேரம். பனாஜி ஃபெர்ரி டெர்மினல் அருகே ஒரு கேசினோவில் இருவரும் அமர்தனர். போக்கர் விளையாடலாமா என்று கேட்டான், அதற்க்கு முக வறட்சியை பதிலாய் சொல்லி தன் கண்ணீர் அசோக்கிற்கு தெரியவேண்டாம் என விலகி சென்றாள். அசோக் அவசரமாக பின் தொடர்ந்தான்.

‘ஹே , என்ன ஆச்சு’ அசோக் நிரோஷாவின் பக்கவாட்டை அணைத்தவாறு கேட்டான். நிரோஷா உதறிவிட்டு சென்றாள்.

‘ஐ அம் சாரி’ அசோக் முகம் மாறியது, கொஞ்சம் எல்லை மீறிவிட்டோமோ என்றெண்ணினான்.

‘இட்ஸ் ஒகே, ப்ரோப்லம் இஸ் வித் மீ ‘ நிரோஷா சொல்லி கதறி அழ ஆரம்பித்தாள். அசோக்கின் நிலைமை சங்கடமாகியது. சில நிமிட தேற்றலுக்கு பின்னர் நிரோஷா எப்படி சூதில் ஏமாந்து காசை இழந்தாள் தான் தங்கும் இடத்திற்கு கூட காசு தரமுடியாத நிலைமை என்று கூறி கேவென்று அழ ஆரம்பித்தாள். பெண் அழுதாலும் அழகு என்பதெல்லாம் பொய் என்றுணர்ந்தான். இப்படி அசோக்கை சங்கடத்திற்கு ஆளா க்கியதை எண்ணி மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டாள். தொடர் சமாதானத்திற்கு பிறகு இயல்பாக பேசினாள் நிரோஷா.

இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர் ‘நீ தப்பா எடுத்துக்கலனா நா வேணும்னா காசு தரவா ?’ அசோக் கேட்டான்.

ஆணிடம் பண உதவி கேட்டாள் அது எங்கு போய் முடியும் என்று உணர்ந்திருந்தாள் நிரோஷா அதனால் உடனே நிராகரித்தாள். அது தவறாகிவிடும் வேறு வழி இல்லையா; தனக்கு ஒன்றும் புரியவில்லை என்று புலம்பினாள்.


வேறு வழிகள் அசோக்கிற்கு தெரிந்திருந்தாலும் அவன் காசு கொடுப்பதையே பரிந்துரை செய்து கொண்டிருந்தான். தன் விடாப்பிடித்தனத்தால் அவளை ஒற்றுக்கொள்ள வைத்தான்,நாடு திரும்பிய பின்னர் இந்த காசை கொடுத்து விடுவதாக சொன்னாள். ஆனால் அசோக்கிற்கு அது பெரும் பொருட்டல்ல. நிரோஷா கொஞ்சம் நிம்மதி அடைந்தாள், ஷாம்பெயின் பாட்டில் காலியானது, தன் ரூமிற்கு அழைத்துச் சென்றாள் மேலும் அரை பாட்டில் காலியானது. பேச்சும் ஒரு மார்கமானது, தன் அந்தரங்கங்களை பற்றி பேச ஆரம்பித்தனர். நிரோஷா இதுவரை உடலுறவு கொண்டதில்லை , அசோக் இரண்டு முறை முயற்சி செய்திருப்பது இவாறாக தலைப்பு அதையே சுற்றி சென்றது. அசோக்கின் மேல் நம்பிக்கை பெருகிக்கொண்டே போனது நிரோஷாவிற்கு. அதை உடைக்க சில நிமிடங்களே ஆனது அசோக்கிற்கு.

‘நிரோ ஒன்னு கேக்கவா ?’ அசோக் கேட்டான் முகத்தில் திடீர் இருள்.

‘வேண்டாம் டா , உன் மேல பெருசா நம்பிக்கை வெச்சிருக்கேன், கெடுத்துடாத ! ஆம்பளைங்கள வெறுக்க வெச்சிடாத !’ நிரோஷா சொன்னாள், லேசாக கண் கலங்க ஆரம்பித்தது.

‘இல்ல இல்ல , ஜஸ்ட் தோணுச்சு , ரொம்ப ஆசையா இருக்கு’ அசோக் அசடு வழியும் குரலில் கேட்டான். ஏனோ ஆண்கள் இன்பத்திற்காக கெஞ்சும் பொழுது குரல் தழ தழத்து அசிங்கமாகி விடுகிறது. அது நிரோஷாவிற்கு பிடிக்கவில்லை. என்ன தான் தீரா காமம் உள்ளுர இருந்தாலும் அதை குரலில் காட்டாமல் மறைத்தாலும் அது கண்களில் தெரிந்து விடுகிறது, நிரோஷாவிற்கு பயம் அதிகரித்தது.

‘பயப்படாத நா போர்ஸ் பண்ணமாட்டேன்’ அசோக் சொல்லிவிட்டு ‘ஒரு தடவை ட்ரை பண்ணலாம், இதுல ஒரு தப்பும் இல்லை’ அசோக் சொன்னான். ‘அசோக், உதவி பண்ணிட்டனு அட்வான்டேஜ் எடுத்துகுறியா?’ நிரோஷா கேட்டாள்.

‘ஹே, அப்படியெல்லாம் இல்லை , அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை’ அசோக் சொன்னான். நிரோஷா எதுவும் சொல்ல தயாராக இல்லை. மவுனமாய் இருந்தாள். அசோக் அருகில் வந்தான். ‘ஒரே ஒரு தடவ ப்ளீஸ்’ என்று குழைந்தான் , தோல் மேல் கை வைத்து முதுகில் படர்த்தினான். நிரோஷா தயங்கினாள் , தள்ளி போனாள் , என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தாள். அசோக் நிறுத்துவதாக தெரியவில்லை. ‘வேண்டாம் வேண்டாம் ‘ என்று நிரோஷாவும் ‘ப்ளீஸ் ப்ளீஸ் ‘ என்று அசோக்கும் விடாப்பிடியாக இருந்தார்கள். நிரோஷா என்ன யோசிப்பதென்று புரியாமல் ஒரு கட்டத்தில் தன் சுயத்தை இழந்தாள். அசோக் தன் இயல்பை மீறினான்.

மறு நாள் நிரோஷா உடையின்றி தன் படுக்கையில் படுத்திருந்தாள். படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில்
இருபத்தைந்தாயிரம் ரூபாய் இருந்தது. நிரோஷா படப்பிடிப்பில் ஃபோனை எடுத்து டயல் செய்தாள்.

‘மச்சி கோழி மாட்டிக்கிச்சி’ நிரோஷா சத்தம் போட்டு சிரித்தாள்.

‘எப்படி டீ நீ மட்டும் இப்படி கரெக்டா மடக்குற’ அந்த குரல் கேட்டது.

‘இவனுங்க வேணாம் வேணாம் சொல்ற பொண்ணுங்கள தான் பண்ணுவானுக, வேணாம் சொல்றவள பண்ணனும்னு நினைக்குற அந்த ஆம்பள திமிரு அதான் என்னோட மூலதனம், வேணும் னு சொல்ற பொண்ணுக்கு அஞ்சோ பத்தோ குடுப்பானுங்க, இந்த மாதிரி வேண்டாம் னு சொல்றவங்கள பண்ணா லட்ச கணக்குல கொட்டுவானுங்க… அல்பைங்க!

முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *