எழுத்து: சபரி
ஒரு முறை கையில் வந்தால் கைவிட்டகள சில மணி நேரங்களாகும். டச் ஸ்கிரீனும் பெண் போல தான் மென்மையாக கையாளும் வரைதான் மரியாதை. ஐந்தங்குல அசுரன் ஆளயே தற்காலிக பிணமாய் கிடத்திவிடும். இளம் வயதினருக்கு இதுவன்றி ஏது வாழ்க்கை.
நான் சிறு வயதில் வாய் திறந்து பேசினாலே சாதனை. அம்மா சொல்லிகுடுத்த ரைம்ஸ் ஒழுங்காக சொல்லி விட்டாலே ஆக சிறந்த குழந்தை. ‘வேர் ஆர் யு கோயிங்’ என்ற கேள்விக்கு வீட்டிலேயே இருந்தாலும் ‘ஐ யம் கோயிங் டு மார்க்கெட்’ சொல்லிவிட்டால் போதும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முகத்தில் அப்படி ஒரு பெருமை. பாட்டி வேறு ‘எப்படி துரை கணக்கா பேசுறான் பாத்தியா!’.
‘என் குழந்தை தானே யூடியூப் ஓபன் பண்ணி ரைம்ஸ் போட்டு கேப்பாங்க’ என்றெண்ணுவது பெருமையானதோ, அதன் பிறகு ‘மொபைல் தவிர்த்து குழந்தை வளர்ப்பு’ பேசுவது பழமை வாதம் தான். டச் ஸ்கிரீன் மொபைல் பழகிய கைகள், அது இல்லாமல் இருக்காது. மாடிமீது நிற்கும் பொழுது குதித்து விடு என்று தூண்டும் எண்ணம் போல் அது வேண்டும் வேண்டுமென்று மூலையினுள் மத்து (மோர் கடையும்) போல் குடைந்து கொண்டே இருக்கும்.
ஆதேஷ் மற்றும் அவன் நண்பர்கள் கடற்கரைக்கு சென்று வந்தார்கள், மேக மூட்டத்தின் பொழுது நீள கடல் காண்பதும் பேரோலமிடும் அலைகளின் ஊடே அதைவிட சத்தமாய் நண்பர்களோடு சிரித்து மகிழும் நிமிடங்கள் இருந்தால் வேறென்ன வேண்டும். வீட்டிற்கு வந்ததும் சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க சென்றவன், வந்து ‘காட் ஸ் இன் டீடெயில்ஸ்’ என்பது போல் ஒருவருக்கொருவர் வேறாக இருக்கும் – விரல்களின் மேல் லேசாய் மேடெழுந்த ரேகைகள், அதனை வைத்து மொபைலை திறந்தான்.சாய டப்பாவில் விழுந்த குழந்தை வீடெங்கும் உருண்டு பிரண்டு ஏதேதோ வண்ணமிடுவது போல் ஒரு பக்கம் முழுவதும் ஏதேதோ வண்ணங்கள் தெரிந்தன. ஏதேதோ செயலிகள் செயல்பட தொடங்கின. பதட்டத்தில் நடு பட்டனை அழுத்தி, கை பேசியை அனைத்து வைத்துவிட்டான்.
மனதில் ஏதோ பதட்டம் , என்ன செய்வதென்று புரியவில்லை, உடனே தன் சிம் அட்டையை வேறொரு கைபேசிக்கு மாற்றினான். நம் அனைவர் வீட்டிலும் காப்புப்பிரதிக்கு வைத்திருக்கும் அடிப்படைக் கைபேசி போல் ஆதேஷு ம் வைத்திருந்ததலில் ஆச்சரியம் இல்லை. தன் நெருங்கிய நண்பனுக்கு அழைத்தான்.
‘சதீஷ் சீக்கிரமா வாடா!’ ஆதேஷ் சொன்னான் , ‘சதீஷ் , ராஜேஷ் , ராஜா, கணேஷ்’ இந்த பெயர்களில் உங்களுக்கு நண்பர்கள் இல்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் தொண்ணூறுகளுக்கு பின்னால் பிறந்திருக்க வேண்டும்.
‘எப்பையும் ஜியோ ஓனர் மாதிரி வாட்ஸ்ஆப் கால் பண்ணுவ ?’ சதீஷ் கிண்டலாக கேட்டான்.
‘மச்சா செம கண்டுல இருக்கேன் , ஒழுங்கா வா’ ஆதேஷ் பதட்டத்தில் பேசினான்.
ஆதேஷின் அப்பா ஊரில் அனைவருக்கு தெரிந்தவர். அவரின் பண்பும், குணமும் அனைவருக்கு தெரிந்த ஒன்று. ஆதேஷ் ஒரு வித பதட்டத்திலேயே இருந்தான், இது உணரக்கூடியது தான், நம் நாளில் பெரும் பகுதி கைபேசியோடு இருக்கும் பொழுது நம் ரகசியங்கள் பெரிதும் அதனிடம் இருப்பதில் மாற்று கருத்தில்லை. நம் ரகசியம் தெரிந்த ஒருவர் நமக்கு இணக்கமாக இல்லாமல் திடீரென மாறினால் இருக்கும் பதட்டம் போல தான் இது.
‘மச்சா , மொபைல் ஆன் பண்ணா அது இஷ்டத்துக்கு ஏதோ ஏதோ பண்ணுது, பாதி சிகிரீன் டிஸ்பிலே போயிடுச்சி’ ஆதேஷ் சொன்னான், அதே பதட்டம் .
‘சரி வா டா , சர்வீஸ் கொடுத்திட்டு வரலாம்’ சதீஷ் சொன்னான்.
இருவரும் சேர்ந்து கைபேசி சரிசெய்யும் இடத்திற்கு சென்றனர். ‘தம்பி டிஸ்பிலே போயிடுச்சி , ஃபுல்லா மாத்தணும், ரெண்டு இருக்கு , மூவாயிரத்தி ஐநூறு இன்னொன்னு ரெண்டாயிரத்தி ஐநூறு’ கடைக்காரர் சொன்னார்.
‘எவளோ நேரமாகும்?’ ஆதேஷ் கேட்டான்.
‘குடுத்திட்டு போங்க , நாளைக்கு காலைல ரெடி பண்ணிடலாம்’ கடைக்காரர் சொன்னார்.
‘அப்போ , நாளைக்கு கொண்டு வரட்டுமா’
‘இல்ல தம்பி, டிஸ்பிலே வாங்க போறப்போ மொபைல் போட்டு டெஸ்ட் பண்ணனும், அதான்’ கடைக்காரர் சொன்னார்.
‘ஒரு நிமிஷம் அண்ணா’ சொல்லிவிட்டு சதீஷ் உடன் கடைக்கு வெளியில் வந்தான்.
‘என்ன மச்சி , மொபைல ஒரு நாள் வெச்சிருக்கேன்னு சொல்றார், சேஃப்பா?’ ஆதேஷ் கலவர எண்ணத்தோடு கேட்டான்.
‘இதுல என்ன டா சேப்டி?’ சதீஷ் கேட்டான்.
‘பர்சனல் டேட்டா இருக்குல்ல’ ஆதேஷ் சொன்னான்.
‘அது , அந்த நாலு சன்னி லியோன் படமா? இப்போலாம் எல்லாருமே பாப்பாங்கன்னு அவருக்கு தெரியும் டா ‘ சதீஷ் ஆறுதல் படுத்தினான்.
‘இல்ல டா , அப்பா கிட்ட சொல்லிட்டாருன்னா ?’ ஆதேஷ் கவலைப்பட்டான்.
‘உங்க அப்பாக்கு தெரியும் டா , அவரும் நம்ம வயச தாண்டித்தானே வந்திருப்பார்’ சதீஷ் சிரித்தவாறு சொன்னான். ஆனால் ஆதேஷ் தயக்கத்தோடு இருந்தான். அந்த நேரம் ஒரு அழைப்பு வந்தது. ஆதேஷ் சதீஷிடம் இருந்து சற்று ஒதுங்கி நின்றான். சதீஷ் உற்று பார்த்து கொண்டிருந்தான்.
‘பேபி, மொபைல் ரிப்பேர் ஆயிடுச்சி , கடைக்கு வந்திருக்கேன்’ ஆதேஷ் சொன்னான்.
‘டேய், சேஃப்பா? கவனம் டா’ என்றது அந்த பெண் குரல்.
‘நா பாத்துக்குறேன் டா , பாய்’ ஆதேஷ் சொல்லிவிட்டு சதீஷ் நோக்கி திரும்பினான்.
‘என்ன டா நடக்குது இங்க?’ என்று வடிவேலு பாணியில் சதீஷ் கேட்டான்.
‘இல்ல மச்சா, என் ஆளு கூட கொஞ்சம் பர்சனலா பேசுனதுலாம் இருக்கு, அதான்?’ ஆதேஷ் சொன்னான்.
‘டேய் முரட்டு சிங்கள் , இது எப்போ நடந்தது?’ என்று சதீஷ் கடிந்து கொண்டான் , ஆதேஷ் பேசினாலும் பதில் சொல்லாமல் இருந்தான். ‘கோச்சுக்குற நேரமாட இது’ ஆதேஷ் கேட்டான்.
‘சரி , டென்ஷன் ஆகாத, புது மொபைல் வாங்கிக்கலாம், இத சர்வீஸ் தரவேண்டாம்’ சதீஷ் சொன்னான்.
‘புது மொபைல் அப்பா கிட்ட கேட்ட ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பார், இதே கடைக்கு கூட்டிட்டு வந்துடுவார்…
அண்ணா கிட்ட கேக்கறதுக்கு கேக்காமயே இருக்கலாம், ரொம்ப கொடச்சல், என்ன பண்றதுனே புரியல’ ஆதேஷ் கொஞ்சம் கண் கலங்க ஆரம்பித்தான்.
‘நீ தான் லாக் போட்டிருக்கல்ல , அப்பறம் என்ன?’ சதீஷ் சொன்னான். ‘அவரு ஹேக் பன்னிட்டாருன்னா?’ ஆதேஷ் மறுமொழி சொன்னான். ‘அதெல்லாம் ஒன்னும் செய்யமாட்டாறு டா , அவரு இங்க தானே வாழ்க்கை நடத்தணும் , பாத்துக்கலாம்’ ஒரு வழியாக ஆறுதல் சொல்லி கடைக்காரரிடம் மீண்டும் சென்றனர்.
‘அண்ணா, நாளைக்கு கெடச்சிடும்ள?’ சதீஷ் கேட்டான் அவரும் தலை ஆட்டினார். கைபேசி குடுத்து விட்டு கிளம்பும் பொழுது கடைக்காரர் ‘தம்பி பாஸ்வர்ட் இருக்கா இதுல, இருந்தா கொடுத்துட்டு போங்க’.
‘மச்சி என்னடா ?’ ஆதேஷ் பதறினான்.
‘பதட்டப்படாதடா…’
‘எதுக்குண்ணே பாஸ்வர்ட்?’ சதீஷ் கேட்டான். ‘மொபைல் ஸ்கிரீன் மாத்திட்டு மொத்தம் செக் பண்ணனும் ல’ கடைக்காரர் சொன்னார்.
‘ஆப் லாக் போட்டிருக்கிய டா?’ சதீஷ் குறைந்த குரலில் கேட்க இல்லை என்று தலையசைத்தான் ஆதேஷ்.
‘அண்ணா, நாங்க அப்பறமா ரிப்பேர் பண்ணிக்குறோம்’ என்று சதீஷ் சொன்னான். ‘டேட்டா மிஸ்யூஸ் பண்ணமாட்டோம் பா, நம்புங்க ‘ கடைக்காரர் சொன்னார். ‘இல்லணே வேண்டாம்’ சதீஷ் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
‘மச்சா இந்த மொபைல எங்கயும் சர்வீஸ்க்கு தராத!, தங்கச்சிக்கு எதாவது பிரச்சனை ஆயிடும், கொஞ்ச நாளைக்கு இந்த பேசிக் மொபைல் யூஸ் பண்ணிக்கோ’ சதீஷ் சொல்லிவிட்டு ஆதேஷை வீட்டில் விட்டு சென்றான். அழைப்பு வந்தது.
‘என்னடா ஆச்சு’ ஆதேஷிடம் இருந்த பதட்டத்தைவிட அதிக அளவு, அந்த பெண் குரல் லேசாய் உடைந்திருந்தது.
‘மொபைல் சர்வீஸ்-க்கு தரல இனிமே பேசிக் மொபைல் தான்’ ஆதேஷ் சொன்னான். கொஞ்ச நேரம் பேச்சு நீண்டது.
‘டச் மொபைல் இல்லாதது ஏதோ மாதிரி இருக்கு’ ஆதேஷ் சொன்னான்.
‘எனக்கு நிம்மதியா இருக்கு’ என்றது அந்த பெண் குரல்.
‘என்னடி சொல்ற’ ஆதேஷ் கேட்டான்.
‘இனிமே அப்படி அனுப்பு இப்படி அனுப்புன்னு இம்சை பண்ணமாட்டல அதான்’ கொஞ்சம் விளையாட்டாக சொன்னாலும் உண்மையை சொல்லிவிட்டாள்.
***முற்றும் ***
Nice one..