களத்துமேடு – அத்தியாயம் 8

எழுத்து: அரன்

“மாமா…”
“சொல்லுடி மானே…”
“கொஞ்சலெல்லாம் வேணாம். மயக்கி மடியில சாச்சி, என்னைய மடிசொமக்க வச்சிராத… “
இடையில் சிறு அமைதி. சீரான இடைவெளியில் கொஞ்சம் மூச்சு சத்தம்.


“எங்கதான் விடுற… சட்டியில கொதிக்குற கோழியாட்டம், சூடா, பதமா தான் இருக்க.. கழுத்த தொட இன்னும் கைக்கு தான் உரிம இருக்கு…
உதட்டுக்கு தரலேயே.. “
“நெனச்சன்… என்னடா நாய்க்கு நக்க செரட்டைல காப்பி இருக்கே.. ஆனா பின்னவே வருதேனு… “
“அடியே நம்பு டி… விட்டுட்டு எங்க போயிர போறனாம். “
செங்காளை அவள் தோளை பிடித்து நம்பிக்கை கொடுத்தான்.
“என்னவோ… நீ சொல்றனு தான் நம்பிக்கைல இருக்கன்… எங்கப்பன் இருளப்பன் உனக்கு ஆவாது… கொலைகார மச்சான் வேணான் னு எதாவது சாக்கு சொன்ன… என் இடுப்புக்கு நீ கொடுத்த கொடி, என் மாமன் உனக்கு நினைவா என் கழுத்துல தொங்கும்… கூடவே நானும் தொங்கிருவன் பாத்துக்க.. “
சொல்லிவிட்டு சுவர் தாண்டி, அக்கும்மிருட்டில் நடந்து சென்றாள், இளவழகி.


—–××××—–××××——


“மதினி… ஏல சிங்காரோன்… “
அண்ணன் இருளப்பன் வீட்டு வாசலில் வந்து திண்ணையில் உட்காந்தாள் பொன்னியின் அம்மா.
“ஏ நாத்தனா… இப்படி திண்ணையில உக்காந்தா ஊரு என்ன பேசும்.. உன் அண்ணன் வீடு தான, உள்ள வா த்தா.. ” அழைத்து உட்கார வைத்தாள் அண்ணன் இருளப்பன் மனைவி. 
” அண்ணன் எப்படி இருக்காக… நீங்க, சிங்காரோன் லாம் சௌக்கியமா? “
“நல்லா இருக்கோமுடி… நாலு தெரு, ரெண்டு கோயிலு தாண்டுனா வூடு.. ஒரு வாரத்துக்கு ஒரு முற வந்து போனாத்தான் என்ன… “
” சமையல் வேல, வூட்டு வேல சரியா இருக்கு மதனி.. இந்த பொன்னியும் வீட்டு வேல, சமையல் வேல னு கத்துக்காம.. புள்ளையலுக்கு பாடன் சொல்லிக்கொடுக்கன், நாட்ட பெருமப்படுத்துறன் னு உசுர வாங்குறா.. “
புலம்பினாள் பொன்னியின் அம்மா.


“கேள்விப்பட்டேன் டி… சிங்கரமும் உம் சொன்னான்.. சனி ஆனா கீழ தெரு ல தான் கிடைக்காலாமே… இப்படி இவ இருந்தா நம்ம எனத்தான் எவன் கேட்டு வருவான்.. அழகு சேலையாட்டம் இருந்தா போதுமா… இனப்பெரும கொஞ்சம் வேணாம். “
“நம்ம சொல்லி என்ன இருக்கு. நம்ம கைய மீறி போவாது. “
சொல்லிக்கொண்டே மதனி கொடுத்த காப்பியை குடித்தாள் பொன்னியின் அம்மா.


—–××××——××××—–


” யெத்த… வந்ததும் உடனே கிளம்புற… சரி இரு நா வண்டில உட்டுறன். “
கட்டியிருந்த கைலியை மடித்து கெட்டி வண்டியை எடுத்தான் சிங்காரம்.
“ஏல யெண்ணன் மவனே… நாலு நடைக்கு வண்டியா … நா பாத்துக்குர.. “
“ஏறு அத்த… மாமா என்ன நினைப்பாக! “
முறுக்கிய வேகத்தில் பொசுக்கென வந்து நின்றது வண்டி வீட்டில்.
“வந்து தலையாச்சும் காட்டிட்டு போயா… அம்மாட்ட கூட இளவழகி பத்தி கேக்க மறந்துட்டேன் பாரு. “
“பரவால்ல அத்த… நீயாச்சும் எங்கள மறக்காம இருக்கியே.. நம்ம பெரும குல வழக்கமும் மனசுலயே இருக்கட்டும். “
புகையை கிளப்பி விட்டு சென்றவன், அத்தை மனசையும் குழப்பி சென்றான்

(நெல்வாடைகள் தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *