எழுத்து: சபரி
சீதா , மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சதா அணிக்குள் நடக்கும் கூட்டங்களும், அரைவேக்காடு அலுவலக அரசியலும், அதை சமாளிக்கும் யோசனைகளுமாக நாட்களை கடத்தும் ஒரு பெண். தொடர் வேலைக்கு மத்தியில் அவ்வப்போது மாமியார் குடைச்சல் வேறு.
என்று போல் இல்லாமல் அன்றைக்கு இன்னும் கெடுபிடி அதிகமானது, அலுவலக அரசியலுக்கு ஆளாகாத ஆட்கள் உண்டோ. ஆழ்துளை கிணற்றுக்காக பூமியை துளைக்கும் சத்தம், அது நாள் முழுக்க அவளது மண்டைக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த சத்தம் இன்னும் தனது ஆதிக்கத்தை அதிகமாக்கியது. தன் இளையோர் செய்யும் சிறு சிறு பிழை கூட பெரிதாக்கி ஏழுகட்டையில் ஏறி கத்திக்கொண்டிருந்தாள் .
தற்செயலாக அவளின் கணவர் அலைபேசியில் அழைத்தார்.
‘எப்படி போகுது’
‘நாசமா போகுது ‘
‘என்னனு சொல்லிட்டு வை’
‘சாப்பிட்டியா ன்னு…’
‘ஆச்சு பாய் ‘ கணவனிடம் பேச வேண்டுமென்று ஆசை இருந்தாலும் அதை தூக்கி சாப்பிட்டு விடுகிறது வேலைப்பளு.
இருக்கும் பிரச்சனை போதாதென்று சீதாவிற்கு மாதவிடாய் ஆனது. சரி வீட்டுக்கு போகலாம் என்றால் , இன்றைய வேலை அப்படியே நின்றுவிடும் என்ற பயம். சிறிதாய் மேஜையில் இடித்து கொண்டாலே ஒரு மணி நேரம் அதைப்பற்றியே யோசித்து கொண்டிருப்போம், இது போன்று உடலையும் மனதையும் வறுத்த கூடிய விஷயம் என்றால்? அதை செய்ய பெண்ணால் மட்டுமே முடியும். எப்படியோ நாள் கழிந்தது , வீட்டிற்கு செல்லலாம் என்று எழுந்தாள். நாள் முழுக்க இந்த மேலாளர்கள் என்ன செய்வார்களோ சரியாக கிளம்பும் நேரத்தில் வேலை தருவது தான் வழக்கம் , சீதாவும் விதி விளக்கல்ல. மேலும் ஒரு மணி நேரம் மனதில் தாங்காத நினைவுகளாக கழிந்தது. உச்சகட்ட எரிச்சல். எவராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவாள் போல் இருந்தது.
மனோ, நாள் முழுக்க எதற்காக திட்டு வாங்குகிரோம் என்று கூட தெரியாத ஒரு வேலை. பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் , என்ன வேலை செய்தாலும் அதில் குறைகண்டுபிடிப்பதுதான் அவனுடைய மேற்பார்வையாளர் வேலை. எல்லையற்ற சகிப்புத்தன்மை மனோவுக்கு வளந்துவிட்டது, வீட்டில் ஒரு வார்த்தை கூட ஏற்க முடியாத மனோ, இங்கு படும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. தேநீர் பருக சென்றால் கூட ஐந்து நிமிடத்திற்கு மேல் விடமாட்டார் அவனுடைய மேற்பார்வையாளர். பொறுத்து பொறுத்து போதும் என்றாகி விட்டது, இதுவரை பத்து முறைக்கு மேல் சிரி செய்த டாக்குமெண்டை மீண்டும் ஏதோ ஒன்றை சொல்லி மறுவேலை செய்ய சொன்னார். அதிக தீயில் காய்ந்து கொண்டிருந்த பால் போல் ஒரே நொடியில் தலைவரை கோபம் ஏறியது.
‘எத்தனை தடவ சார் சொல்லுவீங்க, ஒரேடியா சொல்லுங்க எல்லாத்தையும் மாத்திடுறேன்’
‘எனக்கு வேற வேலை இல்ல பாரு, மொதல்ல இத மாத்திட்டு வா’
‘சார், நாளைக்கு பாக்குறேன், இன்னைக்கு கிளம்பனும்’
‘முடிச்சிட்டு போ பா’
‘இல்ல சார் , நான் கிளம்புறேன்’ விடாப்பிடியா கிளம்பினான் மனோ. தன் இயலாமை கண்களில் கண்ணீர் வர வைத்தது. சக மனிதனை இப்படி இம்சிக்க வேண்டுமா? தனக்கு தானே யோசித்துக் கொண்டு நடந்தான் மனோ.
ராதா, நாள் முழுக்க தையல் இயந்திரத்தை மிதித்து மிதித்து கூடிய சீக்கிரம் கீழ்வாதம் வரக்கூடும் வேலை. ஒவ்வொரு வரிசைக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார்கள். சிறு பிழை என்றாலும் மறுபடியும் பிரித்து தைக்கவேண்டும். இந்த கார்மெண்ட்ஸ் மேற்பார்வையாளர்களுக்கு என்னதான் பிரச்சனையோ இருக்கும் எல்லா கோவத்தையும் தையல் ஊழியர்களிடம் தான் காண்பிப்பார்கள். மதிய உணவிற்கு நாற்பத்தைந்து நிமிஷம் ஆனால் வெறும் பதினைந்து நிமிஷம் தான் சாப்பிட நேரம் இருக்கும், கை கழுவ குனிந்து நிமிரும் ஒரு நிமிஷம் தான் அதற்குள் தையல் இயந்திரம் மேல் இமயமலையாய் குவியும் துணிகள். கார்மெண்ட்ஸ் , படிப்பறிவில்லாத பெண்கள், கணவனை பிரிந்த பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தை காக்கும் பெண்கள், இவர்களுக்கெல்லாம் வேலை தந்து வாழ்க்கை நடத்த உதவும் கோவில் என்றே சொல்லலாம். இந்த வரிசை மேற்பார்வையாளர் வாங்காத சாபங்கள் இல்லை.ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று இலக்குகள் உண்டு. ராதாவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல் குணா தான், கொஞ்ச நேரம் பேசுவதற்குள் மேற்பார்வையாளர் சொல்லும் வார்த்தைகள் காதுகொடுத்து கேட்க முடியாது. அதை விட பெரிய பிரச்சனை கார்மெண்ட்ஸ் வேலைக்கு செல்லும் பெண்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வை.
‘டேய் இன்னைக்கு லேட்டாகும் போல இருக்கு டா ‘
‘எப்படியாவது சொல்லிட்டு வா’
‘இந்த அம்மா விடமாட்டாங்க டா , ஒரே நச்சு’
‘சீக்கரம் முடிச்சிட்டு வாயேன்’
‘பாப்போம்’
மேற்பார்வையாளர் ‘அங்க என்ன மா, ஒரு துணி ஒழுங்கா தைக்க முடியல சிங்காரிச்சிகிட்டு வந்துடுறாளுங்க’
‘அக்கா என்னோட இருவது பீஸ்ச நீங்க தைச்சிடுங்க கா’ அடிமட்ட ஊழியர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லையென்றால் வேறு என்ன ஆறுதல் இருக்கிறது அவர்களுக்கு.
இரவு ஏழரை மணி.
‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு அரக்கோணம் வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி பதிமூன்றாவது நடைமேடைக்கு வந்து செல்லும்’
ஒவ்வொரு நிமிஷமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட நடுத்தர மக்கள் நடமாடும் புறநகர் ரயில்நிலையம், ஒவ்வொரு வண்டியிலும் பத்தாயிரத்திருக்கும் மேற்பட்டோர் பிரயாணம் செய்யும் ரயில். ரயிலில் இடம் பிடிப்பதே ஒரு பெரிய கலை, எந்த நடைமேடையில் வந்தால் எங்கு நிற்க வேண்டும், லேடீஸ் பெட்டிக்கு பக்கத்து பெட்டி எப்பொழுதும் கூட்டமாய் இருக்கும், லக்கேஜ் பெட்டி கொஞ்சம் காலியாக இருக்கும் ஆனால் கொஞ்சம் வாடை அதிகமாக இருக்கும். முதல் பெட்டி கடைசி பெட்டியில் நெரிசல் அதிமாக இருக்கும். வண்டி நிற்பதற்குள் சர சரவென வண்டிக்குளே பாயும் இளைஞர்கள், ஒரு பெட்டியில் துண்டை போட்டுவிட்டு அந்த பெட்டியை தொடர்ந்து ஓடும் நடுத்தர வயதுக்காரர்கள். ஆனால் இது எதுவும் செய்யாமல் வயதானவர்கள் என்ற ஒரே காரணத்தால் இடம் பிடித்துக்கொள்ளும் முதியோர்.
நாள் முழுதும் மண்டை காய்ந்து , ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிய சீதா,மனோ , ராதா மற்றும் ராதாவின் காதலன் குணா, இவர்களின் ஒரே ஆறுதல் இந்த நாற்பத்தைந்து நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ரயில் பயணம் தான். நடைமேடையில் ஆளுக்கொரு பத்து ரூபாய் பட்டாணி சில சமயம் தேங்காய் பிஸ்கட். வழக்கமாக ஏறும் பெட்டியில் வழக்கமாக ஏறும் அனைவருக்கும் இடம் போட்டு விடுவார்கள். ரயில் பேசின் பிரிட்ஜ் தாண்டியதும் சோமு அண்ணா ஆரம்பிப்பார் ‘சக்கரையில் பந்தலிட்டு’ அப்படியே மெல்லிசை மன்னர் பாடல்களில் ஆரம்பித்து இசைஞானி பாடல்கள் வரை களைகட்டும். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டமாக எல்லோரும் சேர்ந்து பாட ஆரம்பிப்பார்கள். நாள் முழுக்க சித்தரவதை செய்த மேல் அதிகாரிகளை இங்கே திட்டி மகிழ்வார்கள்.
வெங்காய சமோசா, தேங்கா பிஸ்கட், நெய் பிஸ்கட், கார பொறி, அவிச்ச வேர்க்கடலை, சுண்டல் , பட்டாணி கூவி வரும் வியாபாரிகள். ரயில் வண்டியில் இலவச இசை கச்சேரி, மனசார திட்டி தீர்க்கும் கிசுகிசுக்கள், என்ன வேலை, என்ன சாதி, என்ன சம்பளம் என்று எந்த பேதமும் பார்க்காத அன்றாட ரயில் பயணங்கள். ரயிலின் இரைச்சல் அலுவலகத்தில் மண்டைக்குள் கேட்கும் சந்தைக்கடை சத்தத்தை விட குறைவே.
Gud one…Nice👌