பூச்சாண்டி வாரான்

எழுத்து : சபரி

‘டேய் மோகன் நில்லுடா .’

‘நீயாவது ஒரு வாய் சாப்புடு ‘ பாட்டி அமுதாவை பார்த்து சொன்னாள்.

‘எங்க ரெட்டை சுழிகளை காணோம்’ பாட்டி சோற்று தட்டை கையில் ஏந்தி வீடு முழுக்க இரட்டையர்களை தேடி சுற்றி வந்தாள்.

பகல் பொழுதில் வீட்டில் மாப்பிள்ளையும் பெரிய பொண்ணும் காட்டுக்கு போயிடுவாங்க. சின்ன பையனும் மருமகளும் கடைக்கு போயிடுவாங்க. தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் வீட்டில் இருப்பார்கள். பெரும்பாலும் ஆண்கள் நாற்பது வயசு தாண்டுனாலே வீட்டில பாதி வேலை செய்யமாட்டாங்க, வெளி வேலை வெளி வேலைன்னு ஒரு மணி நேரம் டீ கடைல அரசியல் கதை அளந்துட்டு நாள் முழுக்க சாய்வு நாற்காலில காலத்தை ஓட்டவேண்டியது.

பாட்டி தனியாளாத்தான் குழந்தைகளை பார்த்துக்குவாங்க, பாட்டிமார்கள் கிட்ட பத்து பேரப்பிள்ளைகளை கொடுத்தாலும் பாத்துக்குவாங்க. குழந்தைகள் பெரும்பாலும் ரோஜா செடி மாதிரி ரொம்ப பாத்துக்கிட்டா அழுகிடும் பாத்துக்காமயே விட்டுடா காஞ்சி போயிடும். சுமார் தொண்ணூறுகள்ல பிறந்தவங்க தான் கடைசி தலைமுறை பாட்டி தாத்தா ஓட நினைவுளோட இருக்குறது.

மாப்பிள்ளை ஒரு கம்யூனிசவாதி, பாட்டி ஓட பொண்ணு தைரியமா கலப்பு திருமணம் பண்ணிகிட்டாங்க, எல்லா தம்பதிகளும் பயன்படுத்துற பேரப்பிள்ளைகள் யுக்தியை இவங்களும் பயன்படுத்தி அம்மாவோட சேந்துட்டாங்க. அதுக்கு முன்னாடி மில்லுல வேலைப்பார்த்துக்கிட்டு இருந்த மாப்பிள்ளை மாமனார் சொன்னதை கேட்டு காட்டை பார்த்துக்க ஆரம்பிச்சார். விவசாயியா மாறுனது அவர் கம்யூனிசம் பேச இன்னும் வசதியா இருந்தது.

பாட்டியும் தாத்தாவும் பேய் கதை சொல்வதில் வள்ளுநர்கள். இரவு நேரத்தில் குழந்தைகள் வீட்டில் பேய் இருக்கும் என்று சொன்ன இடத்திற்கெல்லாம் அலைவதில்லை முற்றத்திலும் பொதுஅறையில் மட்டும் இருப்பார்கள். பாட்டி இரவு நேரத்தில் பேரப்பிள்ளைகளை சுற்றி அமர வைத்து மத்தியில் மண்ணெண்ணெய் அடுப்பில் தோசை சுட்டு கொடுத்து கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் ஆவேசமாக கூட்டத்தில் பேசிவிட்டு வந்திருந்தார் மாப்பிள்ளை ஜீவா.

‘தம்பி தோசை சாப்புடுறீங்களா ?’பாட்டி கேட்டாள்.

‘இல்ல மா பசங்களுக்கு கொடுங்க நா அப்புறம் சாப்ட்டுக்குறேன், மலர் எங்க?’ ஜீவா கேட்டான்.

‘கோவிலுக்கு போயிருக்கா !’ பாட்டி சொன்னாள்.

‘ஊருக்கே உபதேசம் பண்ணுறேன் என் வீட்ல இருக்கவங்கள மாத்தமுடியல’ ஜீவா கடிந்து பேசினான்.

‘அப்படி சொல்லாதீங்க சில விஷயம் கொஞ்சம் கொஞ்சமா தான் மாறும்’ பாட்டி சொன்னாள்.

‘கல்யாணத்தபோ கோவில் பக்கமே போகமாட்டாள் அத நம்புனது தப்பாப்போச்சி” ஜீவா மேலும் ஆக்ரோஷமானான்.

பாட்டி நிதானமாக சொன்னாள் ‘எல்லாத்துக்கு ஒரு காலம் வரும் தம்பி மாற்றத்தை ஏத்துக்கணுமில்ல’. பாட்டி பல அர்த்தங்களை உள்ளே வைத்து பேசினாள். ‘இப்போ என்ன நா என்னோட கொள்கைளயிருந்து மாறிடுவேன்னு சொல்றிங்களா’ ஜீவா சொல்லிவிட்டு கோபமுகத்துடன் பாட்டியை பார்த்தான். ‘அப்படி இல்ல மாப்பிள’ பாட்டி அதன் பிறகு ஒன்றும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்தார்.

‘பாட்டி பேய் கதை சொல்லு?’ என்னதான் பயமாயிருந்தாலும் குழந்தைகளுக்கு பேய் கதையில் ஒரு ஆர்வம் தான்.

பாட்டி எதுவும் சொல்லாமல் இருந்தாள். மீண்டும் குழந்தைகள் கேட்க ஜீவாவிற்கு கோவம் வந்துவிட்டது. ஒரு தந்தைக்கு அவருடைய குழந்தை தவிர வேறுயார் இவ்வளவு உரிமையுடன் கிடைப்பார்கள். ஜீவா ‘பேயுமில்லை ஒண்ணுமில்லை உங்க பாட்டி கப்சா விடுறாங்க’ சத்தமாக பேச ஆரம்பித்தான். தாத்தாவும் பாட்டியும் என்ன செய்வதென்று புரியவில்லை ‘மாப்பிள சின்ன பிள்ளைங்கதானே கோவப்படாதீங்க’ தாத்தா சொன்னார்.

‘இப்போவே இப்படி சொல்லிகுடுத்த எப்படி மாமா’ ஜீவா கொஞ்சம் தணிந்த குரலில் சொன்னான்.

‘ஒரு சுவாரஸ்யத்துக்காக தான் ‘ பாட்டி குறுக்கிட்டாள்.

‘ஏதோ சொல்லி வாய்யா அடைச்சிடுங்க மா’ ஜீவா நிதானமாக சொன்னான். ஆனால் பாட்டிக்கு தெரிந்தது மலர் இன்றிரவு படப்போகும் பாடு. அதற்கு கொஞ்சம்கூட மாறாமல் இரவு சத்தமும் திட்டுகளுமாக கடந்தது.

ஒரு மாதம் கழித்து பாட்டியோட சின்ன பையன் கோவில் திருவிழாவுக்கு பெரிய காணிக்கை குடுத்ததால கோவில் நிர்வாகம் குடும்பத்தோட மரியாதை செலுத்த கார்த்திகை பூஜைக்கு அழைத்திருந்தனர்.

‘எப்படியும் அவர் வரப்போறதில்ல, குழந்தைகளும் ரொம்ப நேரம் முழிச்சிருக்க மாட்டாங்க அதனால குழந்தைகள அவர் பார்த்துக்கட்டும்’ மலர் சொன்னாள்.

‘இல்ல மாப்பிளை களைப்பா வருவார்ல’ தாத்தா சொன்னார்.

‘பரவில்லை ஒரு நாள் தானே அவர் கம்யூனிசம் கூட்டத்துக்கு போறப்போ அவர் வேலையெல்லாம் நாம தானே செய்யுறோம்’ மலர் சொன்னாள். ஜீவாவும் ஏற்றுக்கொண்டான்.

‘ஹே ஒரு எடத்துல இருங்கடா ‘ ஜீவா கத்திகொண்டே சோற்று தட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான்.

மோகன் பின்பக்கம் மாட்டு தொழுவம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். அமுதா மாடியில் இருக்கும் ஒரே ஒரு படுக்கை அறைக்கு படிகள் மீது ஏறிக்கொண்டிருந்தாள். ரோஹனும் ரோஷனாவும் முற்றத்தை சுற்றி கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் போராடியும் ஒரு பையனும் இல்லை. குழந்தைகள் ஓய்ந்தபாடில்லை. வேறு வழியில்லாமல் ‘மோகன் பின்னாடி பேய் இருக்குடா இங்க வாடா’ ஜீவா சொன்னான்.
‘பேயுமில்லை ஒண்ணுமில்லை கப்சா விடாதீங்க’ மோகன் கத்தியவாறு சொன்னான் ஆனால் அவன் எதையோ பார்த்து பயந்துவிட்டான், வீட்டிற்குள் ஓடி வந்தான் ‘அமுதா , ரோஹன் , ரோஷனா வீட்டுக்கு பின்னாடி பேய் இருக்கு’. வந்தவர்களை ஒரே பிடியாய் பிடித்து பேய் கதைகள் சொன்னார், குழந்தைகள் கப் சிப் என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை

ஜீவா உணவருந்திக்கொண்டிருந்தார்.
‘என்ன எல்லாரும் சமத்தா இருக்கீங்க’ பாட்டி குழந்தைகளிடம் கேட்டாள்.
‘பாட்டி, மாமா பேய் கதை சொன்னாரே’ ரோஹன் சொல்லிவிட்டு அவனுக்கு வாங்கி வந்திருந்த பல வண்ணம் கொண்ட குட்டி காத்தாடியை கையால் சுற்றி கொண்டிருந்தான்.

ஜீவாவும் பாட்டியும் புன்னகை பகிர்ந்து கொண்டார்கள்.

*****முற்றும்****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *