களத்துமேடு – அத்தியாயம் 3

எழுத்து : அரன்

போகிற வழியெல்லாம் நல் நேசமும், நல் வார்த்தைகளும் செழிக்க செய்வேன்’, படுக்கையறை கண்ணாடியின் பக்கம், தன் பொன்மொழியை ஒரு முறை பார்த்துக்கொண்டாள்

பொன்னி.தலையில் ஈரம் இறங்க கட்டிய துண்டைக் கழற்றியவள், நீள சீப்பின் உதவியில் கேசம் சீவி நன்கு கொண்டையிட்டாள். வட்ட முகமும், அளவு கூடா சதையும், புன்முறுவல் முகமும் கூட அமைவதெல்லாம் அகத்தின் வெளிப்பாடு தான்.”ம்மா, நா கிளம்புறன். வர சாயிங்காலம் நாலாவும். டப்பா ல சோறு இருக்கு. “, நெற்றியில் கொஞ்சம் திருநீறு இட்ட தாயிடம் சொன்னாள். அம்மாவுக்கு சுத்தமாக பிடித்தமில்லை. மேலத்தெரு உலகம்மன் கோவிலுக்கு வரிக்கொடுக்கிறோம். பெத்த பொண்ணு என்னடானா அது இஷ்டத்துக்கு கீழ தெரு போய் வருது. வெள்ளந்தியா இருக்காளா.. இல்லை என்ன சொல்லி நிறுத்தனு தெரியலையே கதை தான். “உன் பழக்கம், உன்னோட பார்வை எல்லாம் உன்கூடவே வச்சுக்க. பேரு மட்டும் உலகம்மன் னு சாமிக்கு வச்சி கும்பிடிர்றது. ஆன கோயில் கல்வெட்டு, கோவில் போர்டு னு எல்லாத்துலயும் இது இன்னாருக்கு பாத்தியப்பட்ட கோவில் னு எழுதி வக்கிறது. நீயும் மாற மாட்ட.. என்னையும் தடுப்ப.. வேலைக்கு ஆவாதுமோவ். “, சொல்லிவிட்டு வெயிலுக்கு தோதாக குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.சந்துகளை இடித்தாற்ப்போல நாலு தெருக்களை உள்ளடக்கிய பகுதி தான் வேலன் குடியிருப்பு. ஊருக்கு பின்பகுதியில் இருந்ததாலும், அந்த தெருக்களுக்கு பின்னே வயலும், அதன் பின்னே காடும் இருந்ததாலேயே கீழத் தெரு என பெயர் வந்தது வேலன் குடியிருப்புக்கு. வேலன் எனும் பெயரைக்கொண்டதாலோ என்னவோ, வேளாண் முதல் கட்டட வேலை வரை சளைக்காமல் உழைக்கும், ஆரோக்கிய மக்கள் வாழும் மண். சொட்டும் வியர்வையும், அதற்க்கேற்ப குடிக்கும் கம்பும் கேப்பையும் என எளிய வாழ்க்கை கொண்டு வாழக் கற்றுக்கொண்ட சொந்தங்கள்.ஊரின் வளர்ச்சிகளில் ஒன்றிணைந்து கூடவே, ஊரார் மனதிலும் எப்போதும் ஒன்றாய் நிற்க நினைக்கும் மக்கள் கொண்ட குடியிருப்பு.பால் பண்ணை தாண்டி வந்த சின்னப் பொட்டிகடையில் நின்றாள் பொன்னி. ‘இருபது சௌமிட்டாய், இருபது சூடமிட்டாய் கொடுங்கண்ணா.”நீ வந்தாதான் ஆத்தா, சனிக்கிழமை நே தெரிது. காலேஜ் எல்லாம் முடிச்சிட்டியாம். கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க உன் ஆத்தா அப்பன் னு பேச்சி அடிப்பட்டுச்சி. நெசந்தானா! ”நீங்க வேற. வயசு இருபத தாண்டுனா உடனே வர்ற பேச்சு தான. கழுத்துல மஞ்ச கயிற ஏத்துறதும், வயித்துல உடனே புள்ளைய வாங்குறதும் என் நோக்கு இல்ல வாழ்க்கைல. புரிஞ்சவங்களுக்கு சரி. புரியதவங்களுக்கும் சரி. பதில் சொல்லிலாம் மாளக்கூடாது. விட்றனும் அப்படியே.

‘ பொன்னி சொல்கேட்டு தலையாட்டி ஆமோதித்தார் பெட்டிக்கடை அண்ணன்.பொன்னியின் நடைக்கு முன்னரே அவள் கொலுசு சத்தம் தெருவை நிறைத்தது. மெல்ல நடக்க, மன்றத்தை அடைய, பத்து வயது எட்டா பத்து செல்ல மழலைகள் சூழ, மிட்டாய் கொடுத்து, கதை சொல்லி, கல்வியும் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள் பொன்னி.

———××××——–××××——-

மாயாண்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வர, விரசாக வண்டியில் வந்து உரக்கடை முன் நின்றான் செங்காளை.”என்ன மவனே, சாயங்காலம் வாற?” தான் மென்றுக்கொண்டிருந்த பொரியை கொஞ்சம் கொடுத்தார் உரக்கடை முத்தரசன். மாயாண்டி மட்டும் எடுத்துக்கொண்டான்.

கொஞ்சம் வாயிலும், கொஞ்சம் சட்டைப்பையிலும் விழுந்தது.”அப்பா சொல்ல சொன்னாரு சித்தப்பா தேரோட்டம் வருதுல, அத முடிச்சிட்டு நாத்து நடணுன். முத்தரசு ட சொல்லிட்டு வந்துருல, முன்னக்கூட்டியே வாங்கி வச்சிருவானல சரக்க னு. “”அது சரிதான் யா. திருவிழா முடிஞ்சதும் எப்படியும் மூணு நாள் ல திக்கு தடுமாற மழ பெய்யும். முடிஞ்சதும் நட்டா அருமை லா. போய்ட்டு வாரும். பாத்துக்குதன்.”தன் நீல சட்டையின் கையை கொஞ்சம் மடித்து விட்டு, வண்டியைக் கிளம்பினான் செங்காளை. “மக்கா மாயா. வா லே, பஸ்ஸ்டாண்ட் வர வந்துட்டோம். அந்த இளங்கோ கடைல கொத்து பரோட்டா தின்போம்.””இருக்குற முப்பது ரூபா உன் கண்ண உறுத்திட்டு. வந்து தொல.”, கிண்டல் கேலி செய்தான் செங்காளை.ண்ணோவ்… ரெண்டு கொத்து பரோட்டா… நல்லா சால்னா ஊத்தி முறுவலா போடுங்க. கல்லில் நிற்கும் அண்ணன் ரெண்டு கொத்து கரண்டியை எடுத்து வாடிப்பட்டி மேளம் வாசித்தார் பரோட்டா முட்டை கலவையில்.பதமாய் இதமாய் வந்த கொத்தில் கொஞ்சம் தயிர் சம்பல் வைத்து நன்றாக தின்னுவிட்டு கை கழுவ வந்தார்கள்.”ஏப்பா, கொத்து பரோட்டாக்கு நீ சாமி. சர்பத் கு நாஞ் சாமி” களுக்கென்ன சிரித்தான் மாயா.பக்கத்திலிருந்த சர்பத் கடையில், ரெண்டு நன்னாரி சர்பத் வாங்கினர்.

“மாயா, மாப்ள அங்கப் பாருல. ” செங்காளை அதிர, திரும்பி பார்த்த மாயாண்டிக்கும் அதிர்ச்சி. பள்ளிக்கூடம் முடிந்த மாணவ கூட்டங்களும், மக்கள் கூட்டமும் நடுவே, மண்டையில் ரத்தம் சொட்ட வந்து விழுந்தார் அந்த நபர்.செங்காளை முன்னேற, அந்த நபரின் முதுகை கூராய் பதம் பார்த்தது பாளை அரிவாள்.செங்காளை கத்தியது அவர்கள் செவிகளை அடையவில்லை. அடைந்தாலும் கேட்கும் நிலையும் இல்லை அவர்களிடம்.’ஏல நிறுத்துங்க. என்ன எழவு ல பண்றிய. ‘ இவன் கத்துவதற்குள், அங்கு அவர் உடலை பதினாலு வெட்டுகள் வெட்டி உயிரற்ற பிணமாய் போட்டு நடந்தார்கள், சிங்காரமும் அவன் சகாக்களும்.தெறித்த ரத்த துளிகள் சில, பக்கத்தில் இருந்த தள்ளுவண்டி பழங்கள் மீதும், சில சாக்கடையிலும் கலந்து ஓடியது.செங்காளையை பார்த்து கொஞ்சமும் சலனமில்லாமல் நடந்தான் சிங்காரம். அவன் சகா பக்கத்து கடையில் வாங்கி வந்த பாலில் முகத்தை கழுவி, மீதி பாலில் அரிவாள்களை கழுவி நடந்தார்கள்.

தான் படைத்த ரத்த வகைகளெல்லாம் இவ்வகையிலும் ஓடும்மென கடவுளரும் நினைத்ததுண்டோ!ரத்தமும் அதன் சிகப்பும் காட்டிய பயத்தை விட, வெறும் பதினைந்து வயது சிங்காரம் செய்த காரியம் தான் அதிர்வுற்றது செங்காளையை.அப்படி பட்ட செங்காளையும் நினைக்கவில்லை போலும், தன்கைகளும் ரத்தக்கறை நிரம்ப, உயிரை குடிக்கும் என்று.     

 – அரன்(நெல்வாடைகள் தொடரும்)

One thought on “களத்துமேடு – அத்தியாயம் 3

  1. அரன் : செங்காளையின் பயம் என்னையும் தொற்றிக்கொண்டது. அடுத்த தலைமுறையின் வன்மம்
    இங்கே பார்க்கமுடிகிறது.
    வாழ்த்துக்கள் நண்பா.
    உலகாளும் உமையாளை தனிக்கூட்டம் தொழுவதா!
    நாட்டில் நெல் வாடை தொடரட்டும் ரத்த வாடை இன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *