அம்மாவின் காதல் – 2

அத்தியாயம் 2

கண்மணி காரை வேகமா ஓட்டிக்கிட்டு இருந்தா. எந்தவித பதட்டமும் இல்ல. கணவன் வீட்டார் கிட்ட இரங்களுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டா! ஆனா வழக்கம் போல அவங்களும் கண்மணியோட கணவருக்கு வக்காளத்தா பேசி ஃபோனை வெச்சிட்டாங்க.

கண்மணிக்கும் அவளோட கணவருக்கும் ஒரே ஊரு தான், முள்ளூர் – கிராமம் ஆனா பெரும்பாலான கிராமம் போல பெரியவங்க மட்டும் தான் அங்க வாழ்றாங்க, இளசுகள் அப்புறம் அவங்கள பெத்தவங்க எல்லாம் நகரத்துல மற்றும் டவுன்ல தங்கியிருக்காங்க. அப்பப்போ ஊருக்கு வந்துட்டு போவாங்க. கண்மணியின் கணவன் செந்தில், அவனோட உடல் முள்ளுருக்கு கொண்டு வந்திருந்தாங்க. ஊர் பெரியவங்க எல்லாம் கூடினாங்க

‘ ஏன் பா கட்டுன பொண்டாட்டி புள்ள வரல னா எப்படி பா ? ‘ என ஒரு பூமர் சொன்னார்.

‘ சொல்லியாச்சுங்க , வர மாட்டேன்னு சொல்றவங்க, என்ன பண்ண முடியும் ?!’ என செந்தில் வீட்டாரில் ஒருவர் சொன்னார்.

‘ அப்புறம் ஊர் பெரியவங்க எதுக்கு ? ஊர் கட்டுப்பாடு எதுக்கு? ‘ மற்றொரு பூமர் சொன்னார்.

‘ ஃபோன் போடுபா நா பேசுறேன் ‘ தலைமை பூமர் சொன்னார்.

‘ அண்ணே வேண்டாம் ணே , அண்ணி ஒரு மாதிரி , மூஞ்சி மேல கேட்டுடுவாங்க உங்களுக்கு எதுக்கு அண்ணே அந்த அவமானம் !’ செந்திலின் தம்பி ராமன் சொன்னான்.

‘ கண்மணிய எனக்கு நல்லா தெரியும் பா நா பாத்துக்கிறேன் . பக்குவமா பேசிக்குறேன்’ தலைமை பூமர் சொல்லி தானாகவே தலையை தண்டவாளத்தில் வைத்தது.

அலைபேசி அழைப்பை கண்மணி இரு முறை நிராகரித்தால் மூன்றாம் முறை பேசினாள்.

‘ யாரு ‘

‘ நா தான் குணா பேசுறேன்’

‘ சொல்லுங்க அண்ணே எப்படி இருக்கீங்க ‘

‘ நல்லா இருக்கேன் , விஷயம் கேள்வி பட்டிருப்ப ‘

‘ என்ன விஷயம்?’

‘ செந்தில் இறந்துட்டான் ‘

‘ ஆமா அதான் வரமுடியாதுன்னு சொல்லிட்டனே’

‘ ஒரு மனுஷன் இறந்த அப்புறம் எதுக்கு மா இவ்ளோ கோவம் ‘

‘ செத்துட்டா எல்லா பாவமும் இல்லனு ஆயிடுமா ? எனக்கு செஞ்ச அநியாயத்துக்கு அவன் எப்பயோ செத்து இருக்கணும்  ‘

‘ செத்தவங்க கடவுளுக்கு சமம் ‘

‘ அந்த நாய நீங்களே கடவுளா கும்முடுங்க எனக்கு அவசியம் இல்ல ‘

‘ என்ன மா மரியாதையா பேசுமா ‘

‘ உனக்கு இது வரைக்கும் குடுத்த மரியாதையே அதிகம் , ஃபோன வை’ கண்மணி ஆக்ரோஷமாக கத்தினாள்.

கண்மணியின் கோவம் கண்ணீராக மாறி பெருக்கெடுத்து ஓடியது. மரணம் என்ன பாவம் கழுவும் புனித நீரா ? மரணித்தால் ஒருவர் செய்த பாவங்கள் கரைந்து விடுமா ? அப்படியானால் செய்வதெல்லாம் செய்துவிட்டு செத்து விடலாமே!

உண்மையில் என்ன என்று யோசித்தால் ஒருவர் இறப்பிற்கு வரும் கூட்டத்தை வைத்து தான் அவரின் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது. ஒருவரின் இறப்பிற்கு வரும் கூட்டத்தை வைத்து எப்படி அவரவர் குணங்களை நிர்ணயிக்க முடிகிறது? இதற்கு பயந்து தானே பல பேர் இன்னும் பிற் போக்கு தனமாகவே இருக்கிறார்கள். இதை வைத்து தானே பல பேர் பலரை கைக்குள் வைத்து அரசியல் செய்கிறார்கள். இறந்த பின் நீ யார் ? உன்னை எத்தனை பேர் பார்க்க வந்தார்கள் என்று நீ பார்க்க முடியுமா ? பிறகு ஏன் இந்த மாய உலகத்தில் பொய்யான வாழ்க்கை.

இப்படி எல்லாம் யோசித்து கொண்டிருந்த கண்மணி. தன் மகள் அனிதாவை கைபேசியில் அழைத்தாள்.

‘ சொல்லு மா ‘

‘ நா செத்துட்டா நீ தனியா என்ன பண்றதுன்னு பயப்படாதே, எலக்ட்ரிக் சுடுகாடு நம்பர் அமரர் ஊர்தி நம்பர் எல்லாம் கூகிள் ல கிடைக்கும், சரியா?’

‘ மா ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்க ‘

‘ ஒன்னு இல்ல, சொல்லணும் னு தோணுச்சு ‘

‘ சரி பார்த்து போயிட்டு வா மா , இன்னைக்கு ஃபோர்ட் மீட்டிங் நல்லா பண்ணுங்க ?’

டமார்!!! ஏதோ வண்டி இடித்தது போல பலத்த சத்தத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டானது.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *