தாய் கிழவி

எழுத்து: சபரி

குளத்தூர் பஸ் ஸ்டாப்ல இருந்து பஸ் கெளம்புற நேரமாச்சு, ஒரு வாலிப பையன் ஒரு பாட்டிய கூட்டிட்டு அரக்க பறக்க பஸ்ல ஏத்திவிட்டான். ‘பாட்டி… பஸ்ல ஏறிக்கோ நா வெளி வேலையா போறேன், மலைப்பட்டி பஸ் ஸ்டாப்க்கு வந்து உன்ன கூட்டிட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் புறப்பட்டான்.

காசியப்பன் ஒரு பஞ்சாயத்துக்கு போயிருந்தார், பொதுவா சுத்தி இருக்குற ஊருங்கள்ல பிரச்சனைகள் வந்தா நாலு பெரிய ஆட்கள் கிட்ட தான் பஞ்சாயத்துக்கு போவாங்க அதுல காசியப்பனும் ஒருத்தர். அம்பது ஏக்கர்ல தென்னந்தோப்பு வெச்சி பாத்துக்குறார். காசியப்பன் வந்த பஞ்சாயத்து பெத்தவள பாத்துக்குற பஞ்சாயத்து. அண்ணனுக்கும் தம்பிக்கும் யார் அம்மாவ  பாத்துக்குறதுனு, பஞ்சாயத்து ரெண்டு மணி நேரம் தொடர்ந்தது. யாரும் பெத்தவள பாத்துக்க தயாரா இல்ல. காசியப்பனுக்கு கோவம் தலைக்கு மேல ஏறிடுச்சு ‘நீங்க பாத்துக்கலனா போங்க, நா பாத்துக்குறேன்னு’ அவரோட ஸ்ப்லெண்டர் வண்டியில பாட்டிய கூட்டிட்டு வந்துட்டாரு. ஆறு மாசம் கழிச்சி இப்போ தான் பாட்டியோட சின்ன பையன் பாத்துக்குறேன்னு  சொன்னான், அதனால பாட்டிய சின்ன பையன் வீட்ல விட்டுட்டு வரச்சொல்லி காசியப்பன் அவரோட பையன் கூட பாட்டிய அனுப்பிவெச்சார். காசியப்பனோட பையனுக்கு இன்னொரு முக்கிய வேலை இருந்ததால பாட்டிய பஸ்ல ஏத்திவிட்டுட்டாரு.

பஸ்ல ஸ்கூல் விட்டு நிறைய பசங்க ஏறிட்டாங்க. ரெண்டு பசங்க எப்பயுமே இன்ஜின் மேல உக்காருவாங்க, வழக்கமா பாக்குறதால அந்த பசங்க மேல டிரைவர்க்கு ஒரு பாசம். ஆனா அவங்க கிட்ட மட்டும் தான் கரிசனம் மத்தவங்க மேல எறிஞ்சி எறிஞ்சி விழுவாரு. கண்டக்டர் ஊருக்கு புதுசு, கொஞ்ச நாள் தான் ஆகுது , வேலைக்கு சேந்தும் கொஞ்ச நாள் தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்த கண்டக்டரும் டிரைவரும் ரொம்ப நெருக்கம் அதனாலேயே புது கண்டக்டர் கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டே இருந்தார். அதே பஸ்ல வழக்கமா வர ஒரு வாத்தியார் எப்பவும் மூஞ்ச சிடு சிடுன்னு வெச்சிக்கிட்டு இருப்பாரு அதனால அவரைப் பார்க்கவே முரட்டுத் தனமா இருக்கும். குளத்தூர் இஸ்லாமியர்கள் நிறைய இருக்குற ஊரு அதனால பஸ்ல பாதிப்பங்கு இஸ்லாமியர்கள் தான் இருப்பாங்க, அதனால பல பெண்கள் புர்கா அணிந்திருந்தாங்க. என்ன தான் சாய்ங்கால நேரமா இருந்தாலும் பஸ்ல நிறைய கூட்டமுங்கறதால ஒரே புழுக்கம், பஸ்ல இருக்குறவங்களோட மனநிலை ரொம்ப வெறுப்புமிகுந்ததா இருந்தது. தெரியாம யாரு காலோ கையோ பட்டாக்கூட உடனே சண்டை தான். படில வாலிப பசங்க தொங்கி தொங்கி பஸ்சே ஒரு பக்கமா சாஞ்சிதான் இருக்கும். பின்னாடி வர வண்டியும் சரியா தெரியாது அதனாலேயே டிரைவர் ரொம்ப கோவப்படுவார். பஸ்ல இந்த கவலை எதுவும் இல்லாம இருக்குறவங்க அந்த இன்ஜின் மேல உக்காந்துகிட்டு இருக்க ரெண்டு பசங்க அப்புறம் ஜன்னல் சீட்ல உக்காந்து காத்து வாங்கிட்டு வரவங்க. அப்படி ஒரு ஜன்னல் ஓரத்துல தான் அந்த பாட்டி உக்காந்துகிட்டு இருக்காங்க, ஆனா அவங்க முகத்துல ஏதோ கலக்கம்.

புது கண்டக்டர் அடுத்த ஸ்டாப்புல நிறைய பேர் இறங்குவாங்கனு பஸ்ச ஓரங்கட்ட சொன்னார், ஏற்கனவே வெறுப்புல இருக்க பயணிகள் இன்னும் வெறுப்பானங்க. முகத்துல வியர்வை சொட்ட சில பேர் ரெண்டு சீட்டுக்கு நடுவுல நின்னுக்கிட்டுயிருந்தாங்க. டிக்கெட் கொடுக்க நேரமாய்க்கிட்டு இருந்தது.

அங்க மலைப்பட்டி பஸ் ஸ்டாப்ல காசியப்பனோட பையன் பதட்டத்துல இருந்தான் இந்நேரம் பஸ் வந்திருக்கணுமே. பாட்டி எங்கயாவது இறங்கிட்டாங்களா, அப்பாக்கு அவங்கள பஸ்ல விட்டுட்டு வந்தது தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாருன்னு பதட்டம் அதிகமாச்சு பஸ் போச்சா இல்லையானு கூட தெரியல.
அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம விழிச்சிகிட்டு இருந்தான் காசியப்பனோட பையன்.

இங்க பஸ்சுல பாட்டி ஏதோ புலம்ப ஆரம்பிச்சாங்க, நேரமாகுறதால எல்லாரும் கடுகடுன்னு இருந்தாங்க. பஸ்ல சத்தம் அடங்கிடுச்சி பாட்டி புலம்பல் மட்டும் எல்லாருக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது.

‘இப்படி நடுரோடுல விட்டுட்டு போயிட்டானே நா என்ன பண்ணுவேன், இந்த பஸ்சு வேற நகராம இருக்கே, என்ன பண்றதுன்னு தெரியலையே’

‘அட ஏன் பாட்டி புலம்புற இப்போ எடுத்துடுவாங்க’

‘அட போப்பா, கைல பத்தாயிரம் வெச்சிக்கிட்டு பயத்துல உக்காந்திருக்கேன், யாரவது திருடிட்டாங்கன்னா? என்ன பண்ணுவேன்!’ பாட்டி தன்னை அறியாமல் உண்மையை உரக்க சொல்லிவிட்டார்.

பஸ்ல இருந்த இளவட்டங்கள் பாட்டி வெல்லந்தியா சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பிச்சாங்க, கொஞ்சம் கொஞ்சமா சிரிப்பு பஸ் முழுக்க பரவுச்சி, சிடு சிடுன்னு இருக்க டிரைவரும் வாத்தியாரும் கூட பலமா சிரிக்க ஆரம்பிச்சாங்க. அந்த வாத்தியார் சிரிக்குறத பாக்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் எல்லாருக்கும் மேலும் சிரிப்பு வந்தது. தொடர்ந்து பத்து நிமிஷமாவது சிரிச்சிகிட்டு இருந்திருப்பாங்க எல்லாரும், பாட்டிக்கு ஒன்னும் புரியல, புலம்பலும் சிரிப்பும் தொடர்ந்தது.

***முற்றும்***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *