எழுத்து : சபரி
திடீர் என திகைத்து எழுந்த கேசவன் மீண்டும் தூங்க முற்பட்டான். அருகிலிருந்த அவன் மனைவி ஜெயா
‘என்ன டா ஆச்சு’
‘ஒன்னும் இல்ல’
இதுபோன்ற திடீர் விழிப்புகள் அதிகமாகிப் போச்சு அதனால ஜெயாவின் தூக்கம் கெட ஆரம்பமாச்சு. அடுத்த நாள் இத டீல் பண்ணியே ஆகனும்னு மனசுல நினைச்சிக்கிட்டா.
சில சமயம் நாம போடனும்னு நினைச்ச சண்டைய போடாம விட்டுடுவோம் பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் இது ரொம்ப சகஜம். ஆனால் இருட்டில் அடைக்கப்பட்ட அந்த சண்டை வேறு எதோ சண்டையின் மூலம் வெளிச்சம் பெறும்.
மறுநாள் கேசவன் கிட்ட போட வேண்டிய சண்டையை மறந்து தான் அந்த நாளை ஆரம்பிச்சா ஜெயா. கேசவனை எழுப்பினா அவன் முகத்தில் ஒரு சலனமும் இல்லை லேசா ஒரு முறை கண்ணை திறந்து பார்த்துட்டு மீண்டும் தூங்கப் போனான் ‘ராத்திரி முழுக்க எதாவது யோசனைல இருக்க வேண்டியது அப்புறம் காலைல எழுந்திரிக்க முடியாம கெடக்க வேண்டியது’ என்று கடிந்து கொண்டாள் ஜெயா.
‘எதுக்கு காலைலயே கத்துற என்று ‘ சிடு சிடு வென்று எழுந்தான் கேசவன்.
காலைல சாப்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கேசவனோடது, இன்னைக்கு மஷ்ரூம் சாண்ட்விச் செய்யலாம் என்று சில சமையல் பொருட்களைத் தேடினான் கையில் அகப்படவில்லை உடனே ஏதோ சலிப்போடு ஜெயாவை திட்டினான்.
‘ஒரு இடத்துலே பொருள வைக்க மாட்டல்ல?’
‘நீ ஏன்டா இப்போ கத்துற’
‘நா கத்துறனா, நீ தான் என்னை கத்த வைக்கிற’ கேசவன் மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போனான். இதுவரை மனதில் இடையூறு இல்லாமல் எங்கோ மூலையில் தூங்கிக்கொண்டிருந்த பழைய சிறு மனஸ்தாபங்களை அள்ளி வெளியே தெளித்தான். ஜெயாவும் அதன் பிறகு அவள் பங்கிற்கு அவளுடைய பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
பொதுவாக சண்டை நிற்க எவரேனும் ஒருவர் அமைதியாகவே அல்லது அங்கிருந்து சென்றுவிடலாம் ஆனால் நகர வாழ்க்கையில் ஒரு டீவி ரிமோட் அல்லது மூக்குக்கண்ணாடி வேகமாக பறந்து தரையில் விழ்ந்துடைய வேண்டும். கொஞ்சம் வசதி உள்ளவராக இருந்தால் செல்ஃபோன் உடையும். டீவி ரிமோட்டின் மூலம் சண்டை கேசவனுக்கும் ஜெயாவுக்கும் இடையே முற்றுப் பெற்றது. இருந்தாலும் தன் தூக்கம் கலைவதை பற்றி பேசவில்லை என்று ஜெயாவிற்கு அப்பொழுது தான் தோன்றியது, இப்பொழுது இதை கேட்க வேண்டாம் என்று மனதுக்குள் மீண்டும் இருட்டறையில் அடைத்தாள்.
கேசவன் சிறு வயதில் அப்பாவை இழந்தவன் இரு தங்கைகள் உண்டு , குடும்ப பொறுப்பை தலையில் சுமக்க சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டான்.
பல வருடங்களாகி விட்டது, பொறுப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. இது போக சமீபமாக அவன் நிறைய உறவுகளையும் நண்பர்களையும் இழந்தான். திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் அம்மா சரியாக பேசுவதில்லை. மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறான்.
கேசவன் சிறிது நேரம் கழித்து படுக்கை அறையில் இருக்கும் ஜெயாவை சமாதானம் செய்ய சென்றான்.
‘ வேணாம் மறுபடியும் சண்டை போட விருப்பமில்ல’
‘ இல்லை நா சொல்றத கேளேன்’
கேசவன் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது.
‘ சின்ன வயசுல இருந்தே வீட்டுக்காக எதாவது யோசிச்சு யோசிச்சு என்னால என்னோட மூலைக்கு ரிலாக்சேஷன் தரமுடியல இது போக தங்கச்சிங்க கல்யாணத்துக்கு வாங்குன லோன் இருக்கு புதுசாக் கட்ற வீட்டுக்கு வெளியே கடன். திடீர்னு உனக்கு ஏதாவது செலவுனா நா என்ன பண்றதுன்னு தெரியல, அதனால உனக்கு எதுவும் ஆகக்கூடாது. நாம தனியா இருக்கோம் ஒரு வேளை எனக்கு அவசரம்னா நீ தனியா எப்படி ஹான்டில் பணுவன்னு தெரியல ஃபினான்சியலா மெண்டலா. அது மட்டும் இல்லாம அம்மா சரியா பேசுறதில்ல, அதனால யார் ஃபோன் பண்ணாலும் அம்மாக்கு எமர்ஜென்சியோன்னு நினைச்சு நினைச்சு ஃபோன் வந்தாலே பயமா இருக்கு’
சொல்லி முடிக்கும் போது கீழ் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது , கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது.
‘இந்த பயமெல்லாம் சேந்து என்னால சரியா கூட பேச முடியல’ கேசவன் சொல்லி முடித்தான்.
‘எனக்கு உன்னோட பிரச்சினை புரியுது ஆனா இதனால நீ மட்டும் தான் பாதிக்கபடுறியா ?’ ஜெயா மேலும் தொடர்ந்தாள்.
‘உனக்கு இப்போவே பிரஷர் இருக்கு. எனக்கு கவலை இல்லையா இத நினைச்சு. உன்னை பத்தி நினைச்சு உனக்கு ஏத்த சாப்பாடு செய்யனும்னு தினமும் யோசிச்சு நா மெண்டலாக போறேன். கடனுக்கு நாம பிளான் பன்றோம். நீ பயந்த மட்டும் என்ன நடக்க போகுது. அத்தை உன் மேல இருக்குற கோபத்தால் என்கிட்ட கூட பேசுறதில்ல. இப்போ நீ செல்ற மாதிரி தினந்தினம் பயப்படுறதால என்ன ஆக போகுது உனக்கு பிரஷர் அதிகமாகுறது தவிர. நீ அத பத்தி யோசிச்சிகிட்டே இருந்தாலும் நடக்காம இருக்க போகுதா. ஏன் உங்க அப்பா இறந்தப்போ அத்தை தனியா உங்கள காப்பாத்துல. இது ஆணோட கடமைன்னு மட்டும் சொல்லிடாத. குடும்பத்த பாத்துக்கிறது ஆணோட பொறுப்பு மட்டும் தான்னு நினைக்குறது எவளோ பழமை வாதம் சொல்லு.குடும்பத்துல எதுவேனா நடக்கலாம், அது எல்லாத்துக்கு ஆண் தான் பொறுப்பு இல்ல ஆண் தான் தீர்வுன்னு நினைக்காத. அது உன்ன மட்டுமில்ல என்னையும் பாதிக்கும்’ ஜெயா சொல்லி முடித்தாள்.
கேசவனை தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினாள். நாளையாவது இரவில் திடீர் திடீரென்று எழுவதை பற்றி பேச வேண்டும் ஆனால் அதும் கேசவனுக்கு பிரஷராகி விடுமேன்னு நினைச்சா.
ஆண்மை கோட்பாடு என்ற நச்சை, தான் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் மனைவிகளுக்கும் கொடுக்கிறார்கள்.
*** முற்று ***
Nice story…
Thank you Mahesh!