எழுத்து : சபரி
ஆயிரத்தி தொண்ணூறுகளின் இறுதியில நூற்றாண்டு மாறது போல பல தொழில்நுட்ப வளர்ச்சிகளும் வந்துச்சு. ஒரு கிராமத்துல முதல் முறையாய் நடக்குற எல்லா விஷயத்துக்கும் மிக பெரிய ஒரு வரவேற்பும் ஆச்சர்யமும் இருக்கும். எங்க கிராமத்துல நாங்க சின்ன பிள்ளையா இருந்தப்போ ஒத்திசை (அனலாக்) ஆன்டெனால டிவி பாப்போம்.
‘கண்ணு ஜமக்காளத்தார் முடக்கு வரைவும் போவியா ?’ அம்மா கேட்டாங்க.
‘என்ன மா விஷயம்?’
‘ட்ராக்ட்டர்க்கு எண்ணெய் வாங்கிட்டு வர-ணு’
‘இல்ல மா சாயங்காலமா போறேன்’
அன்னைக்கு சாயங்காலம் எங்க ஊருக்கே பெரிய விஷயம் நடக்கபோறது தெரியாமத்தான் எண்ணெய் வாங்க போனேன். மனோ மாமா போற வழியில இருக்க டீ கடைல பேசிக்கிட்டு இருந்தார். பைக்ல போயிட்டு இருக்கப்போவே ‘மாமா !’ கையை காமிச்சேன். மனோ மாமாவும் கை காமிச்சார். மாமா கூட நாலு பேறு நின்னுகிட்டு இருந்தாங்க, என்ன விஷயமா இருக்கும் ஆர்வம் தலைகேறிடுச்சி. சீக்கரமா போயி கேன்-ல எண்ணெய் வாங்கிட்டு திரும்பி வரலாம்னு நெனச்சா, எங்க! திரும்பி வரதுக்குள்ள டீ கடைல மாமா இல்ல சரி வீட்டுக்கு போயி கேட்டுக்கலாம்னும் கிளம்பிட்டேன்.
மனோ மாமா நல்ல வசதியான ஆளு – காடு பெரிய வீடுன்னு, ஊர்ல எதாவது புதுசா முயற்சி செய்யணும்னா மனோ மாமா தான் செய்யணும். அவரும் செய்யக்கூடியவர் தான். ஊர்ல கேமரா, புல்லட்டு அப்பறம் ஜீப்புன்னு பந்தாவான ஆளு.
ராத்திரி ரொம்ப நேரமா மாமா வீட்டுக்கு வரல. என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருந்தது. எங்க வீட்ல இருந்து ஒரு காடு தள்ளி மாமாவோட வீடு. மாமா வீட்டையே பாத்துகிட்டு இருந்தேன். மாமா வந்தாரு ஓடி போனேன் கிட்ட போயி எதார்த்தமா வந்தமாதிரி ஒரு நாடகத்தை போட்டுட்டு, மாமா கிட்ட சாயங்காலம் பேசிகிட்டு இருந்தவங்கள பத்தி கேட்டேன்.
‘அவங்க டிஷ் டிவி போட்றவங்க கண்ணு, நாளைக்கு வராங்க’
‘டிஷ் டிவி யா?’
‘ஆமா, பெரிய சாட்டிலைட் ஆன்டெனா வைப்பாங்க கண்ணு’
‘அப்படியா மாமா! எப்படி எடுத்துட்டு வருவாங்க!’
‘லோடு வண்டியில தான்’
அடுத்த நாளைக்கு காத்திருந்து தூக்கம் போச்சு, மாமா ஒரு மணி நேரம் அதபத்தி சொல்லியும் சரியா புரிஞ்சிக்க முடியல எப்படியாவது அத நாளைக்கு பாத்துடனும். அடுத்த நாள் காலை ஒரு பத்து மணி இருக்கும். சாப்பிட்டு மாமா வீட்டுக்கு போலாம்னு வெளிய வந்தா ஒரே கூட்டம். யாராவது வீட்டு விசேஷம்னா ஊர்ல ஆம்பளைங்க எல்லாரும் வெள்ள வெட்டி சட்டை போட்டுக்கிட்டு ஆஜர் ஆயிடுவாங்க. அன்னைக்கு அப்படி தான் கூட்டம் எல்லாரும் வெள்ள வெட்டி சட்டை போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க.
ஆவலா காத்திருந்த அந்த வண்டி வந்துச்சு, பல தகடுகள் இறக்குனாங்க. அந்த தகடுகளுக்கு பூஜை பண்ணி எல்லாரும் சாமி குமுட்டு வேலையை ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு நாள் பூரா எல்லாரும் அங்கதான் இருந்தாங்க. சாயங்காலம் ஆயிடுச்சி டிவி-ல சாட்டிலைட் சேனல் பாத்ததும் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம், அவங்களையே மீறி ஒருத்தரை ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டு இருந்தாங்க.
கிராமப்புறங்களில ஒத்திசை மூலம் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் செயற்கைகோள் ஒளிபரப்பின் மூலம் பார்க்க ஆரம்பமாச்சு. ஒரு பெரிய கம்பெனிகாரங்க ப்ரோஜெக்டா எடுத்து ஊர்பூராவும் பெரிய பரவளைய ஆண்டெனா எல்லார் வீட்டுக்கும் வெச்சாங்க.
ஆன்டெனா செட் பண்ண வரவங்களுக்கு தங்க ஹோட்டல் வசதியெல்லாம் இல்லை அதனால அவங்க எந்த வீட்டுக்கு டிஷ் செட் பண்ண போறாங்களோ அங்கதான் அன்னைக்கு சாப்பாடு அப்புறம் தூக்கம்.
இப்படி கதையசொல்லிக்கிட்டு இருக்கப்போவே எங்களோட துணிய அந்த ஆன்டெனால காயவெச்சிகிட்டு இருந்தா என்னோட மனைவி.
***முற்றும் ***