எழுத்து : சபரி
‘உங்களுக்கு விசா அப்ரூவ் ஆயிடுச்சா?’ மேனேஜர் கேட்டார்.
‘ஆயிடுச்சி!’ விஷால் சொன்னான்.
‘இன்னும் டூ ஆர் த்ரீ வீக்ஸ்ல ட்ராவல் பண்ண வேண்டியது இருக்கும்’ மேனேஜர் சொல்ல விஷால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எத்தனை வருடங்கள் உழைப்பு. விஷால் வீட்டிற்கு அலைபேசியில் நல்ல விஷயத்தை சொன்னான்.
பெரிதாக படிப்பேதும் இல்லை. சரியாக வழிநடத்த ஆளில்லை, இருந்திருந்தாலும் அவர்கள் சொன்ன வழி விஷால் நடப்பானா என்பது சந்தேகம் தான். படிப்பை பனிரெண்டாவதுதோடு நிறுத்திவிட்டான். ஆனால் தானே ஒரு வேலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. சில வருடங்கள் பக்கத்து அக்கத்து வீட்டார் மற்றும் ஊரில் இருக்கும் பெரியவர்கள் படி படி என்று சொல்லாத நாள் இல்லை. அவர்கள் வாழ்க்கையில் ஏதோ அமைந்துவிட்டது என்பதற்காக அவர்கள் மற்றவர்களை இழிவாக பார்ப்பதாகயும் அறிவுரை என்ற பேரில் நேரத்தை வீணாக்குவதாக விஷாலுக்கு தோன்றியது ஆச்சர்யமில்லை அப்படியும் சில பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்.
மற்றவர்களின் அறிவுரையினாலே பள்ளி கல்விமேல் வெறுப்பு ஏற்பட்டது, படிக்கவில்லை என்பதனால் அறிவில்லாதவன் என்று அர்த்தமில்லை ஊரிலேயே நல்ல சுறுசுறுப்பான இளவட்டம் புதுசா எந்த டெக்னாலஜி வந்தாலும் உடனே கற்றுக்கொள்வான். கேபிள்டிவியில் இருந்து டிஷ் டிவிக்கு மாறிய காலம், ஊரில் பல பேருக்கு என்ன செய்யுறதுன்னு புரியல ஆனா விஷால் மட்டும் எப்படியோ கத்துக்கிட்டான் அதுக்கப்புறம் என்ன? எல்லாரும் விஷால்-கிட்டதான். ஊர்ல யார் வீட்ல டிஷ்-டிவினாலும் விஷால் இல்லனா செட்டப் பண்ண முடியாது. என்னதான் விஷால் துறுதுறு ஊருக்குள்ள சுத்துற பயனாலும் இந்த டிஷ் டிவி விஷயம் ஏதோ பொறுப்பு அவனுக்குள்ள வந்தது, விஷாலவே முயற்சி பண்ணி கம்ப்யூட்டர் டிகிரி முடிச்சான் அப்புறம் சில வருடங்கள் வேலை அப்படியே போயிடுச்சி, இப்போ யுகே போற அளவுக்கு வளந்து நிக்குறான்.
அன்னைக்கு நைட் ஷிப்ட், தோசை சுட கிச்சன் போனான் மாவு இல்லை அதே சமயம் அவனோட காதலி ஃபோன் செய்தாள். காதலிக்கும் விஷால் வெளிநாடு போறது ரொம்ப சந்தோஷம் அவளோட வீட்ல வெளிநாட்டு மாப்பிள்ளைனா எப்படியும் சம்மதிச்சிடுவாங்கன்னு ஒரு நப்பாசை.
‘கடைக்கு போய்ட்டு வரேன், வந்து கால் பண்றேன்’ விஷால் சொன்னான்.
‘நடந்தா போற?’ காதலி கேட்டாள்.
‘ இல்ல மொனைல இருக்க பாட்டி கடை மூடியிருப்பாங்க அதனால பைக்ல கொஞ்சம் பஜார் வரைக்கும் போகணும்’ விஷால் சொன்னான்.
‘ஹே ஹெல்மெட் போட்டுட்டு போடா!’ காதலி சொன்னாள்.
‘பக்கத்துல தான் போறேன்’ விஷால் சொன்னான். ‘அப்புறம் உன்னோட இஷ்டம்’ காதலி சொல்லி இணைப்பை துண்டித்தாள்.
வண்டியை எடுத்த பின் கொஞ்சம் யோசித்தான் பிறகு ஹெல்மெட் போட்டுக்கொண்டு கடைக்குச் சென்றான்.
திரும்பி வரும் வழியில் ஒரு லாரி கட்டுப்பாட்டை மீறி வந்து கொண்டிருந்தது. விஷாலால் எதுவும் செய்ய முடியவில்லை லாரி மிக சமீபத்தில் இருந்தது. லாரி மோதி வண்டியும் விஷாலும் வீசியடிக்க ஒரு கம்பத்தில் இடித்து விழுந்தான். ஹெல்மெட் போட்டிருந்ததால் சில காயங்களுடன் தப்பித்தான். இப்படியாக இந்த கதை முடிய வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விஷால் அன்று ஹெல்மெட் போடாமல் சென்றான். லாரி மோதி கம்பத்தில் இடித்து தலையில் பலத்த காயம், மண்டையோடு உடைந்து உயிருக்கு போராடும் நிலையில் ஹொஸ்பிடலில் சேர்த்தார்கள், சில மாதங்கள் ஆனது நினைவு வர. மூன்று வருடங்கள் கழித்து இன்றளவிலும் முழுதாக சரியாகவில்லை படுக்கையிலேயே காலம் கழிகிறது.
*** முற்றும் ***