புரிந்தவர்களுக்கு மட்டும் – பகுதி 1

எழுத்து : சபரி

பல வாரங்கள் கழித்து அமுதாவ பாக்கப் போனான் வடிவேலு. வடிவேலும் அமுதாவும் ரொம்ப நல்ல நண்பர்கள், சில நாட்கள் வேலை விஷயங்களால அடிக்கடி பாத்துக்க முடியல அதனால தினமும் மொபைல பேசிக்குவாங்க. என்னதான் மொபைல பேசினாலும் நேர்ல பாக்குற மாதிரி வருமா. பல நாள் கழித்து பார்த்தாலும் அந்த முதல் பார்வை பார்த்ததும் வர சிரிப்பு இருக்கே விலையில்லா மகிழ்ச்சி. நண்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு அனுபவம்.

அமுதாவும் வடிவேலுவும் பகிர்ந்துக்காத விஷயமும் இல்லை கதைகளும் இல்லை. அன்றாடம் நடக்கும் விஷயங்கள் சந்திப்புகள் பற்றி கேலியும் கிண்டலும பேசிக்குறது உண்டு. என்னதான் நண்பர்கள இருந்தாலும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட ரகசியம் இல்லாமல் போகுமா? அப்படியொரு உண்மை தான் வடிவேலு மனதில் நாள்தோறும் வளரும் புற்றுநோயாய் நிம்மதியை செல்லரித்துக் கொண்டிருந்தது. குற்றத்தை நெஞ்சில் சுமக்கும் எடை மிக மிக அதிகம்; ஆளை உருக்கும் பெரும் சுமை. முதுகெலும்பை வெளியே நீட்டி உடலை மேலெழுப்பி சோம்பலை முறித்துத் தள்ளும் பூனை போல் உதாசின படுத்த ஒரு உண்மை மனிதனால் ஆகுமா ?

அன்று மதியம் நன்றாக சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க சென்றனர். படம் முடிந்து மாலை வேலை வழக்கமான பானி பூரி கடையில் பைக்கை நிறுத்தினான். அமுதாவின் மசாலா பட்டாணி கொண்ட தட்டு பாதி முடிந்திருந்தது, வடிவேலு தான் கேட்டிருந்த காளான் கையில் ஏந்தி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அமுதா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் ஆனால் எதுவும் காதில் விழவில்லை, தலையை மட்டும் அசைத்தான். சிறிது நேரம் கழிந்தது, லேசான மாலை காற்று ஏதோ அவனை செய்துவிட்டது.

‘அமுதா, அணைக்கு உன்கிட்ட யாரோ பஸ்ல தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்கன்னு சொன்னல்ல?’

‘ஆமா மச்சி, அதை ஏன் இப்போ நியாபகப்படுத்துற, நானே இப்போ தான் அதை மறந்தேன்’ அமுதா சொல்லிவிட்டு முகம் வாடினாள். இப்பொழுது வடிவேலுக்கு சொல்வதா இல்லையா என்று புரியவில்லை. அமுதா அதை உணர்ந்தாள், மிளகாய் நுனியில் காரம் போல் மூக்கின் நுனியில் உணர்வு. ‘சொல்லு மச்சி ஒன்னும் பிரச்சனை இல்லை?’

‘இல்ல அமுதா சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு’

‘நமக்குள்ள என்னடா ?’

‘இத சொன்ன அப்புறம் என்ன கேவலமானவன்னு நினைச்சிட்டேன்னா?’

‘அட இப்போ சொல்ல போறத வெச்சி தான் நீ கேவலமானவன்னு முடிவு பண்ணனுமா’ அமுதா வாய் விட்டு சிரித்தாள். வடிவேலு இருக்கும் நிலைமையில் அவள் ஜோக்கை ரசிக்கவும் முடியவில்லை ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

‘சொல்லு மச்சி’ அமுதா சொல்லிக்கொண்டே தோலில் கை போட்டாள்.

‘இல்ல பசங்க பர்சனல ஒரு விஷயம் பண்ணுவோம்’ வடிவேலு சொல்லிவிட்டு திகைத்து நின்றான்.

‘நிறைய பண்ணுவாங்க நீ எத சொல்ற’ அமுதா கேட்க, பதில் சொல்லமுடியாமல் திணறினான் வடிவேலு.

‘இல்ல பசங்களுக்குன்னு ஒரு ஃபாண்டஸி வேர்ல்ட் இருக்கு, அல்ப சந்தோஷத்துக்காக அத பயன்படுத்திக்குவாங்க’ வடிவேலு சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

‘அதுல உன்ன சில நாட்கள் கற்பனை செஞ்சி இருக்கேன், ரொம்ப முன்னால…’ என்று சொல்லும் பொழுதே குரல் குழைய ஆரம்பித்தது கை நடுங்க ஆரம்பித்தது கண்கள் கலங்க ஆரம்பித்தது.

‘நாம கிளோஸ் ஆனதும் எனக்கு ரொம்ப கில்ட்டி ஆஹ் இருந்தது அப்போ ல இருந்து நிறுத்திட்டேன்’ வடிவேலு கண்களில் நீருடன் தொடர்ந்தான்.

‘ஆனா அன்னைக்கு பஸ் இன்சிடென்ட் சொன்னதும் அந்த பொறுக்கிக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லன்னு தோணுச்சு, ஐ டோன்ட் டிசெர்வ் டு பி யுவர் ஃபிரின்ட் ‘ சொல்லிவிட்டு சுற்றி ஆள் இருப்பதை கூட உணராமல் கேவி கேவி அழ ஆரம்பித்தான்.

‘இப்போவும் அந்த மாதிரி நினைக்குரிய?’ அமுதா கேட்டாள்.

இல்லை என்று தலையை ஆட்டினான்.

‘இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல பட் உண்மையா சொன்னதுனல ஒகே. இப்போ தான் நீ தப்பா நினைக்குறது இல்ல ல கவலை படாதே, ஆனா இத ஈஸியா எடுத்துக்க முடியல. நிறைய தோணுது ஏன் இப்படி பண்ண எதுக்கு இப்போ சொல்ற. பாக்குற எல்ல பொண்ணுக்கும் பண்ணுவியா இல்ல நான் ஏதாவது அந்த மாதிரி உன்கிட்ட நடந்துக்கிட்டேனா’ அமுதா குழப்பமானாள்.

‘நிச்சயமா நீ அந்த மாதிரி நடந்துக்குல, நா தான் தப்பு பண்ணிட்டேன்.’ அழுகை குறைந்த பாடில்லை.

‘சரி சொல்லியாச்சுல வண்டி எடு போலாம்’ அமுதா சொன்னாள். வண்டியும் நகர்ந்தது அமுதா எப்போதும் போல அவன் தோலில் சாய்ந்து கொண்டு போனாள். வடிவேலு கண்களில் நீரும் குறையவில்லை மனதில் குற்றவுணர்ச்சியும் குறைவில்லை.

ஏனோ இறைவன் முன் மண்டியிட்டு பாவம் தீர்த்துக்கொள்ள நினைக்கும் அடியேனாய் அவள் முன் அவன் கூறினான், அவளை கடவுளாய் நினைத்து.

****முற்றும்****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *