எழுத்து : சபரி
மாலை முதுவெயில், மரங்களுக்கும், திருத்தணி மலை சுற்றி உள்ள குன்றுகளுக்கும் பின்னால் மறையும் நேரம். இளம்வயதினர் ஒரு புறம், பெண்கள் ஒரு புறம், சிறுவர்கள் ஒரு புறம் என சாணம் மொழுகிய அந்த மண் தரையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்தும் ஒருகலித்து படுத்தும் , சிரித்தவாறு உடலை அசைத்தும், நீண்ட நாள் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.
வருடம் முழுதும் திசைகள் எட்டிலும் துருவங்கள் பதினாறிலும் சூரிய வெளிச்சம் புகும் இடமெல்லாம் வருமானம் தேடி ஓடும் மக்கள் பொங்கலின் போது ஜாத்திரைக்கு (திருவிழா) கூடுவது வருடாந்திர வழக்கம்.
ஆந்திரா மாநிலத்திற்கும் தமிழக மாநிலத்திற்கும் எல்லையில் இருக்கும் ஊர்களில் பெரும்பாலும் தெலுங்கு பேசும் மக்கள் இருக்கின்றனர். தமிழும் தெலுங்கும் கலந்த ஒரு சொல்லாடலே இருக்கும். சோளிங்கர் அருகில் இருக்கும் பனாவரம் காட்டு பகுதிக்கு அருகில் ஒரு குன்றின் கீழ் இருக்கும் சிறிய ஊர் காட்டுப்பாக்கம்.
மூன்று நாள் திருவிழா பொங்கல் அன்று தொடங்கும், முதல் நாள் கோட்டாளம்மன் கோவில் வழிபாடு, இரண்டாம் நாள் கிடாய்யுடன் இறந்த முன்னோர்கள் வழிபாடு மற்றும் மாடுகளுக்கு வணக்கம் செலுத்துவது, அன்று இரவு தான் முக்கியமான நிகழ்வு. ஆடல் பாடல் நிகழ்ச்சி, பக்திப்பாடலில் ஆரம்பித்து, அதை தொடர்ந்து காதல் பாடல் அதை தொடர்ந்து கவர்ச்சி பாடல்கள் என நேரம் ஆக ஆக கிளர்ச்சி அதிகமாகும். பெரியவர் சிறியவர் என பாகுபாடின்றி அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். குறிப்பாக இளவட்டத்தின் ஆர்வம் அளவில்லாதது. ஆட்டத்தை பார்க்க முன்னதாகவே இடம் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் அருகில் பார்க்கும் பாக்கியம் இல்லாமல் போகும்.
மூன்றாம் நாள், காது குத்து நிகழ்ச்சிகள், அசைவத்திற்கு பஞ்சம் இல்லா நாள் அனைவரும் ஊர் திரும்பும் நாள். இரண்டு மணி பேருந்திலும் , நான்கு மணி பேருந்திலும் அலைமோதி கொண்டு செல்வார்கள். பேருந்து நிலையத்தில் வழியனுப்ப வந்த வயது முதிர்ந்தோரும் ஊரும் அடுத்த ஜாத்திரை வரை ஆள் இல்லா தனிமையில் தான்.
சமஸ்தானங்கள் சமாதியான கதைகள் உண்டு, சக்கரவர்த்திகள் அனாதையாய் இறந்த கதைகளும் உண்டு. அப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் தான் பாக்கியா. பாக்கியாவிற்கு வயது நாற்பத்தி ஐந்திற்கு மேல் இருக்கும். நான் ஒரு பதினாறு அல்லது பதினேழு வயதில் அந்த ஊருக்கு சென்றேன். நாட்டுப்புறமும், கிராம மக்களின் இயல்பும் புரியாத, தெரிந்துக்கொள்ள விரும்பாத புது நூற்றாண்டின் பட்டினத்து வாசி. மாலையில் சாந்தி பாட்டி, அவள் வீட்டின் முன் விறகடுப்பில் கடையை வைத்து சுகுவுண்ட்டா செய்ய ஆரம்பிப்பார். புதிதாய் பழகிய பெண் தோழிகளுடன் கதை பேசி இந்த மூன்று நாட்களுக்கு பிறகு எப்பொழுதோ? என்ற பரபரப்பில் அனைத்து கதைகளையும் சொல்லி தீர்த்துவிட தோன்றும் ஆற்றொணா மாலை.
சக்கரவல்லி கிழங்கை தோலுரித்து, வேக வைத்த பிறகு வெள்ளத்துடன் பிசைந்து சீரான உருண்டைகளாய் உருட்டிய பின்னர், அரிசிமாவை பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கிய பின்னர்.ஒவ்வொரு உருண்டையாக அரிசிமாவில் முக்கிய பின்னர் அதை நன்றாக சூடேறிய எண்ணையை மிதமான சூட்டில் வைத்து போட்டால் சுகுவுண்ட்டா தயாராகி விடும். எனக்கு ஏதோ அந்த சுகுவுண்ட்டா மேல் ஒரு அபிமானம்.
பாக்கியா, நாம் அறிவுவளர்ச்சியுடையோர் என்று நாமாக ஏற்படுத்தி கொண்ட ஒரு வரையறைக்குள் சிக்காத அற்புதமான ஒரு பெண். பாக்கியாவின் தந்தை இறந்த பின்னர் பாக்கியாவின் நிலையை பயன்படுத்திகொண்டு பாக்கியாவின் மாமா சொத்தை அபகரித்தார், ஏழை ஆக்கப்பட்டார் , அனாதை ஆக்கப்பட்டார் இருந்தும் பல காலம் உழைத்தே வாழ்ந்து வந்தார். உடன் துணையின்றி தனிமையில் ஒரு வாழ்க்கை, அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்பவர் மட்டும் உணரக்கூடிய ஒன்று. பாக்கியாவிடம் நான் தற்செயலாக வேடிக்கைக்காக தான் அருந்தி கொண்டிருந்த சுகுவுண்ட்டாவை கேட்டவுடன் அவர்களது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. எனக்கு இரண்டு உருண்டை வாங்கித்தந்தார். அன்று மட்டுமல்ல அடுத்த மூன்று நாட்களும் வாங்கித்தந்தார்.
எத்தனை நாள் தனிமையின் ஏக்கம், எத்தனை நாள் யாரேனும் இப்படி கேட்கமாட்டார்களா என்ற ஏமாற்றம். எவரிடமும் உரிமை எடுத்து கொள்ளமுடியாத மனச்சிறைவாசம். ஏனோ நான் கேட்ட ஒரு சுகுவுண்ட்டையில் தீர்ந்தது போல். மூன்றாவது நாள் ஊர் திரும்ப நான் பேருந்தில் ஏற காத்திருந்த போது பாக்கியா ஓடி வந்து சுகுவுண்ட்டை தந்த காட்சி இக்கதை போல் இன்றும் நினைவில் இருக்கிறது. இது என்ன கதைகளில் வரும் காட்சி போல் என்று தோன்றலாம். நமது வாழ்க்கையில் நடக்கும் வரை மற்றவர் சொல்லும் எல்லாமே கதை தான்.
என்றாவது ஒரு நாள் பாக்கியாவிற்கு ஏதாவது சிறப்பாய் செய்து விடவேண்டும் என்று அன்றே நினைவில் வைத்துக்கொண்டேன். ஆனால் பல வருடங்கள் அந்த ஊர் பக்கம் செல்ல முடியவில்லை. அவ்வப்போது பாக்கியா நினைவு வந்து போகும். ஒரு நாள் பாக்கியா இறந்த செய்தி வந்தது அன்று ஆரம்பித்த பாரம் இன்னும் குறையவில்லை. இப்படியான அழகான மனிதர்கள் வாழ்வில் சிறு பகுதியாக வந்து என்றும் இதயத்தில் நிலைப்பதுண்டு.
****முற்றும் ****
Nice story ..
Thank you Maya !