களத்துமேடு அத்தியாயம் – 10

எழுத்து: அரன்


“உளுந்தும் சின்ன வெங்காயமும் போட சொல்லிருக்கேன். வேல சரியா நடக்குத்தானு இசக்கி ட்ட சொல்லு பாக்க சொல்லு ல.” செங்காளையிடம் சொன்னார் அப்பா.
“மாயா ட்ட சொல்லிருக்கேன். கூட மாட நின்னு பாத்துக்குவான்.”
“நம்ம இனத்தான் ல.. பய ஒரு உறுத்தாதான் இருக்கான். கூடயே வச்சுக்க. பழக்கமும் தொழிலும் எனஞ்சி தா ல இருக்கணும்” அப்பாவின் உபதேசம் வேறு.


“வசவப்புரம் பக்கோம்ருந்து ஒரு வரன் வந்துருக்கு பா. பையன் குடும்பம் காலாசலு போடுதாகளாம். ரெண்டு மாடி வீடு பையனுக்கு தான்.. பையன் தங்கச்சிக்கு நூறு பவுனு போட்டோன். நூத்திருவது நீங்க போட்ட உசிதம். நா குறிச்சிறலாம் நாவ. ” பொடி தூவினாள் அம்மா.


“அக்கா ட்ட சொன்னியா? என்ன சொல்லுதா? பையன் படம் காட்டுனியா” வினவினான் செங்காளை.
“அட நீ என்னல, அக்கா முக்காதுட்டுனா, தம்பிக்காரன் காத்துட்டாலே இருக்கான்.” கடிந்து கொண்டார் அப்பா.


“இல்ல ல தங்கோம். நம்ம மக்க மாருல பெரியவுக பாத்து பேசுறது தான. உலகம் தெரியட்டுமே னு உனையும் அவளையும் படிக்க வச்சோம், இதுக்கெல்லாம் கேட்டுட்டு இருந்தா நல்லவா இருக்கும். சாதி சனம் என்ன பேசும். முக்கியமா அவ கீழ தெரு போய் படிப்பு கருமம் னு பண்ணுறது தெரிஞ்சா அவைங்க குதிப்பானுங்க. பாத்து பண்ணனும்.” அம்மா புலம்பி தீர்த்தாள்.


“சரி.. பேசி பாப்போம்.. பொன்னி ட்ட..”
பைக்கை எடுத்து வயலுக்கு புறப்பட்டான் செங்காளை.


——××××—–××××——


“எம்மோவ், யான வருது… யான வருது… ஓடியா…” சுடலை கத்த சட்டை செய்யாமல் இருந்தாள் சுகந்தி. 
“நீ உன்பாட்டுக்கு இரு. குருமா சட்டி வைப்பல்ல… அந்த சட்டிக்கும் எண்ணெய் கிண்ணத்துக்கும் நடுவுல ஒரு இருபது பைசா இருக்கும். எடுத்து கொடு. “
திரும்பவும் சட்டை செய்யாமல் அடுப்பு குழல் ஊதிக்கொண்டிருந்தாள் சுகந்தி.


“நீ கொடுக்கியா என்ன இப்ப? அவளோ ஆச்சா.. நா பொன்னி அக்கா ட்ட வாங்கிக்கிறேன்.” 
வங்கென்று புட்டத்தில் விழுந்தது அறை. 
திரும்பி பார்த்தாள் பிடித்து வைத்து விடுவாள் என்று நிலையை தாண்டி ஓடினான் சுடலை.


ஓடி வந்தவன், சரியாக வந்து நின்ற செங்காளை முன்ன வந்து நிக்க, 
“யெண்ணோவ்… ஒரு ஒத்த ரூவா தறியா… யான வந்திருக்கு, சூடு சாணி பாத்தேன். கீழத்தெரு தான் போயிருக்கு. நா போய் பாத்துட்டு வரன்.”
“ஏல… ஆனைக்கு ஆசி காசு பத்து பைசா இல்ல இருபது பைசா கொடு, ஏன் ல ஒத்த ரூவா!?”
“ஆசியோடு கொஞ்சம் ஏறி அசஞ்சி பாக்கலாம்னு தான்”
ஆழாக்கு மாதிரி இருந்து இவன் பண்ணும் கொடுமையை நினைத்து சிரித்தான் செங்காளை. 
“இந்தா ஒரு ரூவா. ஆனையோட அசஞ்சி பாரு.. ஆனா ஆனை இங்க வரும்.. காத்திரு… கீழத்தெரு போய் அங்க ஆடிட்டு கிடந்த, நல்லா இராது.”


 (நெல்வாடைகள் தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *