உனக்கு எதிரி யார் ?

எழுத்து : சபரி

‘என்னடி இன்னும் வேலை பாத்துகிட்டு இருக்க ?’ கண்மணி கேட்டாள்.

‘அம்மா, வர வர என்னோட டீம்-ல கடுப்பேத்துறாங்க’ அனிதா சொல்லிவிட்டு தொடர்ந்தாள் ‘எட்டு மணிக்கு முடிக்கணும்னு நினைச்சேன் இன்னும் முடியல’ சலிப்பாக பேசினாள்.

மென்பொருள் உலகில் புதிதாய் வேலைக்கு சேர்வோர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அனுபவிக்கும் வழக்கமான இம்சை தான் இது. ஒரு சித்தாளாக வேலைக்கு சேர்ந்தாலோ, ஒரு நாவிதரிடம் வேலைக்கு சேர்ந்தாலோ நமக்கு தரும் முதல் வேலை தேநீர் வாங்கி தருவது அது போல தான் ஆவணப்படுத்துதல் மென்பொருள் உலகில். ‘டூட்’ என்று அழைக்கப்படும் மூத்த பொறியாளர்கள் தான் இது போன்ற சில்லரை வேலைகளை இளையோர் தலையில் கட்டுவது.

‘என்ன இது எப்போ பாரு லேப்டாப்லேயே இருக்க, ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து எவளோ நேரமாச்சு, எடுத்து வை’ கண்மணி சொன்னாள்.

‘தோ முடிஞ்சு போச்சி’ என்று ஆறாவது முறையாக சொன்னாள் அனிதா.

மறுநாள் மேலாளரிடம் பேசிவிட்டு சிடு சிடு வென்று உட்காந்திருந்தாள் அனிதா.

‘ஹே பால் குடிக்குரியா?’ கண்மணி கேட்டாள்.

‘அம்மா நா சாப்ட்வேர் என்ஜினீயர், காபி குடு’ கொஞ்சம் கேலியா பேசினாள் ஆனால் அது ரொம்ப நேரம் நிலைக்கவில்லை. கண்மணி ஏதோ விளையாட்டுக்காக லேப்டாப்பில் கை வைக்க ‘அம்மா கொஞ்சமாச்சும் அறிவிருக்கா இப்படி பண்ணிட்ட’ என்று அதட்டலாய் சொன்னாள் அனிதா. சொல்லிவிட்டு அம்மா முகத்தை கூட பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரம் கண்மணி அனிதாவை பார்த்தாள் தன்னை திட்டியது கூட பரவாயில்லை ஆனால் அவளின் முக வாட்டத்தை கூட அங்கீகரிக்காதது பெரும் வருத்தம் தந்தது. மதிய உணவு வேலை ஆகிவிட்டது அனிதாவாக வரட்டும் அப்பொழுதாவது அவள் தன் ஊடலை அங்கீகரிக்கிறாளா என்று பார்ப்போம் என்றெண்ணியிருந்தாள் கண்மணி. அம்மா தான இப்படி வேலைய கெடுத்துவிட்டாங்க அவங்களே சமாதானம் பண்ணட்டும்னு அனிதா எண்ணியிருந்தாள்.

மணி இரண்டாகிவிட்டது , இருவரும் நிலைப்பாட்டில் இருந்து இறங்கவில்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடக்கும் இது போன்ற ஊடல்களில் பெரும்பாலும் இறங்கிவருவது பெற்றோர்தான், அவர்கள் சாப்பிட அல்ல பிள்ளைகள் பசியாய் இருக்கவேண்டாமென்று. கண்மணி தட்டில் சோறும் அதில் முருங்கை சாம்பாரை ஊற்றி குழைத்து அதனோடு வழுவழுப்பு நீங்கி ஆழமாய் வறுப்பட்டு கொஞ்சம் காரம் தூக்கலாக வெண்டைக்காய் வறுவல் அதனோடு அங்கங்கே சீரகம் ஒட்டியிருக்கும் உளுந்து அப்பளம் வைத்து அனிதாவை நோக்கி வந்தாள்.

பக்கத்தில் அமர்ந்தாள் கண்மணி, ஒரு உருண்டை உருட்டி அனிதா வாய்க்கு முன் நீட்டினாள். எதுவும் பேசாமல் வாயில் வாங்கினாள் அனிதா. இரண்டு வாய் சோறு சென்றது கண்கள் கலங்கி நீர் வழிந்தது அனிதாவிற்கு. வாயில் சோறுடன் குழந்தை போல் ‘சாரி மா தேவை இல்லாம கோவப்பட்டுட்டேன்’ என்று சோறும் எச்சிலும் தெரிய மேல் உதட்டில் வழிந்த கண்ணீர் சொட்டாய் நின்றிருக்க சொன்னாள். கண்மணி கண்களை துடைத்தாள், அப்படி செய்தாலே நம்மை மன்னித்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அம்மா கையால் உணவை வாங்கிவிட்டு பொய் கோவம் கூட காட்டமுடியுமா என்ன ?

‘நா தானடி தப்பு பண்ணேன்’ என்றாள் கண்மணி.

‘இல்லமா , நீ பண்ணதுனால பெரிய பிரச்சனை இல்ல, ரெண்டு நிமிஷத்துல சரிபண்ணிட்டேன், அது… டென்ஷன் ல உன்ன காத்திட்டேன் மா , சாரி மா’ என்று மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டாள் அனிதா.

‘சரி விடுடி , என்ன பிரச்சன’ கண்மணி கேட்டாள் .

‘இந்த மேனேஜர் தான் மா ரொம்ப மோசம்’ அனிதா சொன்னாள்.

‘எதுக்கெடுத்தாலும் மேனேஜர குறை சொல்லாத’ கண்மணி சொன்னாள்.

‘பின்ன அவனாலதான் இவ்ளோவும்’ அனிதா சொன்னாள்.

‘தெளிவா சொல்லு’ கண்மணி உன்னிப்பாக கேட்க தொடங்கினாள்.

‘அந்த சுகன்யா நிறைய வேல பாக்குறாளாம் , நா கம்மியா வேலை பாக்குறேனாம்! அதனால செகண்ட் பக்கெட் தானாம்’ அனிதா சொன்னாள்.

‘இன்னைக்கு சனிக்கிழம இன்னைக்கு கூட வேல பாக்குற இதுக்கு மேல என்ன வேலை பாக்கணும் புரியலையே’ கண்மணி கேட்டாள்.

‘அவ எப்போ பாரு ஆன்லைன்-ல இருப்பா, சண்டே கூட, அவயெல்லாம் தூங்கவேமாட்டா ‘ அனிதா சொன்னாள்.

‘அப்போ உனக்கு எதிரி யாரு’ கண்மணி கேட்டாள்.

‘சுகன்யா?!’ அனிதா சொல்லிவிட்டு ஆச்சரியமாக அம்மாவை பார்த்தாள்.

‘ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் சந்தோஷம், உங்க மேனேஜர் கீழ இருக்க எல்லாரும் ஒண்ணா பேசி பாருங்க பிரச்சனை தீந்துடும். இப்படி ரொம்ப நேரம் வேல பாத்தாத்தான் நல்லா வேலை செய்றாங்கன்னு மைண்ட்செட் பண்ற, உன்னோட கூட வேலை செய்றவங்கதான் உனக்கு எதிரி. சாப்ட்வேர் என்ஜினீயரை மட்டம்தட்டுறது இன்னொரு சாப்ட்வேர் என்ஜினீயர் தான்’ கண்மணி சொல்லி முடித்தாள். அனிதா லேப்டாப்பை எடுத்து ஓரம் வைத்தாள்.

இரண்டு மூன்று மணி நேரம் தொலைக்காட்சி , மாலை டீ வடை என கழிய ‘கோவிலுக்கு வரியாடி இன்னைக்கு தான் ப்ரியா இருக்க’. கண்மணியும் அனிதாவும் மஞ்சள் நேர வெஸ்பாவில் காற்றை அனுபவித்து கொண்டே சென்றார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். தரிசனம் செய்து கொடியின் கீழ் சிறிது தூரத்தில் உட்காந்திருந்தார்கள்.

‘அங்க பாரேன் கொஞ்சம்கூட அறிவே இல்லாம எப்படி வந்திருக்க கோவிலுக்கு’ கண்மணி சொன்னாள்.

இடை நீல குர்த்தியும் முட்டி நீல ஜெஃகிங்ஸ் அணிதிருந்தாள் அந்த பெண். அனிதாவுக்கு ஏதோ சுருக்கென்றது.

‘என்னமா இப்படி சொல்லிட்ட’ அனிதா திகைத்து கேட்டாள்.

‘இந்த டிரஸ் தேவையா, கோவில்ல’ கண்மணி சொன்னாள்.

‘நா இந்த டிரஸ் போட்டிருந்தாலும் இப்படி தான் சொல்லுவியா ?’ அனிதா வினவினாள்.

‘கோவிலுக்கு வரவிட்டுருக்கவே மாட்டேன்’ கண்மணி காட்டமாக சொன்னாள்.

‘ஏன்’

‘பொண்ணுங்க கோவிலுக்கு அப்படி வரக்கூடாதுடி’

‘ஏன் அந்த மாமா மேல சட்டையே போடாம சுத்திகிட்டு இருக்காரு, தோ இன்னொருத்தர் அக்குள் முடி தெரிய சாமி கும்பிட்டுக்கிட்டிருக்காரு, அந்த பையன் ஷார்ட்ஸ் போட்டிருக்கான், அவங்கயெல்லாம் சுதந்திரமா சாமி கும்முடலாம் பொண்ணுங்க தோணுனாப்புல வந்து கும்பிடக்கூடாதா ?’ கோவமாக பேசிவிட்டு வண்டியை நோக்கி நடந்தாள் அனிதா.

அம்மா ஏதோ யோசனையில் நடந்துவந்து வண்டியில் அமர்ந்தார். ‘என்னடி இப்படி கோச்சிக்குற’

‘அம்மா, சாப்ட்வேர் என்ஜினீயர மட்டம்தட்டுறது இன்னொரு சாப்ட்வேர் என்ஜினீயர் தான்’ அனிதா சொல்லிவிட்டு கோவில் விளக்கின் வெளிச்சத்திலிருந்து தெரு விளக்கின் வெளிச்சத்திற்கு வந்தாள். வண்டி மௌனமாய் வீடு சென்றது.

முற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *