எழுத்து: அரன்
ஊரே பூக்கோலம் சூட, ரத வீதி எங்கும் மத்தளம் ஆட, பொண்டு பொடிசுகள் எல்லாம் ஆரவாரத்தில் ஆடி மகிழ, பக்தர்கள் வடமிழுத்து அழகாய் அசைந்து வந்தாள் உலகம்மன்.
ரத வீதி, ரதம் போகும் வீதி. வருசத்துக்கு ஒருக்கா வென்று கொண்டாடப்படும் ஊர்த் திருவிழா. தேர்ப் போகும் வழி நெடுக சனம் கண்பறிக்கும் விளையாட்டு சாமான் முதல், நாக்கு சுவைக்க நல்ல முறுகல் தோசை சாம்பார் வரை எல்லாம் நலம் தான்.
ஒரு பொட்டிக்கடை இடுக்களவில் இருக்கும், அந்த கடையின் இருட்டு தான் அதன் அடையாளம். சுத்து பத்து-ல இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ரத வீதி போன இருட்டு கடைக்கு போகாம எவன் வருவான் னு கேக்குற அளவுக்கு பிரசித்தி.
‘நல்லா சம்பா கோதுமையை எடுத்து, பாலாக்கி, பாலெடுத்து, நெய் சேர்த்து வேக வச்சி, இனிப்பு போட்டு, போட்டபிள்ளை கன்னம் போல சுவைக்க சுவைக்க தாரான்யா’ இது ஊர் பேச்சு.
மத்த நாட்களெல்லாம் வெறும் இரண்டு மணி நேர கடை தான், ஆனால் திருவிழா னு வந்தா செமத்தியா ஓடும்.
பக்கத்துலே நேந்திரம் காய் சீவல். நல்லா கேரளத்து வாழை காய்ல , பிராங்கோட்டை தேங்காய் எண்ணெய் ல போடற அந்த சீவலுக்கு வாசம் பிடிச்சு நின்னே சாப்பிட மறந்த பலர் இருப்பார்கள்.
அது மட்டுமா… சுட சுட போடும் மிளகாய் பஜ்ஜி, மசாலா சுண்டல், கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய், மிளகாய் பொடி தூவி தரும் டெல்லி அப்பளம் என்று கிடைக்காத பொருளில்லை அன்று.
வடம் பிடித்து பக்தர்கள் சூழ வந்த அன்னை உலகம்மாள், வெடி வேட்டுகளுடன் பவனி வருகிறாள்.
ஊர் சுற்றி வந்து, கீழத்தெரு முன்னே திரும்பும் ரோடு வழியே ரதத்தை திருப்பினார்கள். கீழத்தெரு எனும் வேலன் குடியிருப்பு சொந்தங்கள், ஏக்கங்கள் இருந்தாலும் தெரு முனையில் கூடிக் கும்பிட, சிலையில் ஏறாத ஆத்தா, நெசமாவே மனம் குளிர்ந்திருக்கும் போலும், சாரல் கொண்டு தொடங்கி, நன்றாக பெய்தது மழை. மணமோடு சிலை தேகமும் குளிர்ந்து போனாள் உலகம்மை.
ஒரு புறம் நீல சட்டை, பட்டு வேட்டியுடன் வடமிழுத்து கொண்டே தனக்கு இடது பார்க்கிறான் செங்காளை. முகத்தில் சிரிப்பும் மனதில் பக்தியுமாய் மஞ்சள் தாவணியில், மயில் போல் மங்கை , பாவாடை தரைத் தவழ, மீன் விழி கண்கள் கொஞ்ச பார்க்கும் நேரம், தன்னை இளவழகி யின் இணைப்பில் மறுக்கிறான் செங்காளை.
இன்னோரு புன்முறுவல் தான், பின்னர் அவளும் திரும்பவில்லை, இவனுக்கு அவளின் தரிசனமும் கிட்டவில்லை.
வீட்டு வாசலில் வந்து நின்ற அம்மனுக்கு சிங்காரமும் அவன் அப்பா சிவபிரகாசமும் வந்து பணிவிடைகள் செய்தார்கள்.
காலம் கொண்ட எல்லா வினைகள் செய்தாலும், வசதிக்கு வாய்த்தது தான் (கடவுள்) சிலைகள் போல. புலம்பினர் சிலர். மன புலம்பல் பிறர் செவி அடையாது என அறிந்து.
‘சின்ன கொறைச்சல் கூட இல்லாம செம்மையா செஞ்சிடீங்க ணா. குடும்பம் செழிப்பா இருக்கும். ‘ கனிவு வார்த்தைகள் சொல்லி புறப்பட்டார் பூசாரி.
சாமி கூட தன் வீட்டு வாசலில் நின்று தான் போகும் என்ற இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்தினான் சிங்காரம்.
(நெல்வாடைகள் தொடரும்)