எழுத்து : அரன்
“இன்னும் ஏறு ல. அடிக்கிற வெயிலுக்கு பத்து காய் லாம் காணாது. நா ஒருத்தனே உறிஞ்சிட்டா, நீ பாத்துட்டு மட்டும் இருப்பியா… மள மள னு பறிச்சி போடுல சுடல.. ”
சுடலை பறித்துப்போட்ட நுங்கு பழங்களை பொருக்கிக்கொண்டிருந்தான் இசக்கி.
“மக்கா எசக்கி… தின்னது போக கொஞ்சம் இருந்த கொடு வே. நல்லா வெறகு அடுப்புல வச்சி சுட்டு தின்போம். ருசி பேயா இருக்கும். “
செங்காளைக்கு ருசி தேடும் நாக்கின் பசி கூடிக்கொண்டே போனது.
வெயிலுக்கு நுங்கு என்றால், நன்றாக சுட்டு திங்க பனம்பழம். அருமையாக இருக்கும். தித்திப்புடன் சுவையும் சத்தும் கொண்ட இயற்கை தந்த கொடை.
“ண்ணோவ். மேல நானும் இருக்கேன். எனக்கு ரெண்டு விட்டு வையி. ” இசக்கியை சீண்டினான் சுடலை.
” ஏப்பா செங்காள. அங்க வர்றது உன் மாமன் மவன் சிங்கரமும் அவன் கூட்டாளிகளும் மாதிரி தெரிது. “
அந்த பொட்டல் காட்டில், காய்ந்த மண்களின் மேனியில், கேட்பாரில்லா ராச மனதோடு, மெருகேறியிருக்கும் திமிர் கொண்டும் சிங்காரமும் அவன் சகாக்களும் பக்கத்து பனை மரம் வந்தார்கள்.
“கும்பிடுறேன் அண்ணா. பனம் பழம் பறிக்க வந்தியபோல. ” கூட்டத்தில் ஒருத்தன் மரியாதை நிமித்தமாக விசாரித்தான்.
“ஆமா பா. வெயில் கொஞ்ச அதிகமா இருக்கு, நொங்கு பறிப்போம் வால னு சகா கூப்டாப்பிடி. அதான்… “
சிங்காரத்தோடு உட்கார்ந்த நாலு எடுப்புகளும் பனை கள் இறக்கி இதமாய் அருந்த ஆரம்பித்தனர்.
“சுடல… போதும் ல… இருக்குறதே சாப்ட ரெண்டு நாளாகும் போல. இறங்கு… “
செங்காளை, இசக்கி, சுடலை நடையை கட்டினர்.
“அத்தான்… வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லு. ”
குரல் கொண்டு அது சிங்காரம் என தெரிந்தாலும், சட்டை செய்யாமல் நடந்தான் செங்காளை.
புன்னகைத்துக்கொண்டே கொண்டு வந்த கோழி மிளகு கறியை லாவாக மென்று முழுங்கினான் சிங்காரம், ஒரு சிறு புன்னகையுடன்.
—–××××—–××××—–
ஆள் அரவம் இல்லா ராத்திரி. கடைகளும் வீடுகளும் அடைக்கப்பட்டு, கோழிகள் போல வீட்டுக்கூண்டுக்குள் சனங்கள் அடைந்திருந்த நேரம். சாக்கு சொல்லியெல்லாம் வெளியே வர முடியாத நடு சாம நேரம்.
மஞ்சள் சுண்ணாம்பு சுவரை தாவி குதித்தான் செங்காளை. துணைக்கு யாரும் இல்லை. தனியே தான் வந்திருந்தான். மார்கழி மாத துவக்கம்.
பனியின் வாடைக் காற்று முகத்தை தொட்டுதவழ, முகத்தில் வழிந்த வியர்வையை சட்டை முழங்கையில் துடைத்து நடந்தான்.
பிராங்கோட்டை ரைஸ்மில் பூட்டப்பட்டு இருபது வருடங்கள் மேல் இருக்கும். அண்ணன் தம்பி சொத்து பிரச்னை தான். இதுவும் அவர்களது சினிமா கொட்டகையும் சேர்த்து நீதிமன்றம் நிலுவையில் வைத்தது. இருபது ஆண்டுகள் தான் ஓடி இருந்தது.
சுற்றுச்சுவர் தாண்டி உள்ளே நடந்தவன், வாயிற் தாண்டி தெற்க்கே நடந்தான்.
வலப்பக்கம் திரும்பிய அவனை, பற்றி இழுத்தது வளைகள் கொண்ட கரங்கள்.
கண்ணாடி வளையல்கள் குலுங்க, மேலும் சப்தமேற்றும் கொலுசுகள் வேண்டாமென்று நினைத்தாலோ என்னவோ, கொஞ்சும் மங்கையவள் இடுப்பின் கொடி கூட அதை முடிந்திருந்தாள்.
நாணும் சிறு மீன் கண்களும், பிறைக்கு ஒப்பான நெற்றியும், நீள வள சடையும், தீப் பிழம்பின் நிறம் கொண்டு தேகத்தில் பூசிய வெளிரில்லா பொன் நிறமும், குங்குமம் இட்டாலும் அது ஈடாகாது தித்திக்கும் இதழும் பெற்று வந்து நின்றாள் இளவழகி.
மூச்சிறைத்த செங்காளை அவளைப் பார்த்திருக்க, தாவணி முந்தானை கொண்டு அவன் முகம் இவள் துடைக்கிறாள்.
அவள் கண்கள் வெட்கத்தில் அவன் முகம் பாராமல் அங்கும் இங்கும் நோக்க முற்பட, செங்காளை கண்ணெல்லாம் இளவழகி மேல் தான்.
” மானுக்கு தைரியம் சாஸ்தி தான். கொஞ்ச காலம் பொறுவே, உங்கொப்பன தாண்டி தூக்கிருவோம். “
” அது எதுக்கு தூக்கிக்கிட்டு, வாடி வாசமலரே நா வந்துரபோறேன்”
” எங்க… கொஞ்சம் வாசம் புடிச்சிக்கலாமா ? “சீண்டினான் செங்காளை.
” நாள் இருக்கு டா மக்கு “
சொல்லிக்கொண்டே அவன் மார்சாய்கிறாள். அவள் கரங்கள் செங்காளையை இறுக்கி கட்ட. நம்பிக்கைகள் முகத்தில் புன்முறுவ, செங்காளை அவள் நடு வகிடில் சத்தமில்லாமல் முத்தம் பதித்தான் அழுத்தமாய்.
( நெல்வாடைகள் தொடரும்)