மைசூர் சாண்டலும் பீங்கான் பொம்மையும்

எழுத்து : சபரி

நவயுக மாந்தர்களுக்கு நாடு நாடாய் சுற்றி நாடோடி வாழ்க்கை வாழ்வதில் மோகம் உண்டாகியிருப்பதை காண முடிகிறது ஆனால் பண வசதி இருந்தால் மட்டுமே நாடோடி வாழ்க்கை எங்கு சென்றாலும் அழகான அற்புதமான அனுபவமாய் இருக்கும். வாழ்வாதாரத்திற்க்கே சோதனை என்றால் ?

பெரும்பாலும் திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும் ஒடர்கள் இன குழுவினர் பற்றி, எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு வரை விரிந்த மூன்று கிலோமீட்டர் நீளமான ஏரி எங்கள் சரஸ்வதி நகர் பின்புறம் ஆரம்பம் ஆகும். மூன்று கிலோமீட்டர் நீளத்தில் ஒரு கிலோமீட்டர்க்கு பதினைந்து அடி உயர மடு விவசாய நிலத்திற்கு தெற்கே அமைந்திருந்தது. மடுவின் மேல் கூடி வாழ்ந்தவர்கள் தான் இந்த ஒடர்கள், இவர்கள் இன்னமும் கூட குழுக்களாகத்தான் வாழ்கிறார்கள். மூங்கில் முறம் , பீங்கான் பொம்மைகள் , தென்னங்குச்சி தொடப்பம் ஆகியவற்றை ஊர் ஊராக சென்று விற்பார்கள். சனிக்கிழமைகளில் செய்தித் தாள்கள் மூட்டை மூட்டைகளாக குவிக்கப்படும் மடுவுக்கும் வயலுக்கும் நடுவில் உள்ள கான்க்ரீட் ரோட்டில். சில அன்னக்கூடைகளில் ஏரி நீர் நிரப்பப்படும். தாள்களை ரோட்டில் தேய்த்து தேய்த்து பசை செய்யப்படும் அதனோடு தூளாக்கப்பட்ட வெந்தய பொடி அதனோடு கலக்கப்பட்டு மூங்கில் பட்டையாலான முறம்மீது பூசூவார்கள். கால்மடித்து உட்கார்தால் தரையிலிருந்து வயிர்வரை உயர்ந்த அரிவாள் கொண்ட அரிவாள்மனையில் தென்னை ஓலைகளை கிழித்து குச்சி எடுப்பார்கள். அதே சனிக்கிழமைகளில் மட்டும் எங்கள் கடையை நான் பார்த்துக்கொள்வேன். கடைக்கு வரும் பெரும்பாலனோர் கூலி வேலைசெய்பவர்கள் மற்றும் ஒடர்கள் தான் அதனாலேயே விலை உயர்ந்த சோப்பு வாங்குவர்களை நன்றாக நினைவிருக்கும். கடையில் மொத்தமாகவே மூணு மைசூர் சாண்டல் தான் கடையில் இருக்கும், ஒன்று நாங்களே எடுத்துக்குவோம் , மற்றொன்று பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு இறுதியாக ஒடர்கள் சமூகத்தில் இருக்கும் அமுலு அக்கா. வழக்கமாக இல்லாமல் அமுலு அக்கா மட்டும் கொஞ்சம் சிறப்பு. அமுலு அக்காவை தான் முதல் ஆளா படிக்க வெச்சாங்க. எப்போவும் மைசூர் சாண்டல் சோப்பு தான். எங்க அம்மா சொல்லுவாங்க இவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும், ஆனா இவங்க ஆளுங்க படிக்கவே மாட்டாங்களே என்ன பண்ண போறாங்களோ ?!
எங்க அம்மா சொன்ன விஷயம் கொஞ்சம் பழமைவாதமா இருந்தது.

“அக்கா, எப்போவும் ஏன் இந்த சோப்பு வாங்குறீங்க?”

“இந்த சோப்பால தான் அழகு மெயின்டைன் ஆகுது ” சிரிச்சுகிட்டே சொன்னாங்க .

நா அவங்ககிட்ட பேசுன பெரிய வாக்கியமே இதுதான். எங்க சரஸ்வதி நகர்ல அவங்க வயசு பசங்க அமுலு அக்கா கிட்ட பேச கூட பயப்படுவாங்க, அந்த அளவுக்கு ஒரு கம்பீரம் இருக்கும் ஆனா கடைக்கு வர நடுத்தர வயது ஆம்பளைங்க அவங்க இனத்தோட பேற சொல்லி இவளுக்கு இதெல்லாம் தேவையான்னு ஏளனப்படுத்துவாங்க.

அக்கா படிச்ச அறிவு குடுத்த தேஜசா இல்ல அவங்க நம்புற மைசூர் சாண்டல் குடுத்த அழகான்னு தெரியல ஆனா அந்த முகத்துல இருக்க தெளிவு, ஒரு விதமான ஒளி, பீங்கான் பொம்மை மாதிரி இருப்பாங்க.

கொஞ்ச வருஷம் கழிச்சி படிப்பை பாதில நிறுத்திட்டாங்க, அமுலு அக்காக்கு ரெண்டு ஊரு தள்ளி இருக்க ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்க இன்னொரு குழுவில இருக்க பன்றி வளக்குற ஒருத்தர் கூட திருமணம் செஞ்சிட்டாங்க. எனக்கே ஒரு மாதிரி இருந்தது. என்னோட எண்ணமே எனக்கு பழமைவாதமா தோண்டிற்று. ஏன் பன்றி வளக்குறவங்கனா குறையா ?!

அந்த அக்கா கல்யாணத்துக்கு போகவே பயங்கரத்தடை எனக்கு. இருந்தாலும் கலந்துக்கிட்டேன், பன்றி வளக்குறவங்க வீட்டு கல்யாணம் பன்றி கறி இல்லாம இருக்குமா. அந்த கல்யாணத்துல புடிச்ச ஒரே விஷயம் வறுத்த கறி தான்.

ஐந்து வருடம் கழித்து

அமுலு அக்காவோட அண்ணன் வேலு, அவருக்கு ரெண்டு பொண்ணு இருக்கு அதுல பெரிய பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா எடுத்தாங்க. அவங்க சொந்தகாரங்க எல்லாரும் வந்திருந்தாங்க. அமுலு அக்காவும் தான். ஆளே வேறொருவரா மாறியிருந்தாங்க, பீங்கான் பொம்மை போல இருந்தவங்க இல்லை, உடல் மெலிந்து , நரை தரித்த தலை , சிறியதாய்க்கூட தங்கம் தெரியவில்லை. அப்போதான் கோவிலுக்கு போயிவந்த அம்மா சொன்னால் “கடவுள் இருக்கானா என்ன “.

மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்தவங்க நிகழ்ச்சி முடிஞ்சதும் கடைக்கு வந்தாங்க, வேலு அண்ணா பொண்ண படிக்கவெக்க காசு இல்லைன்னு இன்னொருத்தர் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார். அதே சமயம் அமுலு அக்காவும் கடைக்கு வந்தாங்க. பழக்கதோஷத்தில் மைசூர் சாண்டல் எடுக்க யோசித்தேன் பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அமுலு அக்கா “தம்பி, எப்படி இருக்க ?”
“நல்லாயிருக்கேன் , நீங்க “

“ஏதோ இருக்கேன்”

“தம்பி, அஞ்சு ரூபா சோப்பு தாங்க”

பெரிய விஷயம் இல்லனாலும் கேக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.

“அண்ணே, கல்யாணம் பண்ணிடலாம்” ஒருவர் சொன்னார் .

“யாருக்கு?” அமுலு அக்கா கேட்டாங்க.

“ரேணுகாவுக்கு ” அவர் சொன்னார், அமுலு அக்கா முகம் கொஞ்சமா சிவந்தது.

“எதுக்கு அண்ணே”

“இல்லமா படிக்கவெக்க காசு இல்லை , அதான் ?” வேலு சொன்னார்

“எனக்கு ஆன நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னே, ரேணுகாவுக்கு கல்யாணம் இப்போ வேண்டாம் இல்லனா என்ன மாதிரி பீங்கான் பொம்மை தான் விக்கணும்” அமுலு அக்கா சொன்னால்.

“காசு இல்லைன்னு தான் கல்யாணம் பண்ணோம் , ஆனா அவன் இப்படி சூதாடி சொத்தெல்லாம் அழிப்பான்னு நினைக்கலை” வேலு அண்ணா சொன்னார். எனக்கு என்னமோ போல இருந்தது, ஒரு நிமிஷம் நாமளே கூட அமுலு அக்காவுக்கு மறுமணம் பண்ணிடலாம்ணு யோசிச்சேன்.

“எல்லாத்துக்குமே கல்யாணம் தான் முடிவா?” அமுலு அக்கா நறுக்கென்று கேட்டால். வேலு அண்ணா என்ன
சொல்வதென்று புரியாமல் திகைத்தார். எனக்கும் அப்படித்தான் இருந்தது.

அடுத்த நாள் எங்க ஊரு முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு ரேணுகாவோட படம் போட்டு அவளோட கால்பந்து பதக்கங்களோட, மேல் படிப்புக்கு பணம் தேவைன்னு.

****முற்று****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *