பொங்கல்

எழுத்து : சபரி

“கார்த்தி , டேய் கார்த்தி” உரத்தக்குரலில் நிஷா எழுப்பினாள்.

“ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க விடமாட்டியா” கார்த்தி கடிந்து கொண்டே எழுந்தான். ஒரு வாய் தேநீர் குடித்து விடலாம் என்று எண்ணி தேநீர் கேட்க வாய் திறக்கும்முன் நிஷா “சீக்கரம் போயி நெய் வாங்கிட்டு வா, பொங்கல் அடுப்புல இருக்கு”.

“எப்பயுமே அடுப்புல இருக்கப்பதான் வேலை சொல்லுவியா, நேத்து நைட் சொல்லியிருக்கலாமுல” மேலும் கடிந்து கொண்டான்.

“இப்போ போறியா இல்லையா” நிஷா கொஞ்சம் குரல் எழுப்பினாள், கரண்டி ‘டணார்’ என்று நெடிலில் பொங்கல் பானையின் மேல் ஒலியெழுப்பியது.

“எதுக்கு இப்போ கத்துற” கார்த்தி இன்னும் கொஞ்சம் குரல் எழுப்பினான்.

“நானா கத்துறேன் நீதான் கத்துற…” நிஷா அடுத்த வார்தைகளை துப்பாக்கியில் காத்திருக்கும் தோட்டாக்கள் போல் தயார் செய்தாள். இது போன்ற கணவன் மனைவி சண்டை பாத்திரம் விளக்குவது போல தேயிக்க தேயிக்க வந்து கொண்டே இருக்கும் தீரவே தீராது. அதற்க்கு வழி தராமல் கார்த்தி வாய்த்திறக்காமல் சட்டை பாதி அணிந்தவாறு இருசக்கரவாகனத்தில் ஒரு முறுக்கு ஒரே முறுக்கு இருசக்கரம் காற்றை கிழித்து கொண்டு சென்றது முகம் கழுவாத அவன் முகத்தில் கண்களில் இருந்து இருபுறமும் கண்ணீர் வழிந்தது வேதனையினால் அல்ல வேகத்தினால்.

பக்கத்தில் இருக்கும் கடையில் வாங்கினால் நிஷா ஏற்றுக்கொள்ளமாட்டாள், அவர்கள் வழக்கமாக வாங்கும் அன்னை ஸ்டோர்ஸ்-யில் தான் வாங்கவேண்டும் இல்லை என்றால் அதற்கொரு சண்டை. அன்னை ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்து இரு கிலோமீட்டர் செல்லவேண்டும். வண்டி ஐநூறு மீட்டர் கடந்திருக்காது, நிஷா அலைபேசியில் அழைத்தாள்.

“வண்டி ஓட்ட கூட நிம்மதியா விடமாட்டியா ” வீட்டில் இருந்து வரும் போது இருந்த அதே காரம்.

“கடைக்கு போயிட்டியா ?” நிஷா கேட்டாள். “இல்ல”

“சரி பொறுமையா கேளு, போனவாரம் கொள்ளு கேட்டிருந்தேன் அதையும் வாங்கிட்டு வா ” நிஷா சொன்னாள்.

“வீட்ல இருக்கும் போதே சொல்லமாட்டியா…” மீண்டும் கடிந்து கொண்டான் கார்த்தி உடனே அலைபேசி அழைப்பை துண்டித்தான்.

வண்டியில் வேகம் கொஞ்சம் குறைந்தது, மனதை கடிந்து கொண்டே அவர்கள் காதல் பக்கங்களை புரட்டினான். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்டார்கள். கார்த்தி வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அவன் வீட்டை விட்டுவந்து நிஷாவுடன் புது வாழ்க்கை ஆரம்பிக்க வந்தான். இப்பொழுது ஏன் அப்படி வந்தோம் என்று வருத்தப்படுகிறான்.

“இவளை ஏன்தான் கல்யாணம் பண்ணமோ ” மனதிற்குள் புலம்பிக்கொண்டே வண்டியில் கொஞ்சம் காற்று வாங்கிக்கொண்டே கடைக்கு சென்றான். காற்றுவாங்கிக்கொண்டே இருசக்கரவாகனத்தை ஓட்டுவதில் சிலசமயம் மனஅழுத்தம் குறையுமானுக்கேட்டா? குறையும்னு நெனச்ச குறையும் குறையாதுனு நெனச்சா குறையாது.

அன்னை ஸ்டோர்ஸ் அடைந்தான் கார்த்தி.

“அண்ணாச்சி , வேளாங்கன்னி போயிவந்திங்கலாமே” கார்த்தி கேட்டான்.

“ஆமாங்க, புனித ஆரோக்ய அன்னை தரிசிச்சிட்டு வந்தோம்” அண்ணாச்சி சொன்னார்.

“நாலு நாளா காணோம், பயங்கர பக்தியோ”

“அன்னை ஸ்டோர்ஸ்-னு சும்மா பேரு வெக்கலை, பதினோரு நாள் திருவிழா மூணு நாள் தான் இருக்கமுடிஞ்சது” அண்ணாச்சி சில்லறையை கல்லாப்பெட்டியில் போட்டார், ஆரோக்ய மாதா படத்தை தலைஉயர்த்தி பார்த்தார்.

“குடும்பத்தோட போயிருந்திங்க போல” கார்த்தி கேட்டான்.

“ஆமா தம்பி, வைஃப்பு, பசங்க எல்லாம் போனோம், பசங்க ஒரே ரகளை. மனைவி கிட்ட வாங்காத திட்டு இல்லை” அண்ணாச்சி சொன்னார்.

“எல்லா இடத்துலயும் இதே பிரச்சனை தானே” கார்த்தி சொன்னான்.

“என்ன தம்பி, காலையுலயே தங்கச்சி சூடுபோட்டு அனுப்புச்சோ” அண்ணாச்சி கேலி செய்தார்.

“ஆமா அண்ணாச்சி, தினம் சண்டை-ணே அவசர அவசரமா ஏதாவது வேலை செய்யவேண்டியது அதுக்கு என்னைய புடுச்சி சித்தரவதை பண்ணவேண்டியது. ” கார்த்தி கதறினான்.

“அட என்ன தம்பி மனைவிகளோட உலகமே தனி அத புரிஞ்க்கறது கஷ்டம் ஆனா வாழறது சுலபம்” அண்ணாச்சி சொன்னார்.

“என்ன சொல்றீங்க அண்ணாச்சி, ஒன்னும் புரியல” வியப்புடன் கார்த்தி கேட்டான்.

“பொண்டாட்டி எப்பவும் சரியாதான் சொல்லுவா அப்படின்னு நம்பி இருங்க பிரச்சனை வராது. இப்போ காலைல தங்கச்சி கடைக்கு அனுப்பிடுச்சினு தான கோவம் உங்களுக்கு. நீங்க இதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு விஷயத்துக்கு சண்டை போட்டிருப்பிங்க அதுக்குதான் இப்போ இங்க நிக்கிறிங்க” என்று அண்ணாச்சி சொல்லிவிட்டு கொள்ளை பொட்டளம் மடித்தார் “இதோ இந்த கொள்ளு ஒரு மாசமா கேட்டு கேட்டு இப்போதான் கெடச்சது , தங்கச்சிக்காக மட்டுமே வாங்குனது. உங்க அம்மா செய்யற மாதிரி கொள்ளு ரசம் கேட்டிங்கனு தங்கச்சி சொல்லுச்சு”

நெய்யும் கொள்ளும் மற்றும் கடைக்கு வருவதற்கு முன் மெசேஜ்-ல் வந்திருந்த மேலும் நாலு பொருளும் வாங்கிவந்தான்.

“என்ன சொல்றாரு அண்ணாச்சி ஒன்னும் அகப்படலியே ” கார்த்தி யோசித்து கொண்டே வண்டியை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான்.

வண்டி மேலும் மென்மையானது அவர்கள் காதல் நாட்களின் பக்கங்கள் நினைவுக்கு வந்தது. நிஷா பள்ளி முதல் வேலை பார்க்கும் வரை ஹாஸ்டலில் தங்கியவள் . பெரும்பாலும் நண்பர்களுடன் இருந்தாலும் அவளுள் ஒரு தனிமை இருந்துக்கொண்டே இருந்தது. திருமணத்திற்கு முன்பு நிஷா குடும்பமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லி கொண்டேயிருப்பாள். பள்ளி காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை அப்பா அம்மாக்காக காத்திருக்கும் நாட்களை பற்றி சொல்லும்போது அவள் மட்டுமல்ல அவனும் கண்கலங்குவான். கார்த்தி வீட்டை விட்டு வரும் போது அதிகமாய் கவலைப்பட்டது நிஷா தான். பெற்றோருக்கு காத்திருக்கும் பள்ளி கால நிஷாவின் முகம் நியாபகம் வந்தது. கார்த்தி மனம் தளர்ந்தது.

சட்டென்று கார்த்திக்கு சம்மந்தப்பட்ட அந்த நாள் நினைவுக்கு வந்ததது.

“ஏண்டி பொங்கல்-ல நெய் ஊத்தியிருக்கலாம்-ல ” கார்த்தி சொன்னான், லேசான காரத்துடன்.

“இல்ல டா, நெய் கம்மியா தான் இருந்தது அதான் இருக்கறத வெச்சி தாளிச்சேன்.” நிஷா சொன்னாள்.

“பொங்கல் டேஸ்ட்டே வரல, முன்னவே சொல்லி இருந்தா வாங்கிட்டு வந்திருப்பேன்ல” கார்த்தி அதட்டலாய் சொன்னான்.

“இப்போ சொன்னா அதுக்கு ஒரு சண்டை வரும் அதனால தான் சொல்லல” நிஷா சொன்னாள்.

“பொங்கலுக்குனு சொன்னா வாங்கிட்டு வந்திருப்பேன்” கார்த்தி சொல்லிவிட்டு தேங்காய் சட்னி-யில் பொங்கலை மேலும் குழைத்து வாயில் போட்டவிட்டு வடையை எடுத்தான்.

கார்த்திக்கு நினைவு வர கொஞ்சம் அவனையே கடிந்து கொண்டான். தன் வாயாலேயே தான் அகப்பட்டதை நினைத்து சிரித்தும் கொண்டான். சரி, அவகிட்ட முறைச்ச மாதிரியே இருப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு, தான் சமாதானம் ஆகிவிட்டதை மறைக்க நினைத்தான். கைதேர்ந்த கணவர்களுக்கு தெரியும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று.

வீட்டிற்கு வந்தான் நிஷா தாளிக்க தயாராகி இருந்தாள் அவனை அல்ல பொங்கலை.

“எதுக்கு மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு இருக்க ?” கார்த்தி கேட்டான் நிஷாவிடம் பதில் இல்லை.
“ஹே பேசுடி ” கார்த்தி கத்த ஆரம்பித்தான்.

கரண்டி டணார் என்றது. “கடைக்கு போறப்போ சமாதானமா பேசுன இப்போ என்ன? பேசு” கார்த்தி கேட்டு கொண்டே நிஷாவை அணைத்தான். அவன் ஜம்பம் பலிக்கவில்லை என்று புரிந்து கொண்டான்.

“எதுக்கு நா எதாவது சொல்ல சார் வண்டி முறிக்கிட்டு போவிரு , நீ கோவத்துல ஓட்டி எதாவது லாரில வண்டிய பார்க் பண்ணிட்டா என்னோட நிலமை ? உனக்காகத்தானே நெய் வாங்கிட்டு வர சொன்னேன்” நிஷா சொன்னால் கொஞ்சம் அவன் மேல் சாய்ந்தவாறு.நெய்யையும் கொள்ளையும் கணக்கில் விடுத்து வாங்கி வந்த மீதி நான்கு பொருள் என்ன கணக்கு என்று கார்த்திக்கு புரியவில்லை ஆனால் அண்ணாச்சி சொன்னது நினைவுக்கு வந்தது.

“பொண்டாட்டி எப்பவும் சரியாதான் சொல்லுவா அப்படினு நம்பி இருங்க பிரச்சனை வராது. நீங்க இதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு விஷயத்துக்கு சண்டை போட்டிருப்பிங்க அதுக்குதான் இப்போ இங்க நிக்கிறிங்க”

அண்ணாச்சி ஏன் மூன்று நாள் வேளாங்கண்ணி போனார் என்று யாருக்கு தெரியும்.

***முற்றும்***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *