களத்துமேடு : அத்தியாயம் 2

அத்தியாயம் 2

எழுத்து : அரன்

வண்ணங்களின் வகைகளை விட சந்தர்ப்பங்களில் மனித மனங்களின் சிந்தனைகள் மிக அதிகம். சில ஆக்கும், பல அழிக்கும்.
உள்ளப் புழுக்கத்தில் உருண்டு புரண்ட செங்காளைக்கு, உடலின் சோர்வு, சிந்தனைக்கு தெரியவில்லை. அடித்துப் போட்டவாறு இசக்கி ஒரு பக்கம் உறங்கிப்போயிருந்தான். 


பிராங்கோட்டை. பாளையக்காரர்களின் நாட்டம் கொண்ட பூமி. ஜீவநதியின் பொன் கொஞ்சலும், தெற்கே சில மைல்களில் முக்கூடலும் கொண்ட தங்கத்திருமேனி நிலங்கள்.
‘எப்பா ஏ எசக்கி…  விடியப் போது பா எழுந்தரி.’ இசக்கியை உசுப்பினான் செங்காளை. 
ஓடையில் கொஞ்சம் முகம் நனைத்து, அதை ஒட்டியே நடந்தார்கள்.
‘ஊருக்குள்ள என்னாச்சினே தெர்ல. இப்படியே கொஞ்சமா நடந்து, மதகுக்கு போயிருவோம். அப்புறம் வாய்க்கா பக்கம். நேர நடந்தா மெயின் ரோடு. வெரசா நட, போவோன். ‘ இசக்கி சொல்லிக்கொண்டே நடந்தான்.
செங்காளை பெரிதாக ஏதும் சொல்லவில்லை. அவன் மௌனமே கதி தான். இருவரும் மதகு கடந்து வாய்க்கா கடந்து ரோட்டுக்கு வந்தார்கள்.


புதிதாய் முளைத்த கோரைப் புற்கள் சாலையோரம் பரவிக்கிடக்க, காகங்களே கரைந்து பறந்திருக்க ஊரை நோக்கி நடந்தார்கள். 
மேள தாளத்தோட கூத்தாடிருக்க வேண்டிய ஊரு. பச்சை ஓலை பின்னலோடு பாடை செய்து கொண்டிருக்குதோ. பாதங்கள் தானாய் செல்ல, யோசனைகள் துரத்த, பயம் ஆட்கொள்ள பெருமூச்சு விட்டான் செங்காளை. 
‘யெண்ணோவ்… யெண்ணோவ்’,  பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி வந்தான் சுடலை.
வீங்கிய கண்களும், அதில் சுரக்கும் நிறைய கண்ணீரும் சாலை நனைக்க வந்தவன், வந்ததும் செங்காளையை கட்டிக்கொண்டு அழுதான். 
‘வந்து பொன்னியக்கா கோலத்த பாரு ண்ணா..’
செங்காளை வயிற்றில் அவன் தலை சோகம் கொள்ளாது முட்டித் தீர்த்தது.


———-×××—××—×××———


‘ஏத்தா பொன்னி, இந்த சுடல சனியன பாத்தியா? வயசு பதினாலுக்கு மேல ஆனதும் வீட்லயே இருக்கமாற்றாரு துர… அவிய அய்யா வரட்டும், புட்டதுலயே பத்து போட சொல்றன்’, தேங்காய் நாறுடன் மகனை தேடி வந்தாள் சுகந்தி. 
‘சுடல சாமி தான. சாயங்காலம் னா கோயில் போய் கும்பிடுதிய… இப்போ சனியங்கிய… என்ன கத’, சிரித்தாள் பொன்னி.
‘வந்துருவியே உடனே. கூப்பாடு போட்டாலும் உங்கிட்ட பேசி செவிக்க முடியாது மா. என் மவன பாத்தியா, அத மட்டும் சொல்லு. நக்கல் லாம் அந்த நாய பிடிச்சு நாலு போட்ட அப்புறம் வச்சிப்போம்’ 
‘அந்தா.. அந்த உலகம்மன் கோயில் பக்கந்தான், புதுசா பாட்டு மைக் செட் வச்சிருகாணுவோ. அங்க தான் ஆடிட்டு இருப்பான். நீங்களும் போய் கொஞ்சம் பாத்துட்டு வாங்க’
உடுத்தியிருந்த கருப்பு தாவணியை, நீல பாவாடைக்குள் லாவாக திணித்து வீட்டிற்குள் நடந்தாள் பொன்னி.
பக்கத்தில் கிடந்த முருங்கைக்குச்சியை எடுத்தாள் சுகந்தி. 
‘வாரன் டா கூத்தாடி பயலே.’ எரிச்சலில் மைக் செட் பக்கம் நடந்தாள்.


 ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே.. எந்தத் தோட்டவும் என்ன துளைக்காதே… அண்ணாத்த ஆடுறார்..
குதூகலமாக ஆடி ஆர்ப்பரித்த்துக்கொண்டிருந்தான் சுடலை. அம்மா வருவது தெரியவில்லை. அவள் வாங்கி வர சொன்ன நாட்டுவெல்லமும், நல்லெண்ணையும் மறந்துப்போயிருந்தது. 
அண்ணாத்த ஆடுறார்… ஒத்திக்கோ ஒத்திக்கோ.. தென்னாட்டு வேங்கைதான்.. 
ஆடிக்கொண்டிருந்த சுடலைக்கு புட்டத்தில் சுளீரென்றது. பட்ட அடியின் உணர்வு தெரிவதற்குள் அடுத்து ஒண்ணு. திரும்பி பார்த்தவன், குதித்துத் தெறித்தான் வீட்டுக்கு.

ஆடிக்கொண்டே நானும் போனேன் தந்தனந்தோம்…ஆத்தா அடியில் மிரண்டும் போனேன் தந்தனந்தோம்…சாக்கில் வைக்கோல் சொர்க்கப்போனேன் தந்தனந்தோம்…சந்தடி சாக்கில் கதிர்த் தண்டு தின்னேன் தந்தனந்தோம்…
வைக்கோல் மேல் ஏறி, இரு கால் பாய்ச்சலில் துள்ளினான் சுடலை.


நெல்வாடைகள் – பகுதிகளாக தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *