எங்கிருந்தோ வந்த மாமா

ஈரோட்டுக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் ஊர் பாசூர், பாசூரின் பெருமை பாசூர் அணை தான். பொங்கிவரும் காவேரி என்று சும்மாசொல்லவில்லை மழைக்காலத்தில் நிஜமாகவே பொங்கிவரும் காவேரியை பாசூர் அணையில் சிறிது வேகம் குறைத்து கரூர் நோக்கி அனுப்பப்படும். நள்ளிரவில் அணைமேல நின்னு நிலா ஒளியில் தனியாக நின்று பார்த்தால் பேரோலமிடும் நீரோட்டம்,கொள்ளளவை கண்களால் காணமுடியாது ஆனால் மனதால் உணர்ந்து பயம் தலைக்கேறும்.

இருட்டில் ஆக்ரோஷ காவேரியை காண்பது எவ்வளவு மனதளவில் கடினமோ அதேபோல் தனி பெண்ணாக பிள்ளைகளை வளர்ப்பது நூறுமடங்கு கடினம்.

என்னுடைய அம்மா தனியாத்தான் என்னை வளத்தாங்க. அப்பா விட்டுட்டு போயிட்டாருனு ஒடஞ்சி உக்காராம, குறையே தெரியாம வளத்தாங்க. சொந்தகாரங்க வழக்கம்ப்போல தேவையுங்கறப்போ ஆள காணோம். என்ன தைரியமான ஆளா எங்க அம்மா இருந்தாலும் எனக்கு கல்யாணமுங்கறப்போ கொஞ்சம் பதட்டம் ஆயிட்டாங்க, பதட்டம் இருந்த போதுமா கலாட்டா வேண்டாமா, வீடே போர்க்களம் ஆயிடுச்சு என்னோட காதல் விஷயம் சொன்னப்போ!

அதுவரைக்கும் யாரோவா இருந்த சொந்தமெல்லாம் முக்கியமானவங்க ஆயிட்டாங்க , அதுவரைக்கும் எங்க அம்மா இருக்காங்களா இல்லையான்னு கண்டுக்காத ஊரு இப்போ எங்க வீட்டு நியாயத்தை பேசணும்னு எங்க அம்மாவே சொல்றாங்க. அதைவிட பெரியப்பிரச்சினை இந்த பஞ்சாயத்து செய்ய வர்ற மாமா தான். அவரை பார்த்து பல வருஷம் ஆகுது, அப்பா கூட இருந்தப்போ அப்பப்போ வருவார்.நெனைச்சா இப்போவும் சிரிப்பு வரும்.

நாங்க 90’ஸ் கிட் , அக்மார்க் 1990 ல பொறந்த 90’ஸ் கிட். அப்போ இருந்த ஒனிடா கலர் டிவிக்கும் எனக்கும் அப்படி ஒரு ராசி. நானும் என்னோட தம்பியும் பக்கத்து ஸ்கூல் கிரௌண்ட் ல விளையாடிட்டு வளையாத கைப்பிடி பாளை வெச்ச சைக்கிள் தம்பியோடது. வளைந்த கைப்பிடி பாளை, அகலமான இருக்கை , பின்பக்கம் பாத்திர வியாபாரிகள் வெச்சிருக்கும் பெரிய பொதி பிடிப்பி கிட்டத்தட்ட இருவது வருஷம் முன்னாடி வாங்கின என்னோட தாத்தா சைக்கிள் அப்போவும் நல்ல கண்டிஷன்ல இருந்தது. சைக்கிள்களை வீட்டு முன்னாடி நிறுத்திட்டு வெளிய எங்க வீட்டுக்கு பழக்கம் இல்லாத புது செருப்பை பாத்துட்டு உள்ள போனா எங்க மாமா உக்காந்துகிட்டு இருக்காரு. அவரு வாங்கிட்டு வந்திருந்த ஜாங்கிரி – இப்போ எப்படி கஜூ கட்டிலியோ அப்போ ஜாங்கிரி. அதுவும் இப்போ மாதிரி சக்கரை மேல தெரியுற அளவுக்கு காஞ்சியிருக்காது, ஒரு மாதிரி நல்லா ஊறி சப்புடறப்போ தான் ஜீராவே உணரமுடியும். அரை கிலோ பூந்தி மிக்ச்சர், கலவையா சில பழங்கள். பாத்ததும் படார்னு கை போயிடுச்சி எடுக்க, வழக்கம் போல அம்மா கிட்ட திட்டுவாங்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சோம் . தம்பி டிவியை போடவும் நகைசுவை காட்சி போயிகிட்டு இருந்தது.

“ஏன்டா சொந்தகாரங்க தொல்ல தாங்கமுடியாமத்தாண்டா எட்டு கிலோமீட்டர் தள்ளி வந்து நடுக்காட்ல வீடு கட்டியிருக்கேன், உங்களுக்குக்கெல்லாம் பஸ்-சு எப்பிட்ற கிடைக்குது” கௌண்டமணி சொல்ல எனக்கும் தம்பிக்கும் சிரிப்பு தாங்கல. அம்மா சட்டுனு சேனல் மாத்திட்டாங்க , மாமா அசடுவழிஞ்சி பேச ஆரம்பிச்சார். மாமா கதை சொல்ல ஆரம்பிச்சா அடேய்யப்பா, அவருக்கும் M.G.R-க்கும் தொலைபேசி தொடர்புயிருக்குனு அள்ளிவிடுவாறு. அம்மா அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு அக்கா காதல் கல்யாணம் பண்ண விஷயத்தை சொல்ல மாமா கொந்தளிச்சிட்டாரு, பழமைவாதம் , பாசாங்குத்தனம் எல்லாம் கலந்து பெரிய உரையே நிகழ்த்திவிட்டார். அட உரை நிகழ்த்ததின பரவால்ல என்ன பார்த்து நம்ம வீட்டு பசங்க அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்கன்னு என்னை இழுத்துட்டாரு, வம்பா போச்சேன்னு எந்திரிச்சிப்போயிடலாம்ன்னு நினைச்சேன் ஆனா மாமா வாங்கி குடுத்த மிக்ச்சர் , ஜாங்கிரி தட்டுல இருக்க குற்றஉணர்ச்சில போகவும் முடியல. நம்ம டிவி “செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா” பாட அமைதியா இருந்தோம் நானும் என் தம்பியும்.

எங்க அப்பாவும் வந்துட்டாரு , மாமாவும் அப்பாவும் பேசி பேசி நா காதலிச்சா என்ன கௌரவ கொலைபண்ற அளவுக்கு கொண்டுவந்துட்டாங்க. இப்போ அப்பா கூட இல்லங்குறதும் ஒரு வகைல மகிழ்ச்சிதான். இப்படியாப்பட்ட மாமா தான் நாளைக்கு வரார். இப்போவே மொபைல் வால்பேப்பர்-யை மாத்திட்டேன். நாளைக்கு போன் கால் எதுவும் வரக்கூடாதுனு உத்தரவு

மறுநாள்

மாமா சரியா காலைச்சாப்பாடுக்கு அத்தையை கூட்டிகிட்டு வந்தாரு. இது என்ன வம்பாப்போச்சின்னு நினைச்சேன், அத்தையும் மாமாவும் அம்மாவை பார்த்துட்டு அப்படியே என்னைப்பார்த்தாங்க, இப்படியே அஞ்சு நிமிஷம் போச்சு. தம்பி இந்த நிசப்தம் தாங்காம டிவி-யை வெச்சான்.டிவில “மூணு பெரு வந்தாலே சமாளிக்கமுடியாது முந்நூறு பெருகிட்ட கோத்துவிட்டுப்போயிட்டானே. ஐயோ அங்க பாத்துட்டு அப்படியே நம்மல பாக்குறாங்களே கிரிகாலா உடம்ப இரும்பாக்கிகோடா, அட மழை ஆரம்பிச்சி வெளுத்து வாங்கப்போகுது” வடிவேலு சொல்ல அம்மா ஆரம்பித்தார்.

“அண்ணே , என்ன காரியம் பண்ணிட்டான் பாருங்க . வீட்டுக்கு தலச்சன் இப்படி இருந்தா எப்படினே ” அம்மா ஆக்ரோஷமா சொன்னாங்க.
“அட ஊர்ல யாரு காதல் பண்ணல, விவரமான பையன் நல்ல முடிவு தான் எடுத்து இருப்பான்.” மாமாவிடம் எதிர்பார்க்காத பதில் வந்தது எனக்கு ஆச்சர்யமோ இல்லையோ அம்மாவுக்கு தான் தன் பக்கம் யாரும் இல்லையோ-னு வருத்தமா போச்சி.

“நம்ம சிவகுமார் இருக்காருல ” மாமா சொன்னார். “யாரு தலையாறியா ?” அம்மா கேட்டாள்.

“அட சூர்யா அப்பா சிவகுமார் மா ” மாமா உரிமையா சொல்ல அம்மாவும் ஹ்ம்ம் கொட்டினாங்க.

“அவர் அவரோட பையன் முடிவுக்கு சம்மதம் சொல்லலியா. அத விடு பக்கத்து வீட்டு பொண்ண வெளிய பார்த்தேன் சந்தோஷமா இருக்காள். சில சமயம் நாமளும் உலகத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் போகணும். நாம சொல்றதுதான் கேக்கணும்னு இல்லை” மாமா சொல்லி முடித்தார். M.G.R -யை இழுப்பாருன்னு நினைச்சேன் ஆனா இல்லை. எங்கிருந்தோ வந்த மாமா எதிர்பார்க்காதவிதமா என் காதல் கல்யாணம் நடக்க காரணம் ஆயிட்டாரு. மாமா கிளம்புறப்போ “எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும், தாந்தான் முதல் ஆளா இருக்கக்கூடாதுன்னு தான் நிறைய பேர் வருத்தம்” சொல்லிட்டு கல்யாணத்த முன்னாடி நின்னு
நடத்தலனாலும் பெரிய உதவிய இருந்தாரு.

6 மாதம் கழித்து

மாமாவோட பொண்ணுக்கு காதல் கல்யாணம்ன்னு தொலைபேசில அம்மா சொன்னாங்க. நானும் என் மனைவியும் அங்கதான்போறோம்.

4 thoughts on “எங்கிருந்தோ வந்த மாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *